எல்லைக் கோடு

எல்லையிலா அருளால் காக்கும்
…..இறையவன் வகுத்த சட்டம்
எல்லைக்கோ டென்று பார்த்து
…..இணங்கிநீ வாழ்தல் திட்டம்
தொல்லைகளும் வரத்தான் செய்யும்
…தொடர்ந்துநீ முன்னே செல்வாய்
இல்லையென்றால் உழைப்பில் தேக்கம்.
…இருப்பதைக் கண்டு கொள்வாய்!

அளவுக்கு மிஞ்சும் போதில்
…அமுதமும் நஞ்சாய்ப் போகும்
பிளவுக்கு வழியைக் காட்டும்
….பிறர்மனம் புண்ணாய்ப் போகும்
அளவுக்கு மேலே காட்டும்
..அக்கறைக் கூடத் தொல்லை
களவில்லாக் கற்பைப் பேண
…காண்பது பண்பின் எல்லை!

நாட்டிலுள்ள எல்லைக் கோடு
…..நல்லவர் மதிக்கும் கோடு
வீட்டிலுள்ள எல்லைக் கோடு
…விரும்புவர் அண்டை வீடு
பாட்டிலுள்ள யாப்பின் கோடு
….பாடலின் அமைப்பைக் காட்டும்
வாட்டிவிடும் வறுமைக் கோடு
…வறுமையின் எல்லைக் கோடு!

ஆட்டத்தில் எல்லைக் கோடு
…..ஆட்டமும் சிறக்கச் செய்யும்
நாட்டத்தில் எல்லைக் கோடு
…நாளையை எண்ணிப் பார்க்கும்
நோட்டத்தில் எல்லைக் கோடு
..நோவினை இல்லாக் கற்பு
கூட்டத்தில் எல்லைக் கோடு
…கூச்சலைத் தடுத்து வைக்கும்!

எழுதியவர் : கவியன்பன் கலாம் (16-Sep-17, 5:58 pm)
Tanglish : ellaik kkodu
பார்வை : 725

மேலே