அன்புத் தம்பியின் இழப்பில் கரைந்தவாறே

அன்புச் சகோதரா!.. #Mafasz மொதமேது

வாசித்துப் பார்க்கவோ
நீ இல்லையென அறிந்தும்
என் விழி சிந்தும் நீரை
'மை'யோடு கலந்து
எழுத்தில் வடிக்கிறேன்...

ஒரே தொப்புட் கொடியறுத்து
உன்னையும் என்னையும் இறைவன்
பூமியில் பிறப்பிக்காவிடினும்
வலிக்கிறது தம்பி, உன் பிரிவு...

நட்பையும் தாண்டிய
சகோதரப் பாசம் உன் மேல்...
வளர்ந்துவிட்டாயெனிலும் - உனக்குள்
எத்தனை எத்தனை குழந்தைத்தனம்...

அத்தனையுமே விட்டு - நீ
பாதிவழியிலே படைத்தவனிடம்
மீண்டுவிட்டாய்... - எப்படித் தாங்கிட
தம்பி உன் பிரிவை...

என் திருமண நிச்சயம் கூறவில்லையென
எப்படிச் சண்டையிட்டாய்!..
உன்னை மறந்துவிட்டதாய்க் கூறி
பொய்க் கோபம் காட்டினாய்!..

'திருமண அழைப்பிதழ் எனக்கும் தருவீரா?'
என்னைக் கேட்டாய் நீ அன்று...
நான் என்ன எண்ணி உரைத்தேனோ..,
'அதை நிச்சயமாய் கூறமுடியவில்லை' என்றே...

இனி அழைத்தாலும் உன்னை - நீ
வருகை தரமுடியாத் தூரம் போய்விட்டாய்...
ஆயிரமாயிரம் எதிர்பார்ப்புகள் சுமந்த
எத்தனை அழகானவன் நீ....

சின்னஞ் சிறு இடைவேளை விட்டு
என்றாவது ஒருநாள் அழைப்பாய்...
அதில் முதல் வசனம்
'தம்பியை மறந்துவிட்டீரா?'...

உன்னை எப்படி மறப்பேன்...
தம்பியாக மட்டுமின்றி - சிலவேளை
அண்ணணாகவும் வேடமிட்டு
வேடிக்கையாய் அறிவுரை கூறும்
அன்புத் தோழன் நீ...

உனக்காய் இறைவன் எழுதிவிட்ட வாழ்வு
இத்தனை சுருக்கமானதென அறியாமலே
'இறைவன் விதித்தது தான் நடக்குமெ'ன
என்றோ ஒருநாள் உரைத்தாய்!..

நீ விட்டுப் பிரிந்த பின்னால் - அத்தனையும்
மீளொலிபரப்பாகிறது சிந்தையில்...
புன்னகை பூசிய நிமிடங்கள்
கண்ணீர்க் குளிக்கின்றன தாளாமல்...

கடைசியாய் நீ அனுப்பிய குறுந்தகவலுக்கு
பதிலனுப்ப தவறிவிட்டேன்...
நீ விடைபெறுவதற்கான தருணம்
நெருங்கிவிட்டதென அறிந்திருப்பின்
தவறவிட்டிருப்பேனோ அன்று!..

நல்லவர்களை இறைவன்
தன்னிடம் மீட்டுக்கொள்வதில்
அவசரம் காட்டுவதாய்
பலர் கூறக் கேட்டிருக்கிறேன்..,
நீயும் அதிலே சேர்த்தி...

நிலையற்ற உலக வாழ்விலும்
நிலையான அன்பை சம்பாதித்த உனக்கு
மறுமையிலும் இறைவன் அன்பு கிட்டட்டும்...
உன் மண்ணறை ஒளி பொருந்தியதாகட்டும்!..

யா அல்லாஹ்!..
அன்புச் சகோதரனின்
பாவங்களை மன்னித்தருள்வாயாக!..
மேலான சுவர்க்க வாசல்களை
அவருக்காய் திறந்துவிடுவாயாக!..
ஆமீன்...

04 .04 .2017

எழுதியவர் : கவிப்_பிரியை_shah (22-Jul-17, 1:20 pm)
சேர்த்தது : Shahmiya Hussain
பார்வை : 96

மேலே