இன்னொரு கவிக்கோ வருவாரா

மண்ணில் மங்கிய கவிதையினை
விண்ணில் ஏற்றி உயிர்கொடுக்க
நுண்ணிய கவிஞர் யாவரையும்
கண்ணிய இறைவன் சேர்க்கின்றான்!!

என்னை வளர்த்த கவிதைவளம்
என்ன தல்ல இவர்களது!
கண்ணீர் சிந்த இயலவிலை
கவிதை விக்கி அழுகிறது!..

புத்தகம் செய்ய புறப்பட்டேன்
புத்தியில் உதிக்கும் கவிதைகளை
அத்தகு தகுதி இல்லையென
அறிந்தேன் இவர்களின் பெருந்திறனால்!
முத்தமிழ் ஆய்ந்திடும் முதுபுலமை
முற்றிய மூத்தவர் வரிசையிலே
சிற்றறி வோடு நின்றிடவென்
சிந்தனை எப்படி சம்மதிக்கும்?!

இப்படி எண்ணி நான்நிற்க
இருக்கும் நல்ல கவிஞர்களை
எப்படி அழைத்திட தோன்றியதோ?!..
என்னரும் இறையின் நாட்டமிதோ?!
செப்படி வித்தையில் வார்த்தைகளை
செழும்பொருள் கொண்டு மின்னவைக்கும்
ஒப்பரும் கவிஞர்கள் மறைவினிலே
ஒழிவது தமிழன்றி வேறிலையே!!

இன்னொரு ரகுமான் எமக்கிங்கு
இசைவது இனியும் எக்காலம்?!
தன்னிக ரில்லா தமிழ்க்கவிதை
தழைப்ப திங்கு எக்காலம்?!
முன்னிலை நில்லா முறையினிலும்
முழுதாய்க் கவிதை கற்பிக்கும்
என்மனக் குருவாய்த் திகழ்ந்தாரே!
ஏகலை வன்நான் ஏங்குகிறேன்!!

அ.மு.நௌபல் எ அபி

எழுதியவர் : அ.மு.நௌபல் எ அபி (2-Jun-17, 10:38 pm)
பார்வை : 570

மேலே