தேசத்தின் தூக்கம்

==================
தண்ணீரைப் போர்த்தி மீனும் உறங்க
=தாமரையை போர்த்திக் குளமும் உறங்க
மண்போர்த்தி வேரும் மரமாய் உறங்க
=மலர்போர்த்தித் தேனும் மகிழ்வாய் உறங்க
வெண்மேகம் போர்த்தி வானம் உறங்க
=வெளிச்சத்தைப் போர்த்தி இரவும் உறங்க
கண்ணீரைப் போர்த்தி கனவும் உறங்க
=கவலைகளைப் போர்த்தி மனசும் உறங்கும்.

நீர்வற்றிக் காய்ந்து நதிகள் உறங்க
=நிலமெங்கும் பயிர்கள் நெருப்பில் உறங்க
ஏர்பூட்டும் உழவன் இறுதி உறங்க
=ஏழ்மைக்குள் நாடு இன்னும் உறங்க
சீர்செய்யா தவர்கள் சிறப்பாய் உறங்க
=சீர்கெட்ட மக்கள் சேர்ந்தே உறங்க
கூறுகெட்டு நாட்டைக் குத்தகைக் கிட்டு
=குந்தகத்தில் தூங்க கூடிடு வோமோ?

கட்சிக்கொடி போர்த்திக் கொள்கை யுறங்க
=காவல்தனை போர்த்தி கள்வர் உறங்க
வெட்கமெனும் போர்வை விட்டு விலக்கி
=வெண்வேட்டிப் போர்த்தி வேந்தன் உறங்க
குட்டிச்சுவர் போர்த்தி குடிகள் உறங்க
=கொலைவாளைப் போர்த்திக் கொடூரம் உறங்க
பட்டப்பகல் கொள்ளை பணத்தைப் போர்த்தி
=பதவியெனும் நாற்காலி பவிசாய் உறங்கும்

ஊழல்களைப் போர்த்தி அரசும் உறங்க
=உதவாமை போர்த்தி சட்டம் உறங்க
சூழல்களின் சாதகப் போர்வை போர்த்தி
=சுகமாக எதிரணி தானும் உறங்க
வாழவைப்போம் என்னும் வார்த்தைப் போர்த்தி
=வளமோடு அரசியல் வாதிகள் வாழ
தோழமையைப் போர்த்தித் துரோக முறங்க
=தொண்டனென நாளும் தூக்கம் தொலைப்போம்.

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (இலங்கை) (18-Dec-17, 2:28 am)
சேர்த்தது : மெய்யன் நடராஜ்
Tanglish : thesathin thookam
பார்வை : 79

மேலே