பாதங்களால் நிறையும் வீடு

இருள் சூழ்ந்த ஊரடியோ
கண்ணம்மா - சுற்றி
புனல் சூழ்ந்த வெள்ளமடி
கண்ணம்மா...
திசையில்லா தேசமடி
கண்ணம்மா - என்
நசையெல்லாம் அத்தேசந்
தானம்மா... !

ஏதேதோ சத்தமடி
கண்ணம்மா - என்
இருகாதில் விழுந்ததடி
கண்ணம்மா...
எதிரிகளின் சத்தமென
கண்ணம்மா - வாசல்
இறங்கித்தான் வந்தேனே
நானம்மா...!

புரியாத தேசமடி
கண்ணம்மா - முற்றும்
புதிரான பாஷையடி
கண்ணம்மா..
அறியாத பயம் வந்து
கண்ணம்மா - என்னை
அழவைத்து பார்க்குதடி
கண்ணம்மா...!

அரண்மனை வாசலத்தான்
கண்ணம்மா - ரொம்ப
அவசரமா தாண்டிவந்தேன்
கண்ணம்மா...
அவசரமா வந்ததில
கண்ணம்மா - பாதை
அறவேதான் மறந்தேனடி
கண்ணம்மா...!

கற்றறிந்தேன் ஏதேதோ
கண்ணம்மா - என்
சிற்றறிவிற்க் கெட்டும்வரை
கண்ணம்மா...
கல்லாத தொன்றுமில்லை
கண்ணம்மா - என
கர்வங்கொண்டு திரிந்தேனடி
கண்ணம்மா...!

ஒன்றோடு ஒன்றாக
கண்ணம்மா - இரு
ஒன்றிணைய மூன்றாச்சு
கண்ணம்மா....
மூன்றுக்குள் மூன்றுண்டு
கண்ணம்மா - அது
முழுசாக விளங்கலையே
கண்ணம்மா....!

அஞ்சுதல நாகமடி
கண்ணம்மா - அதில்
அஞ்சுவகை நஞ்சிருக்கு
கண்ணம்மா...
ஆயர்பாடி கண்ணனைப்போல்
கண்ணம்மா - ஆடி
ஆட்டிவைக்க முடியலடி
கண்ணம்மா....!

வாடகை வீடடியோ
கண்ணம்மா - அதன்
வனப்பெல்லாம் தேயுதடி
கண்ணம்மா....
வாசல் ஆடுதடி
கண்ணம்மா - கள்வர்
வரும்நேரம் ஆனதடி
கண்ணம்மா....!

உயிர்பாதம் நிறைந்தவொரு
வீடம்மா - இன்று
உருகுலைந்து விழுந்ததடி
கண்ணம்மா....
உயிர்போன வழியெதுவோ
கண்ணம்மா - அந்த
உறவிலிக்கே வெளிச்சமடி
கண்ணம்மா....!

வந்தவழி மறந்ததடி
கண்ணம்மா - வாழ்ந்த
வீடதுவும் சொந்தமில்லை
கண்ணம்மா...
போகும்வழி தெரியலடி
கண்ணம்மா - போனால்
திரும்புவேனோ புரியலடி
கண்ணம்மா....!

எழுதியவர் : கோபிநாதன் பச்சையப்பன் (14-Nov-17, 5:08 pm)
பார்வை : 107

மேலே