தமிழா தமிழ் தா

தமிழா தமிழ் தா

தமிழ் இலக்கியக் காளைகள்
துள்ளி வெளிவரும் வாடிவாசல்!

நேசிப்போர் தழுவிக்கொள்க!
யோசிப்போர் பழகிக்கொள்க!!

இணைய மேய்ச்சலில் இணங்கியே
வளைய வருவோம் நம் வாசலில்!

பிணையக் கைதிகளாய் பிறமொழிகள்
பெயர்த்ததை மராமத்து செய்திடுவோம்!

இலக்கிய பிணக்குகளை புறந்தள்ளி
ஏற்றி வைப்போம் தமிழ் தீபம்!

உலுக்கிய கொடுமைகளை தமிழர் பிஞ்சுகள்
அகழ்வாராய்ச்சியில் அறிந்து கொள்ளட்டும்!

செந்தூர வானின் சிவந்த இதழ்களை
கொஞ்சம் கொய்துவிட்டு போகட்டும்!

நிலாமுற்ற நெடுநாள் தவங்களில் காதல்
உலா வந்து விலா நோகட்டும்!

பலாக்கனி சுவைத்தேனில் பாலும் பழமும்
துழாவி விழாக்கோலம் பூனட்டும்!

சிந்தனைச் சிறகுகளை நமக்குப் பூட்டி
இலக்கிய வானில் உயர பறப்போம்!

காதல் கொள்கிற வனப்புச் செழிப்புகளில்
மோதல் பொய்த்து விட்டுப் போகட்டும்!

கொடுவா மீசையும் அருவாப்பார்வையும்
கொடுங்கோன்மை தவிர்த்து குதூகலிக்கட்டும்!

நெடுநாள் கயமையும் வடுவின்றி மறையட்டும்!
குறைவிலா நிறைவாய் வாழ்வு மலரட்டும்!

எழுதியவர் : (7-Jul-17, 11:01 am)
சேர்த்தது : ரவிபாரதி
பார்வை : 287

மேலே