நீட் தேர்வு - சோதனையும் வேதனையும்
செய்தியதை நாளிதழில் வாசித்தேன்
காட்சியைக் காணொளியாய் கண்டேன்
மருத்துவம் படிக்க நுழைவுத் தேர்வாம்
தகுதியை நிரூபிக்கத் தகாத முறையில் !
புதுமுறை சோதனை புதிய சாதனை
ஆடையைக் கிழித்து அலங்கோலம்
தோடுகளை கழற்றி பாடாய் படுத்தி
முழுக்கைச் சட்டை வெட்டியெடுத்து
அணிகலன்களை அறவே அகற்றல்
கைகடிகாரம் அணியவும் தடை !
எழுத சென்றவர் அழுது தீர்த்தனர்
பொங்கி எழுந்தனர் இருபாலினமும்
தூண்டி விட்டவர் துயில்கொள்ள
வேண்டியவர் சுற்றி வேடிக்கை பார்க்க
பரிதாப நிலையில் நாளைய சமுதாயம் !
பாரெங்கும் தேர்வுகள் நடந்தாலும்
வேறெங்கும் நிகழாத அவலமிது
தரமற்ற செயலன்றோ தரணியில் இது
கேட்பதற்கு எவருமிலா காரணத்தால்
கேடுகெட்டுப் போனது அதிகாரமும் !
இணையவில்லை இதற்கும் இங்கே
இதயமில்லை இணைந்துப் போராட
அமைதிப் பூங்கா ஆயிற்றே தமிழகம்
அடங்கிப் போகிறது இதிலும் இன்று
மறையுமா சோதனையும் வேதனையும்
மகிழ்ந்திடுமா மனமும் நாடும் ....
பழனி குமார்