கைப்பிடித்து காதல் தருகிறேன் வா

கைப்பிடித்து காதல் தருகிறேன் வா
==================================

ஏது நாளின்,
நிலா இரவொன்றில்
நீ எனக்குப் பிடித்துப்போனாய் ம்ம்ம், தெரியாது
உன் மௌன துளிகளின் அடர்த்தியில்
எத்துளியில் என்னை
அடைத்திருந்தாய் ம்ம்ம், தெரியாது

அன்று, நம் உரையாடலில் சொல்லியிருந்தாய்,

காணும்போதும்,
எதிர்க்கொள்ளும்போதும்,
உன் மௌனம்,
என்னிடம் எதை நிரப்பி போனதோ,
அதையேதான்,
என் மௌனமும்,
உன்னிடம்
நிரப்பி விரைய நினைத்திருக்கலாம் என்று,

அதெல்லாம் நினைவில்லை,
இப்போதுகூட,
நம்மைச்சுற்றி ஒருவருமில்லை,
நான் உணருகிறேன்,
நீ என் கண்களை நேரிட சிரமிக்கிறாய்,
இன்னும் நான்,
உன் கருமணி தோட்டாக்களின் எதிர்வினையிலிருந்து
சதா
தப்பித்துக்கொண்டிருக்கும்
ஒரு கிருமினல் குற்றவாளிதான்

என்னை உனக்கு அறிமுகப்படுத்தும் சிரமத்தை,
என்றுமே
நீ எனக்கு கொடுத்ததில்லை,
உன் முன்னால்,
என்னை சூழ்ந்திருக்கும் எல்லாமே
அதை செய்தாகிவிட்டது,
உன்னிடம்,
என் பிழைகளைச்சொல்லிச் சிரிக்கும் இடத்தில்
நீ உன்னை நிறைத்திருக்கிறாய்,
இதெதிலும்
நிர்பந்தமில்லை என்கிறாய்,

பேசிக்கொண்டே போனதில் மறந்துவிட்டேன்,
இதோ சற்று உள்ளே சென்றால்
இங்கே
நிறமும்
வாசனையுமில்லாத ஒரு பாதை இருக்கு
காண்பிக்கிறேன் வா,
என்றோ வாசமிழுவிட்டவைகளின் கல்லறையின் வழி இது
இந்த வழியில்
ஒருநாள்
அன்பிற்கு நிறமிருந்தது, வாசனை இருந்தது
இவ்வழியே பயணித்தவர்கள்
அதை உடுத்தியும்
சுவாசித்தும்
மீதியை எச்சிலிட்டும் போயிருந்தார்கள்,
துர்நாற்றம் பிடித்துவிட்ட
அந்த மிச்சங்களை
துடைத்து,
சுத்தப்படுத்தி,
அடைப்பிட்டு வைத்திருக்கிறேன்,
இனி உனக்கு
அதீதமில்லாமல் தவணை முறையில்
தருகிறேன்,
அவ்வப்போது கொஞ்சம் பூத்துக்கொள்,
தீரும்போதும்,
சுவாசம் ஓங்கும்போதும்,
என்னிடம் ஓடிவா, மீண்டும் தருகிறேன்,
கொஞ்சம் பூக்கலாம்,
இப்படியே பூத்து பூத்து
நாம் ஒரு பூந்தோட்டம் ஆகலாம்,,,

முதல் முறை,
இதுவும் தோல்வி தழுவிடுமா என்றறியாமல்
எதை எதையோ
உடைத்துக்கொண்டு போகிறது
உன் சிரிப்பு ,
என்னையும் கட்டி இடுகிறது,
இப்படி இப்படி,
நீ
தினமும்
தந்துகொண்டிருக்கும் தேவதை நிமிஷங்களுக்கு நன்றி,
வேறு வழி இல்லை,
என் வழக்கங்கள்
தப்பிவிடாமல் இருக்கும் வார்த்தைத் தடைகளை
இங்கே
அமல் செயகிறேன்,

"பூக்காரன் கவிதைகள்"

எழுதியவர் : Anusaran (28-Oct-17, 2:00 am)
பார்வை : 267

மேலே