நலம் தரும் நவராத்திரி வழிபாடு

நாம் வாழும் இல்லமே அழகிய கோவில். அந்த கோவில் ஆண்டுக்கு ஒரு முறை நடத்தப்படும் “பிரம்மோற்சவம்” தான் நவராத்திரி திருவிழா. நவராத்திரி விழாவில் சக்தியை வழிபட ஒன்பது ராத்திரிகள் வகுக்கப்பட்டுள்ளன. சிவனை வழிபட ஒரு ராத்திரி. அம்பிகையை வழிபட ஒன்பது ராத்திரி என்பர். எத்தனை எத்தனை அம்பிகை பண்டிகைகள் வந்தாலும் நவராத்திரி விழா மட்டுமே மிக சிறப்பு பெற்றது.

நாம் பெரும்பாலும் நாடு முழுவதும் கொண்டாடப்படும் இந்த நவராத்திரி மட்டும் தான் ஒரு ஆண்டிற்கு ஒருமுறை வருகிறது என பலர் நினைப்பர். அது தவறு.

ஒரு ஆண்டிற்கு நான்கு நவராத்திரிகள் வருகின்றன. அதாவது ஆனி மாதம் அமாவாசைக்கு அடுத்து வரும் பிரதமை முதல் ஒன்பது நாட்கள் வாராஹி நவராத்திரி என்றும், புரட்டாசி மாதம் அமாவாசைக்கு அடுத்து வரும் பிரதமை முதல் வருவது ஒன்பது நாட்கள் சாரதா நவராத்திரி என்றும்,

தை மாதம் அமாவாசைக்கு பிறகு வரும் பிரதமை முதல் வரும் ஒன்பது நாட்கள் சியாமளா நவராத்திரி எனினும், பங்குனி மாதம் அமாவாசைக்கு அடுத்து வரும் பிரதமை முதல் ஒன்பது நாட்கள் வசந்த நவராத்திரி எனவும் அழைக்கப்படுகிறது. இந்த நான்கு நவராத்திரிகளில் இந்தியாவில் உள்ள எல்லா மாநிலங்களிலும் மிக சிறப்பாக கொண்டாடப்படுவது சாரதா நவராத்திரிதான்.

வசந்த நவராத்திரி குஜராத் மற்றும் மேற்கு வங்காளம் போன்ற மாநிலங்களிலும், சியாமளா மற்றும் வாராஹி நவராத்திரி சில ஊர்களிலும், கோவில்களிலும் கொண்டாடப்படுகிறது.

இத்தகைய சிறப்பு மிக்க நவராத்திரி பண்டிகையை முதன் முதலில் இராமர்தான் கொண்டாடியதாக புராணங்கள் கூறுகின்றன. ராமபிரான் நவராத்திரி விரதம் இருந்த பிறகு தான் சீதை இருக்குமிடம் தெரிந்ததாக தேவி பாகவதம் கூறுகிறது. விசுவாமித்திரர், காளிதாசன், அபிராமிபட்டர், பிரம்மா, பாண்டவர்கள் ஆகியோர் நவராத்திரி விரதமிருந்து பூஜை செய்து அம்பிகையின் அருளை பெற்றனர் என்று புராணங்கள் கூறுகின்றன.

சக்தி வடிவமாய் காட்சி தரும் ஒன்பது கண்ணிகைகள்:

நவராத்திரியில் சக்தி வடிவமாய் காட்சி தரும் பராசக்தி ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு தேவியின் வடிவில் ஒரு வயது முதல் பத்து வயது வரை உள்ள கன்னி பெண் வடிவில் அவதாரம் செய்ததாக ஐதீகம். அதாவது, முதல்நாள் மஹேஸ்வரி பாலா, இரண்டாம் நாள் கெளமாரி குமாரி, மூன்றாம் நாள் வாராஹி கல்யாணி, நான்காம் நாள் மஹாலட்சுமி ரோகிணி, ஐந்தாம் நாள் வைஷ்ணவி சுபத்ரா, ஆறாம் நாள் இந்திராணி காளிகா, ஏழாம் நாள் சாமுண்டி சண்டிகா, எட்டாம் நாள் நரசிம்ஹி தருணி, ஒன்பதாம் நாள் சரஸ்வதி அமங்கலி என்றவாறு கன்னியின் வயதிற்கு ஏற்ப ஒவ்வொரு கன்னிகையாக ஒன்பது கன்னிகையும் வணங்குவதே நவராத்திரி வழிபாடு.

நவராத்திரி கன்னி பெண்களை கவுரவித்து அவர்களுக்கு புதிய ஆடை பரிசளிப்பது பெரும்பலனை அளிக்கும். அதுபோல் நவராத்திரியில் குழந்தை வடிவமாய் அருள் புரியும் அம்பிகை அவள் கொலுவிற்றிருக்கும் கொலுவை காண குழந்தைகளை தன் வசம் இழுக்கிறாள். வரும் குழன்தைகளை ஒவ்வொரு தெய்வமாக மதித்து உபசரித்து அனுப்புதல் வேண்டும்.

நவராத்திரியில் அம்பிகையை வணங்கி பெண்கள் மட்டும் விரதமிருக்க வேண்டும் என்று இல்லை. ஆண்களும் நவராத்திரி விரதமிருந்து அம்பிகையின் அருளை பெறலாம். நவராத்திரி விரதம் அனைத்து செல்வங்களையும் வாரி வழங்க கூடியது.

எழுதியவர் : (21-Sep-17, 10:58 am)
சேர்த்தது : ராஜ்குமார்
பார்வை : 280

மேலே