அவள்

ஒற்றை பார்வையில்
சிறைபிடித்தாய்
என் இதயத்தை…

தற்போது துடிக்கிறது
இதயம்
விடுதலை பெற அல்ல…
உன்னிடமே
என் உடல் பொருள் ஆவி
அனைத்தும் சிறைபட…

சிறைபட்டால் மட்டும் போதுமா?...
கடும் போட்டியே நடைபெறும்…
உனக்கு சேவை செய்திட
உடல் பாகங்களுக்குள்….

அவைகளின் அகராதிக்குள்
சேவைகளாவன (ஆசைகளாவன)

உன் அழகை
இரசிப்பதற்கு போதுமான
நேரம் கிடைக்கவில்லையாம்
என் கண்களுக்கு,
உன்னை காணும் போதெல்லாம்
கடவுளிடம் வரம் கேட்கின்றன
ஒற்றை கண் மூடி
தவமிருந்து….!

ஆக்சிஜன் தேவையில்லையாம்
என் சுவாச குழலுக்கு...
மூச்சிழுக்க மறுக்கின்றன
உன் வாசம் ஒன்றே போதுமென...!

வார்த்தை பிறழ்கள்
உருவாகின்றன எந்தன் நாவில்,
உச்சரிக்க மறுக்கின்றன வார்த்தைகளை
உன் பெயர் மட்டும் விதிவிலக்கு..!

பாலைவனமாக மாறியது
எந்தன் இதழ்கள்,
வேறெந்த நீரும் பருக மறுக்கின்றன
உந்தன் இதழ் நீரைத் தவிர...!

இணைசேரா போராட்டமாம்
விரல்களிடையில்,
இணைய மறுக்கின்றன
இணைக்கும் பாலமாக
உந்தன் விரல்கள் தான் நிபந்தனை...!

மற்றவர்கள் பேச்சை கேட்காமல்
செவிடாக மாறிய எந்தன் செவி,
ஏனோ துல்லியமாக அளந்தது
உந்தன் குரலை மட்டும்...!

இத்தனை நடந்தும்
என் தலை மட்டும்
எப்போராட்டமும் இல்லாமல்
தலைக்கனத்தோடு...
அத்தலைக்கனமும்
தோற்றது சில நொடிகளில்...

உன் மடி உரச
என் தலை சாய்த்து
உன் விரல்கள்
என் தலை கோத
சொர்க்கம் கண்டதும்....!!!

எழுதியவர் : அன்பா (3-Aug-17, 1:51 pm)
சேர்த்தது : அன்பா
Tanglish : aval
பார்வை : 219

மேலே