மனிதா
தேனீ சேர்த்த கூட்டைக் கலைத்து
தேனை எடுத்தவன் நீ!
கன்றுக் குரிய பாலைக் கறந்து
காசு சேர்த்தவன் நீ!
கடலில், நதியில் துள்ளிய மீனைக்
கறி சமைத்தவன் நீ! – ஆட்டுக்
குடலையும் உருவி சுத்தம் செய்து
குழம்பு வைப்பவன் நீ!
சுத்தம் பேசி அசுத்தம் செய்யும்
சுயநலப் பிறவியும் நீ!
முத்தம் என்பது மோகம் இலையென
முழுப்பொய் சொல்பவன் நீ!
உனக்கெனமட்டும் யோசனை செய்யும்
உத்தமப் பிறவியடா?
தனக்கெனச் சேர்த்து சந்ததி சேர்த்து
சரிந்த பிறவியடா?