திருக்குறள் சிறப்பு-தண்டபாணி தேசிகர் பார்வையில்

திருக்குறள் சிறப்பு -தண்டப்பாணி தேசிகரின் பார்வையில்

திருக்குறளின் சிறப்புகளில் மகா வித்துவான் தண்டபாணி தேசிகரின் கருத்துக்களில் இரண்டை பற்றி மட்டும் எடுத்து இங்கு எழுதி உள்ளேன்.:

திருக்குறள் அழியாப் பெருமையுடன் விளங்குவது ஏன்?

பொதுவாக நம் நாட்டு இலக்கியங்களுக்கும் பிற நாட்டு இலக்கியங்களுக்கும் வேறு பாடு உண்டு

பிற நாட்டு இலக்கியங்களில் கவிஞருடைய அல்லது எழுதியவருடய அக வாழ்வு, புறவாழ்வில் உண்டான துன்ப இன்பங்களை அடிப்படையாகக் கொண்டு மலர்ந்து, விருப்பு வெறுப்புக்களை கொண்டு மணங்களை வீசுபவையாக இருக்கும். இவை மலர்ந்த காலத்தில் மனதை கொள்ளை கொள்ளும் மலர்களை போல் தோற்றமளித்து பெரும் புகழ் அடையும். காலம் கழிந்த பின்பு வாடிய மலர்களை போல பழங்கதை தெரிந்து கொள்ளும் அளவிற்கு பயன்படும்.
நம் நாட்டு இலக்கியங்கள் உலகியல் தத்துவங்களை அடியொற்றி எழுதுபவையாக இருக்கின்றன. கவிஞனின் வாழ்க்கைத்தரம் அவையில் தோன்றுவதில்லை..
கவிஞனின் வாழ்க்கை தரம் வறுமையில் வயிறு ஒட்டி நிற்கும், ஆனால் அவன் கவிதையில் அவைகளை காண முடியாது, அவன் அறிவுலகத்தில் தான் ஒரு அரசனாகி ஆனையும் தானையும் புடை சூழ உலா வந்து படிப்பவர்களையும் அந்த சூழலுக்கு உட்படுத்தி விடுவான்.
அதே போல் துறவுக்காவியமும் செய்வான் உடும்பு போல் உற்றார் உறவினரை பற்றி நின்று பெண்டிரும், உண்டியும் இன்பம் என்றிருக்கும் பெருமக்களையும் அரச பதவியை நிலையென வாழும் மன்னாதி மன்னர்களையும் சீவகன் துறவு கொண்டது போல நொடியில்
மாற்றி விடும்
நம் நாட்டு புலவர்களின் வாழ்க்கைக்கும் கவிதைக்கும் இயைபு இருப்பதில்லை. அவர்கள் தம் வாழ்க்கையையோ அதில் விளையும் கோப தாபங்களையோ,பகைமை புகையையோ நட்பு தென்றலையோ வைத்து காவியம் எழுதுவதில்லை. உலகம் உணர்ச்சி நிலையில் உயர வேண்டும், அதற்காக தம் உணர்வை தம் வாழ்க்கையினின்று பிரித்து உயர்ந்தோருடைய குறிக்கோள் வாழ்வில் வைத்து அதுவே எங்கும் தோன்ற வேண்டும் என்று இலக்கியங்களை எழுதுகிறார்கள். அதனால்தான் நம் நாட்டு காவியங்களை வைத்து கவிஞனின் வாழ்க்கை வரலாற்றை கண்டு பிடிக்க முடிவதில்லை.
நம் திருவள்ளுவர் வாழ்ந்தது குடிசை வாழ்க்கையா, மாளிகை வாழ்க்கையா என அறிய முடியவில்லை. ஆனாலும் அவர் சொல்லும் கருத்துக்களில் அரசின் ஆண்மை பளிச்சிடுகிறது, அமைச்சர் அறிவு அலை வீசுகிறது, ஒற்றருடைய அரசியல் தந்திரம் ஆழங் காணப்படுகிறது. தூதருடைய சொல் வன்மை தெரிகிறது. எழில் நிறைந்த இளம் மங்கையரோடு நுகரும் இன்பத்தேன் எங்கும் களியூட்டுகிறது. அறவோராகவும், துறவோராகவும் இருந்து செய்யும் அறவுரைகள் ஒளிவிடுகின்றன்.
இதிலிருந்து இவர் எத்தகைய வாழ்க்கையினர் என்று துணிந்து கூற முடியும்? முடியாது. இதனாலேயே இந்நூல் எல்லார் வாழ்வோடும் ஒட்டி எல்லார்க்கும் இன்பம் பயப்பதாக.பொது நூலாக அழியாப்பெருமையுடன் விளங்கிக்கொண்டிருக்கிறது.

சட்ட நூலா ? தத்துவ நூலா ?

சட்டம் இது செய் இது செய்யாதே என்று மக்களை ஒரு வரையறைக்கு உட்படுத்துவது, கட்டாயப்படுத்துவது, எல்லோருக்கும் ஒரு தன்மையிராமல் மக்களின் வயது, இனம் இடம் அறிவு ஆண்மை முதலியவற்றிற்கு ஏற்ப மாறுபடுவது.
தத்துவம் உண்மை, உண்மைக்கு மாற்றமில்லை, அழிவில்லை, என்றும் எங்கும் யாருக்கும் ஓருபடித்தாகவேயிருக்கும். தத்துவம் ஒரு கண்ணாடி, எல்லாரும் அதனை கையில் எடுத்து பார்க்கலாம், அவரவரின் பரிபாகத்திற்கும் அனுபவத்திற்கும் ஏற்ப அது விளக்கம் காட்டும்..
சட்டத்தை கண்டு அஞ்சுவார் சிலர், மீற வேண்டுமென்று வீறுகொண்டு எழுவார் சிலர். தத்துவத்தை கண்டு யாரும் தயங்க மாட்டார்கள், கடக்கவும் கருத மாட்டார்கள், அவர்களை அறியாமலேயே அவர்களை அது அகப்படுத்தி விடும்

திருக்குறள் பொது நூல் ஏன்?
நாட்டில் உயர்வு தாழ்வு கற்பித்து ஒரு கண் வெண்ணெய், ஒரு கண் சுண்ணாம்பு வைத்து பார்க்கும் மக்கள் இகழப்படுகிறார்கள். வேற்றுமையை வளர்ப்பவர்கள் வெறுக்கப்படுகிறார்கள். ஒற்றுமையை வளர்ப்பவர்கள் போற்றப்படுகிறார்கள். அது போலவே திருக்குறள் இன வேற்றுமை, மனவேற்றுமை, பண வேற்றுமை, குண வேற்றுமை, இவைகளுக்கு பகையாய் விளங்கி எங்கும் ஒற்றுமை எனும் தத்துவத்தை பரவுகிறது.அதனால் இவை தத்துவ நூலாகவும், பொது நூலாகவும் விளங்கி தெய்வத்தன்மை பெற்றதாக விளங்குகிறது./

திருக்குறளுக்கு அதை இயற்றிய திருவள்ளுவர் பெயர் வைக்கவில்லை !
இந்நூலுக்கு பெரும்பாலோரால வழங்கப்பட்ட பெயர் திருக்குறள் என்பது.
இளங்கோவடிகள் “சிலப்பதிகாரம் என நாட்டுதும் யாம் ஓர் பாட்டுடைச்செய்யுள்” என்று எடுப்பாக நூற்பெயரை சொல்லுகிறாரே, அது போல திருவள்ளுவர் எங்கேயாவது தம் நூலுக்கு இது பெயர் என்று எடுத்து கூறியுள்ளாரா?
ஓர் ஆங்கில புலவர் கூறிகிறார் “தனக்கு ஓர் இயற்பெயர் இல்லாமல் தான் செய்த நூலுக்கும் ஒர் பெயர் சூட்டாமல் உயர்ந்த நூல் ஒன்றை செய்து உதவிய வள்ளலை நாம் எப்படி பாராட்ட வேண்டும்” எனவே திருக்குறள் என்று அவர் சூட்டிய பெயரன்று, அது உலகம் சூட்டிய உயர்ந்த பெயர்.

பெயர் எப்படி வந்ததாகினும் குறட்பாவினால் ஆகிய இந்நூல் திருக்குறள் என்று அழைக்கப்பெற்றது என்பதற்கு ஐயமன்று.
இதில் “திரு” என்பது அடை மொழி. இதன் சிறப்பு நோக்கி சேர்க்கப்பெற்றது இங்கனமே
“திருவாசகம்” “திருவுந்தியார்” “திருக்களிற்றுப்படியார்” முதலிய நூல்களும் வழங்குகின்றன.
“திரு” என்பது பத்தொன்பது வகையான பொருள்களை உணர்த்தும் ஒரு சொல்லாக திகழ்கிறது.
அங்கனமாயின் ஒரு சொல் பல பொருட்களை உணர்த்துவது எங்ங்கனம்? என்பதை ஆராய்தல்
மிகவும் இன்றியமையாததாகும். எந்த சொல்லும் வண்ணம் வடிவு அளவு சுவை தொழில் முதலான பண்புகளை உணர்த்தும்போது இடுகுறியாய், பின்னர் அப்பண்புகளுடைய பொருளுக்கும், அப்பண்புகளால் விளையும் பெருமை, சிறுமை, நன்மை,தீமை, இன்ப துன்பம் முதலான பயன்களுக்கு காரணக் குறியாய்ப் பெயராதலை, இலக்கணக் கண்ணாடியின் வாயிலாக பல பொருள் ஒரு சொல்லை நோக்குவார் யாவரும் அறிவர்.
இந்நிலையில் “திரு” என்பது அழகையுணர்த்தும் சொல்லாய், அழகை உடையவையும், அழகு விளைதற்கு காரணமான “செல்வம்” “தெய்வத்தன்மை” முதலியவற்றையும் அழகாலும், அதன் பொருளாலும் விளையும் பெருமை, பொலிவு, முதலியவற்றையும் இத்தனைக்கும் காரணமான நல்லூழையும் உணர்த்தும் உணர்த்தும் பெயராகிறது.

முடிவுரை

இந்நூல் தோன்றிய காலம் முதல் தமிழ் உள்ள வரையில் வாடாது அழியாது வளரும் தனிப்பெருமை படைத்தது. இதனிடம் கவிஞரும், புலவரும், பிறரும் அளவற்ற மதிப்பு வைத்தனர். ஆதலால் இதன் தன்மை நோக்கி பல் பெயர்களை படைத்து வழங்கலாயினர்.
திருவள்ளுமாலையில் முப்பால், குறள், பொய்யாமொழி, வாயுறைவாழ்த்து, முதுமொழி என்ற பெயர்கள் வழங்குகின்றன, இவற்றொடு உத்தர வேதம், தெய்வ நூல்,திருவள்ளுவர்,தமிழ் மறை, பொது மறை,திருவள்ளுவப்பயன், பொருளுரை அறம் என்ற பெயர்கள் உள்ளனவாகத் திருக்குறள் ஏடுகளும், பதிப்புகளும் கூறுகின்றன.

எழுதியவர் : தாமோதரன்.ஸ்ரீ (14-Dec-17, 11:35 am)
சேர்த்தது : தாமோதரன்ஸ்ரீ
பார்வை : 126

மேலே