முத்தான நினைவுகளாய் என் முதல் நாள் கல்லூரி அனுபவம்

பதினெட்டு வயது!
திரைப்படங்கள் வளர்த்துவிட்டிருந்த
கல்லூரிக் கனவுகள்
நிஜம் எனும் நீர் பட்டு
கலையத் தொடங்கிய நாள்!

சக நண்பன் சரவணனுடன்
பேருந்து விட்டு இறங்குகிறேன்
பேராவலுடன்!

"பச்சேரி ஸ்ரீ நல்லதங்காள்
அம்மன் பொறியியல் கல்லூரி"
முகம் பார்த்து சிரிக்கிறது
முகப்புப் பலகை!

கான்கிரீட் மலையாய்
கல்லூரிக் கட்டிடம்!
இன்னும் சற்று உயர்ந்தால்,
விண்ணையும்கூட விரல்
நீட்டித் தொட்டிடும்!

வகுப்பறை...
படிக்க வந்த
பட்டாம்பூசிகளின் தொகுப்பறை!

பிடரி பிடித்திழுத்த தயக்கத்துடன்
"பி" பிரிவில் நுழைகிறேன்!
புதிது புதிதாய் முகங்கள்!
அனிச்சையாய் கடிபட்டன
என் நகங்கள்!

புன்னகையோடு தன்னருகில்
இடம் தருகிறான்
அந்த புதிய நண்பன்!
அந்தப் பண்பான நண்பன்
"பழனிக்குமார்" என்றே ஞாபகம்!

வலப்புறம் திரும்புகிறேன்....
அட! வகுப்பறைக்குள் வானவில்லா..?
அதுவும் இத்தனை நிறங்களில்...!

இந்த சூரியகாந்திகளுக்கெல்லாம்
சுடிதார் போட்டனுப்பியது யார்?
ஒ! ....மாணவிகள்!...

என்ன செய்வது?...
ஆண்கள் பள்ளி எனும்
அனல் பாலைவனத்திலிருந்து
வந்த எனக்கு, கானல் நீரும்
கரும்புச்சாறாய்தான் தெரியும்!

அடுத்ததாக ஆசிரியர்களின் அணிவகுப்பு!
ஆங்கிலத்தில் அறிமுகம்
செய்துகொள்ள வேண்டுமாம்!
என் பாதம் வழியே
நுழைந்த பயம்,
பல்லிடுக்கில் படுத்துக்கொண்டது!

என் முறை வருகிறது....

கூச்சம் என்னை கூறுபோட்டது!
கூட்டம் கண்டு என்
குரல் உடைந்தது!
நாக்கின் அடியில் நரம்பிழுத்தது!
ஆங்கிலம் அங்கே கற்பிழந்தது!

உளறிமுடித்தேன் ஒருவழியாக!
இதயம் துடித்தது
இரு மடங்காக!

முதல் நாளில் மட்டும்
மூன்று நண்பர்களின்
அறிமுகம் பெற்றேன்!

சில நேரங்களில் நகைச்சுவையும்,
பல நேரங்களில்
நாராசமும் காட்டும்
அன்பு நண்பன்
குண்டு விஜயகுமார்!

அசிங்கமாகத் திட்டினாலும்
அமைதியாகச் சிரிக்கும்
வி.எம்.செந்தில்!

என்னைக் கூசாமல் "குருவே"
என்றழைத்த "மணிமாறன்"!

இயல்பாய் எல்லாம் நடந்துவர,
இடையில் புகுந்தனர்
இரண்டாமாண்டு மாணவர்கள்!
மூங்கில் செடிக்கு மூக்கு
முளைத்ததுபோல் ஒருவன்!
முள்ளம்பன்றிக்கு முழுக்கை சட்டை
போட்டதுபோல் மற்றொருவன்!

ராகிங்...
இளைய மாணவர்களின்
இதயம் உடைக்கும்
மூத்த மாணவர்களின்
மூர்க்க விளையாட்டு!

தோல் செருப்பு
காலில் கண்டால்,
நாள்கணக்கில் அடி விழுமாம்!

வணக்கம் சொல்லத் தவறினால்,
வாரக்கணக்கில் அடி விழுமாம்!

மாணவிகளுடன் பேசினால்,
மாதக்கணக்கில் அடி விழுமாம்!

மீசை மழிக்க மறுத்தால்,
பூசை நிச்சயமாம்!

மொத்தத்தில், அவர்களின்
ராகிங் எனும் ராஜ போதைக்கு,
நாங்கள் ஊமைகளாய்
நின்று ஊறுகாய் ஆனோம்!

இப்படியாகக் கழிந்தது
அன்றைய பொழுது!
இப்போதும் இனிக்கிறது
இதயத்தில் அந்த நினைவு!

பதினெட்டாண்டுகள்
பறந்தோடியபோதிலும்,
பத்திரமாய் என்னுள்
அந்தப் பசுமையான சுவடு!

எழுதியவர் : நிலவை.பார்த்திபன் (24-Jul-11, 6:10 pm)
பார்வை : 1019

மேலே