கவிதையடி நீ எனக்கு
ஜன்னல் இடைநுழைந்து
என்னை எழுப்பிவிடும்
காலை கதிரவனின்
கண்கூசும் ஒளியும் நீ...
அதிகாலை புல்நுனியில்
படுத்துறங்கும் பனித்துளி நீ...
என் வீட்டு வாசலில்
எழுதிவைத்த கோலமும் நீ...
உறங்கும் குழந்தையிலிருந்து
உதிரும் புன்னகை நீ...
மழைக்கால பேருந்தின்
ஐன்னல் ஓரம் நீ...
மழலைகள் கொண்டாடும்
மலைச்சாரல் நீ...
முதல் எட்டுவைக்கும் குழந்தையின்
முத்துகொலுசொலி நீ...
எதிர்பாரா நேரத்தில்
இரண்டுவயது குழந்தை இட்ட
எச்சில் முத்தம் நீ...
இரவுநேர மொட்டைமாடியின்
இலவச தென்றல்காற்று நீ...
நிலவின் நிழல் நீ....
என் நினைவின் நிஜம் நீ...
நண்பகல் வெயிலும் நீ...
நடுநிசி குளிரும் நீ...
என் பகலுடன் உறவாடும்
நினைவிலும் நீ...
என் இரவினை களவாடும்
கனவிலும் நீ...
உன்னிடம் சொல்ல துடிக்கும்
காதலும் நீ...
சொல்லவிடாமல் எனைதடுக்கும்
தயக்கமும் நீ...
என்ன யோசித்தாலும்
எவ்வளவு முயற்சித்தாலும்
என் கற்பனையால் கட்டமுடியாத
அதிசயக் கவிதையடி நீ...
்