மனநலமற்ற சமூகம்
திருமணமான சந்தோஷத்தை ஒரே மாதத்தில் தொலைத்திருந்தாள் அவள்..
முதல் மாதம் வரையிலும் சந்தோஷமாய் இருக்கியா என்று கள்ள சிரிப்பில் நகைத்து சென்றனர்.
மூன்றாம் மாதத்தில் ஏதும் விசேஷமா என்று என்று கேட்டு மேலும் கீழும் பார்த்து சென்றனர்.
ஆறு மாதத்தில் ஒரு விசேஷமும் இல்லையா என்று முணுமுணுத்து சென்றனர்.
பத்து மாதத்தில் உன் கூட கல்யாணமான பொண்ணுங்களுக்கெல்லாம் குழந்தை பிறந்துருச்சு இன்னும் நீ மட்டும் என குத்தி காட்டி சென்றனர்.
ஒரு வருடமானதும் வீட்டு விசேஷ அழைப்புகளில் மறைமுகமாய் ஒதுக்கி வைத்தனர்.
ஐந்து வருடத்தில் நல்ல காரியங்களுக்கு முன்னாடி வந்து நிக்காதே,உன்னை மாதிரி ஆகிற போகுது என்று தடித்த வார்த்தைகளை உதிர்த்தனர்.
ஏழு வருடங்களில் வீட்டுக்குள்ளே முடங்கி கிடக்குமாறு மன அழுத்தத்தை கொடுத்தனர்.
பத்தாவது வருடத்தில் குழந்தைக்கு பாலூட்டி சீராட்டி சீவி சிங்காரிச்சு கொண்டிருந்தவளை பார்த்து பைத்தியம் என்றனர்.
தொட்டிலில் இட்ட குழந்தை பொம்மையை போன்றே அவளும் ஊமையாய் போயிருந்தாள்...