தமிழக மாணவர்களின் மருத்துவக் கனவு சிதைந்தது ஏன்

தமிழக மாணவர்களின் மருத்துவக் கனவு சிதைந்தது ஏன்?
- முனைவர் சாமி எழிலன்,
கல்வி நெறியாளர்

மாநிலப் பட்டியலில் இருந்த கல்வி, 1976ல் பொதுப் பட்டியலுக்கு மாற்றப்பட்ட போதே மாநில உரிமைகள் பறிபோய்விட்டன. நாட்டில் அவசர நிலைப் பிரகடனம் இருந்த சூழலில், இந்தப் பட்டியல் மாற்றத்திற்கு எதிரான குரல்கள் ஒடுக்கப்பட்டன. இந்தியாவில் ஒரே மாதிரியான கல்வி முறை வேண்டும் என்கிற குரல், காங்கிரஸ் காலத்தில் தொடங்கப்பட்டது. இந்தியாவின் பன்முகத் தன்மைக்கு, வட இந்தியரால் பூட்டுப் போடப்பட்டது. மத்திய அரசை சார்ந்து இருக்க வேண்டிய நிலைக்கு மாநிலங்கள் தள்ளப்பட்டன. 'மிசா'வால் பெரிதும் பாதிக்கப்பட்ட திராவிட இயக்கங்கள், பின்னாட்களில் காங்கிரஸ் தலைமை இந்திரா காந்தியுடன் கைகோர்த்ததால், மாநிலத்தின் எதிர்ப்புக்குரல் நீர்த்துப் போனது.

இந்தப் பட்டியல் மாற்றத்தால், கல்விக்கான நிதி ஒதுக்கீட்டிலும் பெரிய அளவில் மாற்றம் ஏற்படவில்லை. கல்விக்கான நிதி, கடந்த 70 ஆண்டுகளில் 2ல் இருந்து 4 சதவீத அளவே உயர்த்தப்பட்டு வருகிறது. மக்கள் தொகை உயர்வுக்கும் கல்விக்கான நிதி ஒதுக்கீட்டுக்குமான பெரிய இடைவெளி இன்று வரை தொடர்கிறது. ஆனால், இராணுவத்திற்கான நிதி ஒதுக்கீடுகள் ஆண்டுதோறும் அதிகரிக்கப்பட்டு, இந்த இடைவெளி குறுகியே வந்துள்ளது. நிதி ஒதுக்கீடு சமநிலைப் படுத்தப்படாததால், கல்வியின் தரம் கூனி குறுகிப் போய்விட்டது. தொடர்பான கல்வி அறிக்கைகளும், விவாதங்களும், பரிந்துரைகளும் அரசியல் இயக்கங்களிடையே புறக்கணிக்கப்பட்டன. மழங்கடிக்கப்பட்டன. இதனால் உலகில் தலை சிறந்தப் பல்கலைக்கழகப் பட்டியலில் இந்தியா, காணாமல் போனவர்களோடு கைகோர்த்துக் கொண்டது. உயர்கல்வி என்பது இன்றும் எட்டாக் கனியாகவே உள்ளது. மக்கள் தொகையில் 50 சதவீதத்திற்கு மேல் உள்ள பெண்கள், உயர்கல்வி நிறுவனங்களில் 10 சதவீதத்தை தாண்டவில்லை. ஆய்வுக் கல்வி பயிலும் மாணவ, மாணவியரின் எண்ணிக்கை இரண்டு சதவீதத்தைக்கூட எட்டவே இல்லை.

கல்வித் தரத்தை மதிப்பிடும் யுனெஸ்கோ போன்ற சர்வ தேசிய அமைப்புகள் எழுதப் படிக்க, எளிய கணக்கு கூட தெரியாத நமது தொடக்கக் கல்வி மாணவர்களின் நிலை அறிந்து அறிக்கைதோறும் கதறி அழுகின்றன. இந்தியாவிலேயே தலைசிறந்த கல்வியை தந்து கொண்டிருப்பதாக தங்களைத் தாங்களே பாராட்டிக் கொள்கிறது தமிழக அரசு. மத்திய அரசின் உயர் பணிகளில் தமிழ் மாணவர்களின் பங்களிப்பு ஆண்டுதோறும் குறைந்து வருகிறது. 2010ல் நடந்த 'UPSC' தேர்வில் 350 தமிழகத் தேர்வர்கள் தேர்ச்சி அடைந்தனர். ஆனால் 2015ல் 267 பேரும், இந்த ஆண்டில் 210 பேர் தமிழகத்தில் தேர்ச்சி பெற்றனர்.

தமிழகத்தில் பல பல்கலைக்கழகங்கள் துணைவேந்தர்கள் இல்லாமல் செயல்படுவது, பாடத்திட்டங்களை மேம்படுத்தாதது, போதிய பேராசிரியர்களை நியமிக்காமல் தற்காலிக விரிவுரையாளர்களைக் கொண்டு பாடம் நடத்துவது போன்றவையே இந்த நிலைக்கு காரணங்கள்.

இந்திய தொழில் நுட்பக் கல்வி நிறுவனங்களில் ஆந்திர மாணவர்களைவிட தமிழகத் தேர்வர்கள் பின் தங்கி உள்ளனர். 2016ல் நடந்த IITகளில் சேர்வதற்கான JEE இறுதி தேர்வில், சென்னை IITல் 116 தமிழக மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர். இதில் தமிழ்மாநில பாடத்திட்டத்தில் படித்த 13 மாணவர்கள் மட்டுமே தேர்ச்சி பெற்றனர். ஆனால் , ஆந்திர மாநிலங்களில் இருந்து 313 மாணவர்கள் சென்னை IITல் சேர்ந்தனர்.

தரமான கல்வியைக் கொடுத்து இருந்தால் இது போன்ற தேர்வுகளில் நமது மாணவர்கள் இன்று சாதித்து இருப்பார்கள். இந்த ஆண்டு நடந்த நீட் தேர்வில், தமிழகத்தில் 5 சதவீத மத்தியக் கல்வி வாரிய மாணவர்கள், 37 சதவீத மருத்துவ இடங்களை பெறறனர். ஆனால் 95 சதவீத தமிழக மாணவர்களால் 63 சதவீத மருத்துவ இடங்களை மட்டுமே பெற்றுள்ளனர். 'நீட்' தேர்வில் இது போன்ற கவலை அளிக்கக் கூடிய நிலைக்கு என்ன காரணம்?

இந்தியாவில் உள்ள அனைத்து மருத்துவக் கல்லூரிகளுக்கும் பொது நுழைவுத் தேர்வு நடத்தப்பட வேண்டும் என 2011ல் திமுக உள்ளிட்ட கட்சிகள் உள்ளடக்கிய காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு கால்கோள் விழா நடத்தியது. பல நுழைவுத் தேர்வுகள் தவிர்க்கப்பட்டு ஒரே ஒரு நுழைவுத் தேர்வு போதும் என்பதற்காக இது போன்ற நிலைப்பாடு எடுக்கப்பட்டது. பல்வேறு பாடத்திட்டங்கள் உள்ள ஒரு பெரிய நாட்டில் பொதுவான தேர்வால் குழப்பங்கள் வரும் என்று தெரிந்தே 2012ல் 'நீட்' தேர்வு நடத்திட சட்டம் இயற்றப்பட்டது. AIIMS, JIPMER, போன்ற ஒருசில மருத்துவக் கல்லூரிகளுக்கு மட்டும் நடத்தப்பட்ட AIPMT நுழைவுத்தேர்வுக்குப் பதிலாக ' NEET' (The National Eligibility cum Entrance Test) அறிமுகப்படுத்தப்பட்டது. தமிழகம் உள்ளிட்ட சில மாநிலங்கள் இந்த மருத்துவத் தேர்விற்கு எதிராக முழக்கமிட்டன. 2013ல்
'உச்ச நீதிமன்றம் ''நீட்' தேர்வு இந்திய அரசியல் அமைப்பு சட்டத்திற்கு எதிரானது என்று கூறி 'நீட்' அவசியமில்லை என தீர்ப்பு வழங்கியது. இந்தியாவின் பன்மைத்தன்மையும், இறையாண்மையும் காப்பாற்றப்பட்டதற்காக கல்வி வல்லுநர்கள் பெரிதும் மகிழ்ந்தனர். ஆனால் மருத்துவக்கல்வியில் தரம் உயரவும், கல்லூரிகளின் கட்டாய வசூல் நீங்கிட பொது நுழைவுத் தேர்வு குறித்த குரல் மீண்டும் 2016ல் ஒலிக்கத் தொடங்கியது.

இந்திய மருத்துவக் கவுன்சிலின் தொடர் அழுத்தம் காரணமாக, மீண்டும் பாஜக தலைமையிலான அரசின் வழிகாட்டுதலில் 2016 ல் பொது மருத்துவம் மற்றும் பல் மருத்துவத்திற்கான இளநிலை மற்றும் முதுநிலைப் பட்டங்களுக்கான நுழைவுத்தேர்வுகள் கட்டாயமாக்கப்பட்டன. ஜந்து உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அமர்வு 'நீட்' நுழைவுத் தேர்வை நடத்திட தீர்ப்பு வழங்கியது. அன்றைய தமிழக ஆளுமையின் எதிர்ப்பு காரணமாக கடந்த 2016 ஆம் ஆண்டு தமிழகத்திற்கு மட்டும் 'நீட்' தேர்வில் இருந்து ஓராண்டுக்கு மட்டும் விலக்கு அளிக்கப்பட்டது. 2013ல் அரசியல் அமைப்பிற்கு எதிரானதாக உச்ச நீதிமன்றத்தால் கருதப்பட்ட 'நீட்' நுழைவுத் தேர்வை உறுதிப்படுத்தியது வியப்பைத் தந்தது. அதற்குப் பிறகு தமிழக அரசு எடுத்த சட்ட மற்றும் அரசியல் நடவடிக்கைகள் பயன் அற்றுப் போய் 2017ல் 'நீட்' தேர்வு கடந்த மே மாதம் தமிழகத்தில் முதன்முறையாக நடத்தப்பட்டது. தமிழகத்தில் கல்வி மற்றும் சுகாதார அமைச்சர்கள் அடிக்கடி மாற்றப்பட்டதால் சரியான புரிதல் இன்றி 'நீட்' தேர்வை எழுதியாக வேண்டிய கட்டாயத்திற்கு தமிழக மாணவர்கள் தள்ளப்பட்டனர். இந்தியாவில் 40 கல்வி வாரியங்கள் இருந்தாலும் CBSE எனப்படும் மத்திய இடைநிலைக் கல்விக் குழுமம் இந்தத் தேர்வை தனது வாரிய கலைத்திட்டத்தின்(Curriculum) அடிப்படையில் மற்ற மாநில பாடத் திட்டங்களைப் பற்றி கவலைப்படாமல் ஏகப்பட்ட குளறுபடிகளுடன் நுழைவுத் தேர்வை நடத்தியது. நுழைவு தேர்வு எழுதச் சென்ற மாணவர்களை, அமெரிக்க அரசு தனது நாட்டிற்கு வரும் அந்நியர்களை சோதனை செய்வது போல குறிப்பாக இசுலாமியர்களை சோதனை செய்வதைப் போல சோதனை செய்தது. மாணவ, மாணவியர்களை நடத்திய விதம் இது ஒரு தகுதியற்ற குழுமம் என்ற முத்திரை குத்துமளவு போனது. கேரள உயர்நீதிமன்றம் CBSEக்கு எதிராக தனது கன்டனத்தை தெரியப்படுத்தியது. தலைநகர் டெல்லியில் மூச்சுக்கு மூச்சு கலாச்சாரத்தைப் பற்றிப் பேசுபவர்கள் அன்று ஒரு நாள் மெளனிகளாகினர். தான் ஏன் ஒரு பெண் பிள்ளையைப் பெற்றெடுத்தோம் என பெற்றோர்கள் எண்ணுமளவு தேர்வு அதிகாரிகள் தம் நிலை தாழ்ந்து செயல்பட்டனர்.

இந்தியாவில் உள்ள அனைத்து மாணவர்களுக்கும் பொதுவான பாடம், வினாத்தாள் என எதிர்ப்பார்க்கப்பட்ட இந்த நுழைவுத் தேர்வு மிகப் பெரிய ஏற்றத் தாழ்வுகளை கொண்டு இருந்தது. இந்தி, ஆங்கிலம் உள்ளிட்ட 10 மொழிகளில் கேள்வித் தாள்கள் தயாரிக்கப்பட்டன. மொழிபெயர்ப்புப் பணியைக்கூட இந்தக் குழுமம் சரியாகச் செய்யவில்லை. ஒரே கேள்வித்தாளை தரவேண்டிய இந்த அமைப்பு ஒவ்வொரு மொழிக்கும் தனித்தனியாக கேள்விகளைக் கேட்டது. குஜராத் மாணவர்களுக்கு எளிதான கேள்விகள் கேட்கப்பட்டதாக செய்திகள் கூறியன. உச்ச நீதிமன்றமும் வெவ்வேறு கேள்விகள் கேட்டது ஏன் என குழுமத்தைக் கேள்வி கேட்டது. தமிழக உயர்நீதிமன்றமும் இதேப் போன்று கேள்வி கேட்டது. இந்தியாவிலேயே மிகச்சிறந்த கல்வி அமைப்பாக கருதப்படுகிற இந்த அமைப்பிடம் இருந்த இன்று வரை பதில் இல்லை. இனிவரும் காலங்களில் இது போன்று செயல்படக் கூடாது என உச்சநீதி மன்றம் அறிவுரை கூறுமளவிற்கு மத்திய கல்வி வாரியம் நடந்து கொண்டது. பதினொன்றாம் மற்றும் பனிரெண்டாம் வகுப்புகளுக்கான கேள்விகள் கூட சம அளவில் கேட்கப்படவில்லை என துறை சார்ந்த பாட வல்லுநர்கள் கவலை தெரிவித்து இருந்தனர். சில கேள்விகள் பாடத்திட்டத்தில் இல்லை என்று கூறியிருந்தனர்.

தமிழகத்தில் 11, 12 வகுப்புகளுக்கு உரிய பாடநூல்கள் 11 ஆண்டுகளுக்கு முன்பு பாடத் திட்டம் மாற்றப்பட்டு வழங்கப்பட்டன. தரம் என்ற பெயரில் 9வது வகுப்புக்குரிய பாடங்களை 7ஆம் வகுப்பு மாணவர்களின் மீது சுமத்தினர். தொடக்கக்கல்வியில், 'செயல்முறைக்கல்வி'(ABL) அறிமுகப்படுத்தப்பட்டது. ஒழங்கற்ற கற்பித்தல்-கற்றல் முறைகளால் எதிர்பார்த்த விளைவுகளை அம்முறை மாற்றப்பட்டு 'செயல்வழிக்கல்வி முறைக் கற்றல்' (ALM) புகுத்தப்பட்டது. இது குறித்த சரியான புரிதல் இன்றியும், உரிய கருவிகள் இன்றியும் இதுவும் தோல்வி கண்டது. ஆட்சியாளர்களே கல்வியாளர்களாக மாறியதால் இமந்த ALM முறை குறித்த பார்வை ஆக்கம் பெறவில்லை. அதற்குப் பிறகு வந்த 'சமச்சீர் 'கல்வி முறை காலூன்றிய நிலையில், ஆட்சி மாற்றத்தால் பாடத்திட்டம் சிதைக்கப்பட்டு தீவிர ஈடுபாடின்றி பெயரளவில் பின்பற்றப்பட்டு வருகிறது. பெரும்பாலான ஆங்கில வழிப் பள்ளிகளில் இந்த சமச்சீர் நூல்கள் புறக்கணிக்கப்பட்டு மத்திய வாரிய பாடத்திட்டப்படி வெளியிடப்பட்ட பாட நூல்கள் பின்பற்றப்பட்டு வரப்படுகின்றன. இது குறித்து கல்வி அதிகாரிகள் கண்டு கொள்வது இல்லை. இந்தியா எங்கும் பின்பற்றப்பட வேண்டிய 'Continuous and Comprehensive Evaluation' (CCE) முறையிலான தொடர் மற்றும் விரிவான மதிப்பீட்டு முறை, எவ்வித செயல்பாடுகள் இன்றி, தமிழகத்தில் தேர்ச்சி அட்டையில் மட்டும் இடம் பெற்று உள்ளது. சுயவழிக்கற்றல், பன்முக செயல்பாடுகளைக் கொண்ட இம்முறையிலான கல்வி முறை தமிழ் மாநில பள்ளிகளில் முழுமையாகப் பின்பற்றப்படவில்லை. மனப்பாடம் செய்து தேர்வு எழுதுவதை CCE முறை போற்றுவது இல்லை. மாறாக மாணவர்களின் சுய சிந்தனைக்கும், ஆற்றலுக்கும், வெளிப்படுத்தலுக்கும் இது முனைப்பு காட்டுகிறது. இக்குறிப்பிடப்பட்ட முறையை மத்திய வாரியப் பள்ளிகள் உறுதிசெய்கின்றன. முதலாம் வகுப்பு முதலே இம்முறை பின்பற்றப்படுகிறது. குறிப்பாக ஆறாம் வகுப்பு முதல் பல ஆக்கவழிச் செயல்பாடுகள், மதிப்பீடுகள் மாணவர்களின் கற்றலை செறிவு படுத்துகிறது. இதனால் தான் எந்தவொரு தேசிய அளவிலான திறன் மற்றும நுழைவுத் தேர்வுகளில், மத்திய வாரிய மாணவர்கள் சிறப்பிடம் பெறுகிறார்கள். மாணவர்களின் கற்றல் விளைவுகளையும் முன்னேற்றத்தையும் கருத்தில் கொள்ளாமல், எட்டாவது வரை கட்டாய தேர்ச்சி வழங்கப்படுகிறது. இதனாலும் நமது தமிழ் மாநில மாணவர்கள் தட்டுத் தடுமாறி பரிதாப நிலைக்கு தள்ளப்படுகின்றனர்.

தமிழ் மாநில ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்ட ஆசிரியர் கல்வி முறைகளும், பட்டங்களும் எந்தவொரு அடைவுகள் இன்றி இருப்பதும் ஒரு காரணம். ஆசிரியப் பயிற்சி கல்லூரிக்குச் செல்லாமலே தமிழ் நாட்டில் பட்டம் பெற்றுவிட இயலும். அது போன்ற ஆசிரியர்களால் எது போன்ற கல்வியைப் புகட்ட முடியும்? இவர்களை இது போன்ற நுழைவுத் தேர்வுகளை எழுதச் சொல்லிப் பார்த்தால் உண்மை நிலை தெரியும். ஆசிரியர் வாரியத் தேர்வில் 5,000 கேள்வி பதில்களைப் மனப்பாடம் செய்தால் ஆசிரியர் பணி கிடைத்துவிடும் என்ற நிலையே உள்ளது. இது போன்ற தேர்வுகளில் 'நுண்ணறிவு' கேள்விகளுக்கு இடமில்லை. தேசிய நுழைவுத் தேர்வுகளில் பின்பற்றப்படும் மேம்படுத்தப்பட்ட திறனறி கேள்விகள் இல்லை. கல்லூரி ஆசிரியர்களுக்கான NET, SLET போன்று கேள்விகள் இல்லை. ஆனால் அவர்களிடம் படிக்கும் மாணவர்களிடம் தேசிய அடைவுகளை, திறன்களை எப்படி எதிர்பார்க்க முடியும்?

கடந்த காலங்களில், பனிரெண்டாம் பொதுத் தேர்வில் அறிவியல் பாடங்களில் எழுத்து தேர்வில் 150க்கு 40 மதிப்பெண் எடுத்தால் மட்டுமே தேர்ச்சி பெற இயலும். செய்முறைத் தேர்வில் 50க்கு 30 எடுக்க வேண்டும். பிறகு இரண்டையும் கூட்டி 200க்கு 70 எடுத்தால் தேர்ச்சி வழங்கப்பட்டது. சில ஆண்டுகளுக்கு முன்பாக 150க்கு 30 மதிப்பெண் எடுத்தால் தேர்ச்சி என தர மதிப்பீட்டை தமிழக அரசு குறைத்துவிட்டது. செய்முறை தேர்வில் 50க்கு 40 எடுத்து நூற்றுக்கு 70 என மதிப்பிட்டு தேர்ச்சியை வழங்கினர். பொறியியல் கல்லூரிகளில் தேங்கியிருந்த ஆயிரக்கணக்கான இடங்களை நிரப்பிட பெருமளவில் இது உதவியது. இதனால் IIT, NIT, AIIMS போன்ற தேர்வுகளில் தமிழக மாணவர்களால் தேர்ச்சி அடைய முடியவில்லை.

நீட் தேர்வில் 11 மற்றும் 12 வகுப்பு பாட நூல்களில் இருந்து சரிசமமாக கேள்விகள் கேட்கப்படுகின்றன. மத்திய வாரியத் தேர்வுகளில் மேல்நிலை முதலாம் ஆண்டே பொதுத்தேர்வு போல பாடங்கள் நடத்தப்பட்டு மதிப்பிடப்படுகிறது. முதலாம் ஆண்டில் 50 சதவீதமும் இதே போன்று இரண்டாம் ஆண்டில் 50 சதவீதமும் என மதிப்பிடப்பட்டு இறுதியாக 100 மதிப்பெண் என கணக்கிடப்பட்டு மதிப்பெண் பட்டியல் வழங்கப்படுகிறது. ஆனால், தமிழ் மாநில பாடத் திட்டத்தில் 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பெயரளவில் பாடங்கள் நடத்தப்படுகின்றன. பெயரளவில் 'பொதுத் தேர்வு' நடத்தப்பட்டு 100 சதவீத தேர்ச்சி வழங்கப்படுகிறது. ஆங்கில வழிப் பள்ளிகளில் 11வது பாடங்கள் பெயரளவில் கூட நடத்தப்படுவது இல்லை. முதலாம் ஆண்டிலே 12 ஆம் வகுப்பு பாடங்களை தொடங்கிவிடுகின்றன. இப்பள்ளிகள் 11 ஆம் பொதுத் தேர்வுகளின் போது எல்லாவிதமான அறங்களை மீறி மாணவர்களை 12 ஆம் வகுப்பிற்கு அனுப்புகின்றன. அடிப்படையின்றி, பாடத் தொடர்ச்சி இல்லாமல், தெளிவற்று 12 ஆம் வகுப்பு பாடங்களை மட்டும் இரண்டு ஆண்டுகள் படிக்கின்றனர். அதையும் குருட்டு மனப்பாடம் செய்ய செய்து முழு மதிப்பெண் பெற கட்டாயப்படுத்துகின்றனர். இந்நிலையில், ஆண்டு முழுவதும் நீட் தேர்வு உண்டா இல்லையா என தெரியாமல் சரியாக வழிகாட்டப்படாமல், திடீரென்று தேர்வை எழுத தமிழக மாணவர்கள் கட்டாயப்படுத்தப்பட்டனர். நீட் தேர்விற்கு என்னென்ன பாடங்கள், கேள்வி அமைப்பு , பதில் அளிக்கும் முறை குறித்து தமிழக ஆசிரியர்களுக்கே தெரியாத நிலையில், மாணவர்கள் ஒருவாறாக தேர்வு எழுதினர். இதில் அரசு தமிழ் வழி மற்றும் தனியார் ஆங்கில வழி மாணவர்கள் உள்ளிட்ட அனைத்து மாணவர்களுக்கு ஒரே மாதிரியான அனுபவமே கிடைத்தது. வழக்கப்படி தனியார் பள்ளி மாணவர்கள் பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்தனர். நீட் தேர்வில் ஒருசில மாணவர்கள் தவிர மிகக் குறைந்த மதிப்பெண்கள் எடுத்தனர். வசதி படைத்த, நகர்ப்புற, படித்த பெற்றோர்களின் மாணவர்கள் ஓரளவு மதிப்பெண் எடுத்தனர். இந்த சமூக அநீதியால் தமிழ் பெற்றோர்களின், மாணவர்களின் மருத்துவக் கனவு தகர்ந்தது. இதில் மத்திய , மாநில அரசுகள், ஆசிரியர்கள் அனைவருக்கும் சம அளவு பங்குண்டு. கடந்த 10 ஆண்டுகளில் அரசு பள்ளிகளில் படித்த 12 வகுப்பு மாணவர்கள் சுமார் 300 மருத்துவ இடங்களை மட்டும் பெற்று உள்ளனர். அதாவது சுமார் 1 சதவீத அரசு மாணவர்கள் மட்டுமே தேர்வாகி உள்ளனர். ஏறத்தாழ 50 இலட்ச தமிழ் வழி அரசு மாணவர்களில் 300 பேர்களை மட்டுமே அரசு பள்ளி ஆசிரியர்களால் உருவாக்கி அனுப்ப முடிந்திருக்கிறது. தனியார் பள்ளிகள் மற்ற 99 சதவீத இடங்களை பெற்று வந்தன. இந்த ஆண்டு தனியார் பள்ளிகளாலும் இந்த திடீர் நீட் தேர்வால் பெரிய வெற்றியைத் தர இயலவில்லை.

இனி நீட் மற்றும் மற்ற பொது நுழைவுத் தேரவுகளில் 100 சதவீத வெற்றி அடைய என்ன செய்யலாம்? அரசு என்ன செய்ய வேண்டும்? அரசு பள்ளி ஆசிரியர்கள் எது போன்ற கற்பித்தல்- கற்றல் முறைகளை கையாள வேண்டும், பெற்றோர்களின் கடமை என்ன? எது போன்ற பயிற்சி பயனளிக்கும் ? என தொடர்ந்து பார்ப்போம்.

முனைவர் சாமி எழிலன், கல்வியாளர்.
9080228609

எழுதியவர் : சாமி எழிலன் (23-Sep-17, 12:13 pm)
பார்வை : 185

மேலே