காரணமின்றி எதுவும் நடப்பதில்லை - அறிவியல் கதை

காரணமின்றி எதுவும் நடப்பதில்லை - அறிவியல் கதை

அறிவியல் போதிக்கும் அவியல் கதை...

அறிவியல் போதிக்கும் கணக்கு வழக்கற்ற நூல்கள் இருந்தாலும் அனுபவ அறிவியலே சுவாராஸ்யமானது.

வேலுச்சாமி ஒரு அறிவியல் ஆசிரியர்..
கிட்டதட்ட 15 வருடங்களாக ஆசிரியர் பணியில் சிறப்பாகப் பணியாற்றி வருகிறார்...
அவருடைய மாணவர்களில் நானும் ஒருவனாக இருந்தேன் என்ற எண்ணமே மகிழ்ச்சிகரமானது...
ஐந்தாம் வகுப்பு படிக்கும் போது, அவர் எனக்குப்பாடம் எடுத்தார்...

ஐந்தாம் வகுப்பு வரை மக்கு, முட்டாளாக இருந்த எனக்கு அவர் விதைத்த அறிவியல் ஆர்வம் மிகவும் சுவாராஸ்யமான, அரிய அனுபவம்...

முதல்நாள் அறிவியல் பாடம் தொடங்கும் போது, அவர் மாணவர்களைப் பார்த்து, " அறிவியல் என்றால் என்ன? ", என்று கேட்க மாணவர்கள் அனைவரும் அமைதியாக இருந்தோம்...
அதைக்கவனித்த அவர், " தம்பி சிவா நீ சொல்லுடா. அறிவியல் என்றால் என்ன? ", என்று கேட்க, நான் அறியாதவனாக, " வீட்டுல அம்மா இட்லி அவிப்பாங்களே! அதானே சார். ", என்றிட மற்ற மாணவர்களெல்லாம் விழுந்து, விழுந்து சிரிக்க,
வேலுச்சாமி சார் அனைவரிடம் அமைதியாக, " ஏன் சிரிக்கிறீர்கள்? சிவா அருமையாக கூறினான்.
அம்மா இட்லி அவிக்கும் போது பார்த்து இருக்கீங்களா? அடுப்பின் மேல் பாத்திரத்தின் அடியில் தண்ணீர் இருக்கும். அதன் மேல் இட்லி தட்டுவைத்து அதன் வெள்ளைத் துணியை விரித்து, குழிகளில் ஊற்றிய மாவு எவ்வாறு அவிகிறது? என்று தெரியுமா? ", என்றிட மாணவர்கள் அனைவரும் ஒருவரை ஒருவர் பார்த்து விழித்திட நானும் விழித்தேன் அறிவியல் அறியாத மூடனாய்...

அதைக்கவனித்த வேலுச்சாமி சார், " அடுப்பில் எரியும் நெருப்பின் தாக்கத்தால் பாத்திரத்தின் அடியில் உள்ள நீர், வெப்பம் மிகுந்த நீராவியாக மாறி மேலெழும்புகிறது..
இட்லி தட்டின் குழிகளில் உள்ள துளைகள் வழியாக நீராவி வந்து வெள்ளைத் துணியின் மீதுள்ள மாவை அவித்து இட்லியாக மாற்றுகிறது... இப்படி மனிதனின் ஒவ்வொரு செயலுக்கும் நடைபெறக் காரணமாக அமைவது அறிவியல்...
உங்களுக்கு புரியும்படி சொன்னால் அறிவியல் என்பது அறிவார்ந்த விளையாட்டு... ", என்றிட நான் உள்பட அனைத்து மாணவர்கள் முகத்திலும் அறிவியல் ஒளி பிரகாசிக்க ஆரம்பித்தது...

நான் அதோடு விடவில்லை. அவரிடம் மேலும் கேள்விகள் கேட்க ஆரம்பித்தேன்...
முதல் கேள்வியாக,
" சார், நெருப்பு சூடும். ஆனால் பாத்திரத்தின் மேலுள்ள நீர் எப்படி கொதித்து நீராவியாக மாறி மாவை அவித்து இட்லியாக்குகிறது? ", என்றேன் அறிவியலை அறியும் ஆவலில்...

அதைக்கேட்டு புன்னகைத்த வேலுச்சாமி சார், " நல்ல கேள்வி சிவா. இந்த சாக்பீஷ்(சுண்ணாம்புக்கட்டி)-ஐப் பார்த்தாயா? இதை உடைத்தால் சிறு துகள்களாக மாறுகிறது பார்த்தாயா? காரணமென்ன இது சாக்பீஷ் சிறு துகள்களால் ஆனது. அதே மாதிரி இந்த உலகில் எல்லா பொருட்களும் அணுக்களென்னும் நுண்ணிய கண்ணிற்குத் தெரியாத துகள்களால் ஆனது..
அடுப்பில் எரியும் விறகு விறகும் துகள்களால் ஆனது தான். விறகு எரிந்த பிறகு சாம்பலை பார்த்தாயா?. ", என்றிட, நான், " ஆம் சார். ", என்றிட அவர் மேலும் தொடர்ந்து, " விறகின் துகள்களில் எரியும் நெருப்பின் வெப்பம் பாத்திரத்தில் படும்போது அந்த வெப்பம் பாத்திரத்தின் நெருக்கமான அணு(துகள்)க்களால் கடத்தப்பட்டு பாத்திரத்தின் அடிப்பாகம் முழுவதும் பரவி, பாத்திரத்தில் உள்ள நீருக்குக் கடத்தப்படுகிறது.
அதனால், நீரில் உள்ள நெருக்கமில்லா துகள்களுக்கு ஒரு முடுக்கவிசையை உருவாக்குகிறது. அந்த முடுக்குவிசை நீர் முழுவதும் பரவும் போது நீர் கொதிக்கிறது. அப்படி கொதிக்கும் போது நீர் திரவ நிலையில் இருந்து வாயு நிலைக்கு மாறுகிறது.
அப்படி மாறிய நீராவி பாத்திரத்தைவிட்டு வெளியே வர முற்படுகிறது. அதற்கு வழியில்லாததால் இட்லித் தட்டு குழிகளில் உள்ள துளைகள் வழியாக பாய்கிறது. அப்போது, தட்டின் மீது விரித்துள்ள துணியின் மீதுள்ள மாவுத் துகள்கள் நீராவியில் உள்ள வெப்பத்தால் அவிக்கப்படுகின்றது. இவ்வாறு இட்லி அவிக்கப்படுகிறது...
புரிகிறதா சிவா? ", என்றார். அதற்கு நான், " ஆம் சார். புரிகிறது. இட்லித்தட்டின் மீது ஏன் வெள்ளைத் துணி விரிக்கிறோம்? ", என்று கேட்டேன் அறிவு தூண்டப்பட்டவனாய்...

அதற்கு வேலுச்சாமி சார், " மாவு இட்லித்தட்டோட ஒட்டிக் கொள்ளாமல் இருப்பதற்காகத் தான்.
அதற்கு ஏன் தூய்மையான வெள்ளைத்துணி அதுவும் காட்டன் துணி பயன்படுத்துகிறோம் என்றால், மற்ற நிறங்களில் உள்ள துணிகளில் உள்ள நிறம் இட்லியில் ஒட்டிக்கொள்ளக் கூடாது என்பதாலும், பாலிஸ்டர் போன்ற துணிகளை பயன்படுத்தினால் இளகிவிடும் என்பதாலும் தான்.. இப்போது, உன் சந்தேகம் தீர்ந்ததா சிவா? ", என்றிட, அதற்கு நான், " ஆம் சார். பாலிஸ்டர் போன்ற துணிகள் ஏன் இளகி ஒட்டிக் கொள்கின்றன சார்?. ", என்று கேட்டேன்...

சற்று புன்னகைத்த அவர், " இன்றைய பாடவேளை முடிந்தது சிவா. உன் அறிவுபசியை இன்னும் அதிகமாக்கு.. இந்த கேள்விக்கான விடையை நாளை சொல்கிறேன். ", என்றார் அன்போடு...

அத்துடன் அன்றைய வகுப்பு பாடவேளை முடிந்துவிட வீட்டுக்கு வந்ததும் என் தந்தையிடம், " அப்பா. நான் இன்னைக்கு இட்லி எவ்வாறு அவிக்கப்படுகிறது? என்ற அறிவியல் விளக்கம் கற்றேன். ", என்று அன்று வகுப்பில் நடந்ததைச் சொன்னேன்...
அதைக்கேட்டு மகிழ்ந்த என் தந்தை, " இப்படித்தான்டா மகனே! நம்முடைய ஒவ்வொரு செய்கைக்கும் ஒரு காரணம் உண்டு. இதைப் போலவே அறிய முற்படு.. ", என்று எனது அறிவு கண்களைத் திறந்து வைத்தார்...

( எனது புதிய முயற்சியாக அறிவியல் கதையாக இக்கதையை எழுதி இருக்கிறேன். படித்துவிட்டு உங்களுடைய கருத்துகளை பதிவு செய்யுங்கள்..
மீண்டும் அடுத்த கதையில் சுவராஸ்சியமான அறிவியல் அனுபவத்தோடு சந்திக்கிறேன்...
நன்றிகள் அன்பு சகோதர, சகோதரிகளே.. :-) )


Close (X)

0 (0)
  

மேலே