புதைக்கப்படும் பூமி
பூக்கள் தூவி பூமணம் பரப்பி
பார் இவள் பார்மகள் என்று
பார்ப்போர் பார்வையெல்லாம் பதிந்தது ...
அதுவோர் பொற்காலமாய்...
தேவைகள் தோன்றிட காடும் நாடாய் மாறிட பார் மகள் அவள் பூமகளாய் சத்தமின்றி நித்தமிருந்தாள்...
தேவைகள் முடியலாம் வேட்கைகள் முடியுமோ?
பூமித்தாயின் நெஞ்சுபிழந்து அவள் ஈரக்குழையிலும் வைரம் அறுத்து உதிரத்தை எண்ணெய்யாய் உறிஞ்சி அவளை வதைக்கும் வர்த்தகர்களாய்...
வேதனை தாங்கியும் பெற்றவள் போலங்கே பிள்ளைகளுக்காய் பொறுமையில் பெரு மகளாய் ...
தேவைக்காய், வேலைக்காய், தொழிலுக்காய், வாழ்வுக்காய்...
எல்லாம் போய் இப்போதிங்கே அழகுக்காய் பூமியை கருவருக்கும் காலம்...
கொங்கிறீட் குழந்தையை தத்தெடுத்து பூமியவள் கருத்தரிக்கும் முன்னரே கருக்கலைப்பு நடந்தேருகின்றது...
ஒரு காலம் வரும் மரத்தை படத்தில் மட்டுமே காட்டி பாடமெடுக்கலாம் பள்ளியில் ..
பாவையோர் பூச்சூட .காகிதப் பூ தொடுக்கலாம் வாடாது...
தண்ணீரை தம்ளர் எண்ணி குடிக்கவும் செய்யலாம் ..
மழையென்னும் பெயரை கதைகளில் சொல்லி கற்பனையில் கோட்டை கட்டலாம்
அதுவரை இந்த புதைக்கப்படும் பூமியில் உயிருடன் இருந்தால் ...
நுஸ்ரா அமீன்