ஆச்சாரம்
"ஏன்னா....இந்த செப்டிக் டேங்கை கிளீன் பண்ண ஆள் கூப்பிட சொன்னேனே......சொன்னேளா?" புவனா காபியை ஆற்றிக்கொண்டு நடந்தபடியே கேட்க, "சொல்லிட்டேன்...இன்னிக்கு காலைல வரேன்னு சொன்னான். மணி எட்டரை ஆறது...இன்னும் காணும், சண்டாளன்" என்று ப்ராஹ்மணர்களுக்கே உரிய தோரணையில் கூறினார் நாராயணன். "இன்னிக்கு ஞாயிற்று கிழமை வேற....அவாள்ளாம் பக்கத்துல இருக்கற காரைக்காலுக்கு போய் குடிக்க போய்டுவான்னா. இன்னிக்கு வரமாட்டா" என்றாள் புவனா."இல்லடி, அந்த வண்டிக்காரன் கூட சொன்னானே வந்துருவோம் னு" என்று நாராயணன் கூறும்போதே "அய்யா" என்று வாசலில் குரல் கேட்க, "யாருப்பா" என்றபடி வாசலை நோக்கி நடந்தாள் புவனா. "அம்மா, செப்டிக் டேங்க் கிளீன் பண்ணனும் னு அய்யா நேத்து அட்ரஸ் குடுத்திட்டு போனாருமா" என்றான் வெளியே நின்றிருந்த சுடலை. "வாப்பா, இப்போதான் சொல்லிட்டே இருந்தோம்" என்றபடி செப்டிக் டேங்க் இருக்கும் வழியை காட்ட, "டேய் தம்பி, அந்த டியூபை எடுத்துக்கோ, போய் அந்த டேங்கை தொரந்து வை" என்றான் சுடலை. "உன் பேரு என்னப்பா" என்றாள் புவனா. "சுடலைம்மா" என்றான் சுடலை. "எவ்ளோ வருஷமா இந்த வேலை பாக்குற" என்று கேட்ட புவனாவுக்கு, "பதிமூணு வருஷமா செய்யிறேன் மா, பொண்ணு காரைக்கால் காலேஜ் ல படிக்குது, கடைசி வருஷம், இன்னும் 3 மாசம் ஏதோ பயிற்சியாம், அது முடிஞ்சா வேலைக்கு போயிரும், அப்புறம் நானும் தொழிலை விட்ருவேன், நீங்க ஊருக்கு புதுசாம்மா?" என்றான் சுடலை. "ஆமாம், இந்த ஊரு சனீஸ்வர பகவான் கோயிலுக்கு கணக்கரா எங்க ஆத்துக்காரர் வந்துருக்கார்" என்றாள் புவனா. "சந்தோசம் மா" என்றான் சுடலை. "இந்த வீட்டுக்கு வாடகைக்கு வரோம் னு சொன்னதும் ஹவுஸ் ஓனர் சொன்னாரு, செப்டிக் டேங்க் மட்டும் புல்லா இருக்கும், முன்னாடி இருந்தவங்க காலி பண்ணும்போது செஞ்சு தரணும், ஆனா தரல. கொஞ்சம் சிரமம் பாக்காம பண்ணிக்கோங்கன்னு சொன்னாரு, அதான் வந்த அன்னிக்கே இந்த வேலை" என்றாள் புவனா.
"புவனா" என்று உள்ளில் இருந்து குரல் வர, உள்ளே சென்றாள் புவனா. "அவாளுக்கு காபி கீப்பி குடு... அந்த அலுமினியம் டம்பளர் அங்க வெச்சுருக்கேன் பாரு" என்றபடி, வாஷ் பேசின் அருகே கவிழ்த்து வைக்கப்பட்டிருந்த குவளைகளை காண்பித்தார் நாராயணன். சற்றும் மறுப்பு இன்றி சற்று நேரத்தில் அதில் காபி அளிக்கப்பட்டது சுடலைக்கு. எந்த ஒரு முகமாற்றமும் இன்றி அந்த காபியை குடித்துவிட்டு "ரொம்ப நன்றிம்மா, என்ன இருந்தாலும் அய்யிரு வூட்டு காபி போல வராது, என் சம்சாரமும் தான் காபி போடுமே....கிளாஸ் புதுசா இருந்தாலும் அவளோட காபி ருசி சகிக்காதும்மா. உங்க குவளை பாக்க நல்லா இல்லாட்டியும் ருசி அற்புதம் மா "என்று சிரித்தபடியே சொல்லிவிட்டு வேலையே செய்து முடித்துவிட்டு நடையை கட்டினான் சுடலை. அவன் கூறிய வார்த்தைகள் புவனாவுக்கு என்னவோ போல இருந்தது.
"சரி டி, நான் கோயிலுக்கு போறேன் பர்ஸ்ட் நாள், தெப்பகுளத்துல ஒரு முங்க போட்டுட்டு போறேன்" என்றபடி கிளம்பினார் நாராயணன்.
தெப்பக்குளத்தில் குளித்துவிட்டு கோவிலுக்கு அர்ச்சனை செய்ய அர்ச்சனை தட்டு வாங்கிக்கொண்டு ஈரத்துணியோடு தர்பாரண்யேஸ்வரர் கோவிலுக்கு அருகில் வந்த நேரம், அங்கு விளையாடிக்கொண்டிருந்த ஒரு சிறுவன், அவர்மீது ஓடிவந்து விழுந்துவிட அர்ச்சனை தட்டு கீழே சிதறி விழுகிறது. "சனியனே, கண்ண பிடரிலயா வெச்சுருக்க. மூதேவி, " என்று திட்டியபடியே மீண்டும் குளம் இருக்கும் திசையில் நடக்கலானார்."அய்யா, எங்க போறீங்க" என்று கேட்ட அர்ச்சனை தட்டு விற்கும் பெண்ணிடம், "மடி, போய் ஸ்னானம் திரும்ப பண்ணிட்டு வரேன்" என்றபடி கோபமாக நடந்தவர் குளத்தின் முதல் படியில் கால் இடறி 14 படிகள் உருண்டு தண்ணீருக்குள் விழுந்தார். உடனே அங்கு காரை நிறுத்தி துடித்துக்கொண்டிருந்த ஒரு நாற்பது வயது மதிக்கத்தக்க நபர் ஓடிவந்து அவரை தூக்கி தனது காரில் போட்டு வேகமாய் பறந்துசென்று காரைக்கால் அரசு மருத்துவமனையில் சேர்த்தார். அந்த நேரத்தில் குளக்கரையின் அருகே இருந்த டீ கடையில் நின்றிருந்த சுடலை, அவரது வீட்டிற்கு தகவலை தர,அதிர்ந்துபோனாள் புவனா.
செய்வதறியாது கலங்க, அம்மா, கண்டிப்பா அவரை காரைக்கால் ஆஸ்பத்திரில தான் சேத்துருக்கணும். நீங்க போங்க, அப்பா, ஆட்டோ, இந்த அம்மாவை காரைக்கால் ஆஸ்பத்திரில இறக்கிவிடு" என்றபடி ஆட்டோக்காரனிடம் 150 ரூபாயை யோசிக்காமல் எடுத்து நீட்டினான் சுடலை.
ஆட்டோ காரைக்கால் சென்று சேர ஒரு மணி நேரம் ஆயிற்று. வழியில் ஏதோ சாமி ஊர்வலம். ஆஸ்பத்திரி ரிசப்ஷனில் அழுதபடி கேட்டாள் புவனா, "நாராயணன் னு திருநள்ளார் குளத்துல விழுந்து அடிபட்ட......" கேட்டு முடிப்பதற்குள் நீங்க நேர போய் லெப்ட்ல ஐ.சீ.யு ல போய் பாருங்க என்றாள் ரிஷப்ஷனில் இருந்த பெண். அங்கு ஐ.சி.யு வில் மருத்துவம் நடைபெற்றுக்கொண்டு இருந்தது, அங்கு யாரும் வெளியே வரும்வரையில் காத்திருந்தாள் புவனா. சற்று நேரத்தில் சுடலையும் அங்கே வந்து சேர்ந்தான். "என்னம்மா, அய்யா எப்படி இருக்காரு?" என்றான். அவன் கையில் ஹார்லிக்ஸ் பாட்டிலும் நாலைந்து ஆப்பிள் பழங்களும் நிறைந்த ஒரு பையும் இருந்தது. கொஞ்ச நேரத்தில் காரில் ஏற்றி வந்த அந்த நபர் வேறொரு ஆளோடு பேசிக்கொண்டே நடந்து வந்தார். "அம்மா...சார் தான் அய்யாவை ஆஸ்பத்திரிக்கு கார் ல ஏத்திட்டு வந்தாரு" என்றான் சுடலை. நன்றியோடு அவர் முகத்தை பார்த்தாள் புவனா. "சரி யேசுராஜா, மீன் வியாபாரம் எப்படி போகுது" என்று அவரோடு வந்த நபரிடம் பேசலானார் அந்த காரில் ஏற்றி வந்து சேர்த்தவர். "ஏதோ போகுது அய்யா. நாகப்பட்டினம் பக்கம் நல்லா மீன் வரத்து இருக்கு" என்றான் அந்த ஆள். "சரி கெளம்பு... போய் பொழப்ப பாரு" என்றபடி அவன் கையில் ஒரு ஐநூறு ரூபாய் நோட்டை வைத்தார் அந்த நபர். "அய்யா...உசுருக்கு என்னய்யா விலை???". என்றபடி காசை மறுத்துவிட்டு கிளம்பினான் யேசுராஜா.
"அய்யா, எதுக்கு அவருக்கு காசு" என்று கேட்டான் சுடலை. "அந்த அடிபட்ட ஆளுக்கு இவன் தான் ரத்தம் குடுத்தான் பா" என்றார் அந்த நபர். சற்று நேரத்தில் ஒரு நர்ஸ் வெளியே வந்தாள். வந்தவள் நேராக சுடலையிடம் வந்து, "நீங்க இங்க என்னப்பா பண்றீங்க" என்றாள்."இல்லம்மா, உள்ள ஒரு அய்யா அடிபட்டு இருக்காரே அவரோட வீட்ல தான் காலைல வேலைக்கு போயிருந்தேன்" அதான் என்னனு பாக்கலாம்னு,....அய்யா எப்படி இருக்காரு" என்றான் சுடலை. "இல்லப்பா ஒண்ணும் ஆபத்து இல்ல, சரியான நேரத்துல வந்து அட்மிட் பண்ணிட்டாங்க. சரியான நேரத்துல ரத்தமும் கெடச்சது. கடவுள் அவருக்கூட இருக்காருப்பா." என்றாள் சுடலையின் மகளான நர்ஸ் செல்வி.
சற்று நேரம் கழித்து உள்ளே சென்று பார்க்க அனுமதிக்கப்பட்டனர். சுடலை முதலில் சென்று 'அய்யா, பாத்து இறங்கக்கூடாதுங்களா" என்றபடி கையில் இருந்த பையை அவரது அருகில் வைத்தான். "சரிம்மா, நானும் கிளம்பறேன்" என்றபடி காரோட்டி வந்த அந்த நபரும் புறப்பட்டார். அவரின் புறப்பாடிற்கு பிறகு தான் யோசித்தாள் புவனா. அவரு யாருன்னு கூட தெரியாது, இவ்ளோ பெரிய உதவி செஞ்சுருக்காரு" என்று நினைத்தபடியே அவரை காண மருத்துவமனை வாசல் வரை ஓடினாள். அங்கே ஒரு காரின் அருகில் தரையில் விரித்திருந்த துண்டை எதுத்து உதறிக்கொண்டிருந்தார் அந்த நபர். அவரின் அருகே வந்த புவனா, "அய்யா, ரொம்ப நன்றி, கடவுள் போல வந்து என் வீட்டுக்காரர் உயிரை காப்பாத்திருக்கீங்க." என்றாள். "சரிம்மா, ஏதாவது உதவின்னா இந்த நம்பர் கு கூப்பிடுங்க நான் டிராவல்ஸ் வெச்சிருக்கேன், என்றபடி தனது விசிட்டிங் கார்டை நீட்டினார் அந்த நபர், கார்டை கையில் வாங்கிக்கொண்ட புவனாவிடம் "வீட்ல இன்னிக்கு பீப் பிரியாணி, என் மனைவி காத்திட்டு இருப்பாள்" என்றபடி கிளம்பினார் அந்த நபர். "காரின் பின்புறம் "மாஷா அல்லாஹ்" என்று போடப்பட்டிருந்தது. கையில் இருந்த கார்டை பார்த்தாள்.அதில் "மதினா டிராவல்ஸ்" "உரிமை - அப்துல் காதர்" என்று போடப்பட்டிருந்தது.
கிறிஸ்துவனின் ரத்தம், இசுலாமியர் கொடுத்த மறுபிறவி, தாழ்த்தப்பட்ட பெண் பார்த்த மருத்துவம்,...."கடவுள் என் கணவரின் பக்கத்தில் இல்லை, சாதிகள் பேதங்கள் இல்லாத இந்த மூன்று மனிதர்கள் தான் கடவுளாக என் கணவரோடு இருந்திருக்கிறார்கள். என் கணவரின் மனதில் மட்டும் தான் ஆச்சாரம் என்ற மனிதன் படைத்த மாயை இருந்திருக்கிறது. என் கணவரிடம் இல்லாத கடவுளால் படைக்கப்பட்ட மனிதாபிமானமும் மனிதநேயமும் இந்த மூவரிடம் இருக்கிறது. ஆச்சாரம் என்பது எதுவரை......உயிரென்று வரும்போது பறந்து செல்லும் இந்த அற்ப உணர்வு தான் ஆச்சாரம் என்றால் இது இறைவன் படைத்ததாகுமா? இல்லை..." என்று நினைத்த புவனாவின் கண்கள் கண்ணீர் சிந்த அவள் மனது முழுவதும் மாறி இருந்தது....ஆச்சாரம் என்ற அற்ப உணர்வினை இன்று முதலெனும் என் கணவர் விடவேண்டும். அதற்கு நான் முதலில் திருந்தவேண்டும்..." மனிதாபிமானத்தின் முன் ஆச்சாரம் பாடையேற்றப்பட்டதை உணர்ந்தவளாய் கணவரை காண மருத்துவமனைக்குள் சென்றாள் புவனா..இரண்டொரு நாட்களில் மருத்துவமனையில் இருந்து நாராயணன் வீடு வந்தார். .அந்த அலுமினிய குவளைகள் பட்டுரோஜா செடிகள் தாங்கிய பூக்குவளைகளாக மாறி இருந்தன. மலரத் தொடங்கியது பட்டுரோஜா மட்டுமல்ல...ஆச்சாரம் என்ற பிரம்மை மரணித்து புதைக்கப்பட்ட கல்லறை இருக்கும் அவன் மனதில் பூத்த மனிதநேயம் என்னும் ரோஜாவும் தான்.