கணவனின் முதல் கண்ணீர் துளி

வெள்ளி கிழமை விடுமுறை தினத்தன்று தூக்க கலக்கத்தில் மொபைல் சப்தத்தை கேட்டு எரிசலடைந்தவாறு உற்று நோக்கினான் கார்த்திக்.
தவறிய அழைப்புகளின் எண்ணிக்கை நூற்றை தாண்டி அலறி அமைதி காத்திருந்தது.
மனைவியிடமிருந்து இத்தனை அழைப்புகள் எதற்க்காக இருக்குமோ,
பதற்றமான விடுமுறையை வாழ்க்கையில் முதல்முறையாய் கண்டான்.

வீட்டில் ஏதாவது பிரச்சனையாகி இருக்குமோ,
அதிகபட்சம் மாமியார் மருமகள் சண்டையாய் இருந்தால் என்ன பன்னுவது..
இன்று என்ன பிரச்சனை பூதாகரமாய் வெடித்துள்ளதோ என பலவாறு சிந்தனை,
பைத்திய நிலையை அடைய வைத்திருந்தது..
அவசரமாய் நம்பரை எடுத்து டயல் செய்ததும்,எதிர்முனையில் நீங்கள் தொடர்பு கொள்ளும் நபர் செம கோவத்தில் உள்ளார்.பின்பு தொடர்பு கொள்ளவும் என்பது போல பிரமையாய் காதில் ஒலித்தது..
அடுத்ததாய் அம்மா நம்பர்க்கு தொடர்ப்பு கொண்ட போது,எதிர்முனையில் குரல் கேட்டது.
நலம் விசாரித்து முடிந்ததும்,வீட்டில் ஏதும் பிரச்சனையா என்றவுடன்,
எதிரிலிருந்து ஏதோ பேசும் முன்பே தொடர்பு துண்டிக்கப்பட்டதை போல் உணர்ந்து மொபைலை பார்த்தான்.
பேலன்ஸ் ஜீரோ என காட்டியது.
இந்த நேரத்தில் இது வேற உயிரை வாங்குகிறது என அவசர அவசரமாய் கடைத்தெருவிற்கு ஓடி மூச்சிரைக்க ரீஜார்ச் செய்து அங்கிருந்தே மறுபடியும் மனைவியை தொடர்பு கொண்டான்..

டிரிங்..
டிரிங்..
ஒவ்வொரு நொடியும் இதய துடிப்பு நெஞ்சு கூட்டை விட்டு வெளியேறி துடித்தது..
ஹலோ என்று கார்த்திக்கின் குரலை கேட்டதும் எதிர்முனையில் வெடித்து அழும் சப்தத்தில்,அவன் சப்த நாடிகளும் ஒடுங்கி போனது..
உங்களுக்கு எவ்வளவு நேரம் கால் பன்னிகிட்டே இருக்கேன்.ஏன் எடுக்கவே மாட்டேங்குறீங்க.எனக்கு எவ்வளவு பயமா இருந்துச்சு தெரியுமா என்றவாறு அழுகையுடன் மீண்டும் தேம்ப ஆரம்பித்தாள் மாலதி.
என்னாச்சுமா ப்ளீஸ் சொல்லுமா,நீ அழாத எனக்கு என்ன செய்யுறதுனு தெரியலை ரொம்ப பதற்றமா இருக்கு,
முதல்ல விசயத்தை சொல்லுமா ப்ளீஸ் என கார்த்திக் குரல் கம்ம,

முதன்முதல்ல உங்ககிட்டதான் சொல்லனும்னு அவ்ளோ தடவை ட்ரை பன்னுனேன்.எங்க அம்மாகிட்ட கூட இன்னும் சொல்லாம இருக்கேன் தெரியுமா..
சில நொடிகள் நிசப்தம் இருவருக்கிடையே..
என்னங்க நீங்க அப்பா ஆக போறீங்க,
நம்ம புள்ளை உங்ககிட்ட சொல்ல சொல்லி அடம் பிடிக்குது..
கேக்குறீங்களா என்று மூன்று மாசமேயான வயிற்றில் மொபைலை வைத்தாள்..
கண்ணீருடன் முதல் முத்தத்தை கருவிலிருக்கும் தன் குழந்தைக்கு கொடுத்தான் கார்த்திக்.
என்னங்க நம்ம குழந்தைக்கு மட்டுந்தானா அப்ப எனக்கு கிடையாதா என்றாள் வெகுளியாய்.

அவன் கொடுத்த முத்த சத்தத்தில் அழுகை நின்றிருந்தது அவளுக்கு.
கட்டி பிடித்து கையால் தூக்கி அவளை கொண்டாடனும் போலிருந்தது.
உனக்கு பிடிச்சதை எது வேண்டுமானாலும் கேள்,ஒரு நிமிசத்தில் கொண்டு வருவேன்,
உன்னை எவ்வளவு பிடிக்கும் என்பதை இப்போதுதான் உணர்ந்தேன் ஐ லவ் யூ மா என்று சப்தமிட்டு உலகமே கேட்கும் வண்ணம் கதற வேண்டும் போலிருந்தது..

வெளிநாடு வேலைக்கு இடையில் அழ கூட நேரமில்லாமல் எந்திரத்தனமாய் நகர்ந்து கொண்டிருந்தான்...

எழுதியவர் : சையது சேக் (11-Sep-17, 5:33 pm)
பார்வை : 397

மேலே