ஃ வரை நான் உனக்கு
பேச -
தவித்திருக்கும் நான்
தயங்கி நிற்கும் நீ
தவிப்புகளுக்கு முன்
தயக்கங்கள் தாக்குபிடிக்குமா ..!
தயக்கத்திற்கு காரணம்
வெட்கமா ..
இல்லை என்மீது ஏதேனும்
அச்சமா ..!
எனை பற்றி ஏதும்
அச்சம் கொள்ள வேண்டாம்
உன்னில் எதையோ
தினிக்க வந்தவன்
என எண்ணி விட வேண்டாம் !
எந்நிலையிலும் -
உன் சுயம் மாறாது
உன் சுதந்திரம் போகாது
நம்பலாம் இவனை ...
நான் களிமண்ணாகவே
உனை சேர வந்தவன்
உன் தேவைக்கேற்ப
எனை பிடித்து கொள்ளலாம் !
ஒரு காற்றை போலவே
உன்னை சேரும் இவனை
நீ விரும்பும் உருவத்தில்
நிரப்பிக்கொள்ளலாம் !
ஈன்றோர் கைகாட்டி
இதயத்திலிருந்து தலையாட்டி
உன்னவனாய் எனை மாற்றி
கொண்ட பின்னும் -
மௌனங்களை மொழியாக்கி
கொண்டவளே ..!
உலகத்திடம் பேச
இருவயதில் பழகியதை போல்
உன்னவனிடம் பேச -இந்த
இளவயதில் பழக வேண்டுமோ ..!
தயங்கியது போதும்
தடுமாறியாவது நீ
'அ' னாவை பேசு -
பிள்ளை போல அள்ளி அனைத்து
சொல்லி தர காத்திருக்கிறேன்
ஃ வரை நானுனக்கு ..!
- யாழ் ..