மறைந்த தோழன்

மயிலாடுதுறை பிரபு என் நண்பர், முப்பதாண்டுகளுக்கும் மேலாக. அவர் கல்லூரி மாணவராக இருக்கையிலேயே என்னை வாசகராக வந்து சந்தித்திருக்கிறார். விஷ்ணுபுரம் நண்பர்குழுவில் ஒருவர். எனக்கும் அலெக்ஸுக்கும் பொதுவான நண்பர். அலெக்ஸ் அஞ்சலிக்கூட்டத்திற்கு மயிலாடுதுறையிலிருந்து வந்திருந்தார். இக்கவிதை எனக்கு அலெக்ஸுக்கான மிகச்சிறந்த அஞ்சலி என்று தோன்றியது. பிரபு எழுதி நான் வாசிக்கும் முதல்கவிதை.



ஜெ



மறைந்த தோழன்


மறைந்த தோழன்

தீவிரமான அரசியல் செயல்பாட்டாளன்

அதிகாரம்

சிறு குழுவுக்குள்

பிசிரின்றி

ஏற்படும் ஒருங்கிணைப்பாலும்

தேர்ந்தெடுப்பதில் எப்போதும் குழம்பும்

எளிய மக்களை

ஏதேனும் ஒரு வழியில்

ஏற்க வைப்பதாலும்

மட்டுமே இயங்கும்

என நன்கறிந்தவன்



அதிகாரத்தின்

எல்லா வசதிகளையும்

மகிழ்ச்சிகளையும்

இன்பங்களையும்

அவன் அறிந்திருந்தான்

அதிகாரம் உச்சரிக்கும் சொற்கள்

எவ்வாறெல்லாம்

புரிந்து கொள்ளப்படும்

விளக்கப்படும்

என்பதும்

அவன் அறிந்ததாகவே இருந்தது



அவன்

தனது பாதை

அதிகார அரசியல் அல்ல

என

உணர்ந்த கணம்

நுண்மையானது

பூக்கள் மலரும் கணத்தைப் போல

அவன் அதை உணர்ந்த போது

அதைத் தவிர வேறு எவ்வகையிலும்

தன்னால் உணர முடியாது

என்பதை

அறிந்த பொழுது

சிறு நெருப்பு

காட்டெரிக்கத் தொடங்கும்

தனது யாத்திரையைத் துவங்கியிருந்தது



அரசியலும் அதிகாரமும்

பற்றிய சிந்தனைகள்

அவன் மனதை நிரப்பியிருந்தும்

தான் சந்தித்த

தன்னை சந்தித்த

ஒவ்வொரு மனிதனிடமும்

அன்பின்

பிரியத்தின்

சாரல்களை

அவன் தூவிக் கொண்டிருந்தான்



அவன் உணர்ச்சி வசப்பட்டிருக்கிறான்

அவன் கண்ணீர் சிந்தியிருக்கிறான்

அவன் நியாயம் கேட்டிருக்கிறான்

ஆனால்

துலாத் தட்டுகளின் ஏற்ற இறக்கங்களுக்கு அப்பாலும்

நீதி இருக்கிறதென

நீதி

எப்போதும்

எங்கும்

இருக்கிறதென

அவன் உணர்ந்த கணத்திலிருந்து

எப்போதும் புன்னகைத்துக் கொண்டிருந்தான்

தேவனைப் போல



***



பிரபு மயிலாடுதுறை

எழுதியவர் : (10-Oct-17, 12:51 am)
Tanglish : maraintha thozhan
பார்வை : 87

மேலே