இரவும் வானமும் போல
இரவும் வானமும் போல
=======================
மித்ரா
வாழ்க்கை நமக்கு
எதற்குமே
சமயங்களைக் கொடுக்கவில்லை
நம் சந்திப்பின்
இடைவெளிகளே தீர்மானிக்கும்
உனக்கு என்னால்
அந்த கிடைத்த நேரத்தில்
என்ன கொடுக்க இயலும் என்பதை
என்றாவது ஒருநாள்
ஒரு சாலையில் வைத்து உன்னை சந்திக்கநேரிடும்
நமக்கு நம்மிடமென்று
சொல்லி அழவோ
பகிர்ந்துகொள்ளவோ நிறைய இருக்கலாம்
அதற்கான
அதிகபட்ச சமயங்கள்
அங்கு இல்லாமல் போகும்
கிடைக்கின்ற நிமிடங்களில்
எப்போதுமான, அழகிய புன்னகை மாறாமல்
ஹாய், ஆர் யூ ஆல்ரைட்
என்றுவிட்டு
அந்த இடம் விட்டு நகர்ந்துவிடுவேன்
புரிந்துகொள்,
அந்த சூழலுக்காக, மன்னித்துக்கொள்
அதிக பட்சம்
ஒரு காஃபி ஷாப்பில்
இருவர் மட்டுமே இருக்கும் மேசையில்
எதிரெதிரே அமர்ந்து
நானும் நீயும் காஃபி பருகும்
நேரம் வாய்க்கலாம்
அப்போதும் கூட
நமக்கு
பகிர்ந்துகொள்ளவோ
சொல்லிக்கொள்ளவோ நிறைய இருக்கும்
அதை விட்டுவிடலாம்,
பதிலாக
உன் சமயங்களில்,
ஒரு பத்து நிமிடங்களைக்கொடு
உன் வாழ்நாளில்
நீ மறக்க முடியாதது மாதிரி
அதை அழகாக்கி
திரும்ப உன் கைகளுக்கு
கொடுத்துவிடுகிறேன்
பெயர்த்தெரியாத
ஒரு புதுப்பூவின் வாசனையை
உன்னைச்சுற்றியெங்கும்
தூவிவிட்டு
அங்கிருந்து காணாமல் மறைந்துவிடுகிறேன்
நீ இமைக்காமல்
பார்த்துக்கொண்டிருக்கும் நான்
அந்த சாலையின்
முதல் முனைவரைச்சென்று
ஒரு தொலைவில்
கரும்புள்ளியாகி மறையும்வரை
அந்த வாசனை,
உன்னிடமிருந்து இடம்பெயராமல் இருக்கட்டும்
அந்த நேரமின்மையை
புரிந்துகொள்
ஒருநாள்
உன்னிடம் நானும் என்னிடம் நீயுமென
முழுதாக
புதைந்துகிடக்கும் முழுநீள இரவொன்று கிடைக்கும்,
தொடுக்காத
மலர்க்கூட்டங்களுக்கிடையில்
தோள்பட்டையும் மார்பும்
தருகிறேன்,
உன் முகம் திறக்கும்
அந்த இருளிற்கு
அன்று விடுப்புக்கொடுத்துவிடலாம்
பேசிக்கொண்டே இரு,
இந்த உணர்வுகள்
என்னிடம் மட்டுமே
கிடைப்பதாக
அன்றெல்லாம் சொல்லிக்கொண்டே இரு,
அனுசரன்