பெண் எனும் பெருங்கல்

பேரருவி அடித்து வந்திட்ட
சிறு கல்லா நான்?..

ஏனோ நெடிதுயர்ந்த
மரவேரின் விரலிடையில்
சிக்கியதுபோல் உணர்வு ...

நான் அதோ அந்த வேம்பின்
அடியில் நிழல் தீண்டி
ஓய்வெடுக்க செல்வேனோ ...

இல்லை அந்த இரும்பு
பட்டறையில் அடிமையாகச்
செல்வேனோ ...

தினம் தினம் கனவு உணவு
சமைக்கின்றேன் - விடியலுக்கு
படையலிட ...

மலராக பிறந்திருந்தால்
மாலையாகி இருப்பேனோ ?
இல்லை இல்லை அங்கே
பிணம் செல்லும் பாதையை
அலங்கரிக்க செல்வேனோ ...

கல்லாக பிறந்து கல்லறையில்
சுமைதாங்கும் கழுதையானதாய்
உணர்வு...

ஆதி காலத்தில் பிறந்திருந்தால்
கல்வெட்டு என்று காட்சி பொருளாகி
இருக்கலாமோ ...

ஏனோ தற்போதைய நிலவரப்படி
நான் கறைபோக்கும் - சலவைக்கல்
என்பதை என்னவென்று சொல்ல...

எழுதியவர் : என் அக்கா சிவயட்சி (24-Dec-17, 8:05 pm)
சேர்த்தது : தாரா கவிவர்தன்
பார்வை : 206

மேலே