காலத்தை வெல்ல யாரால் முடியும்

ஸ்டீவன் ஹாக்கிங். கலிலியோ கலிலி இறந்து சரியாக 300 ஆண்டுகளுக்குப் பிறகு பிறந்த மாமேதை.

நியூட்டன், ஐன்ஸ்டீனுக்குப் பிறகு மிகப் பெரிய விஞ்ஞானியாகக் கருதப்படும் ஸ்டீவன் ஹாக்கிங் எழுதிய ‘காலத்தைப் பற்றிய சுருக்கமான வரலாறு’(எ ப்ரீஃப் ஹிஸ்டரி ஆஃப் டைம்) எனும் புத்தகம் இன்று உலக அளவில் பேசப்படும் புத்தகமாக இருக்கிறது. காலம் - வெளிபற்றிய சிந்தனைகள் காலம்காலமாக இன்றளவும் தொடர்ந்த வண்ணம் உள்ளன. அரிஸ்டாட்டிலிலிருந்து கலிலியோ, நியூட்டன், ஐன்ஸ்டீன், ஹாக்கிங்வரை காலத்தைப் பற்றிய சிந்தனை தொடர்ந்துகொண்டே இருக்கிறது. காலத்தைத் தனியாகவும் வெளியைத் தனியாகவும் பார்த்த மரபை மாற்றி காலம் - வெளி என்னும் புதிய கருதுகோளை உருவாக்கினார் ஐன்ஸ்டீன். இந்தச் சிந்தனைக் கோட்பாடு கலையையும் வெகுவாகப் பாதித்தது. இதனால், அமெரிக்காவில் அலெக்ஸாண்டர் கால்டர் நிற்கும் சிற்பங்களை (ஸ்டேபைல்ஸ்) உருவாக்குவதிலிருந்து நகரும் சிற்பங்களை (மொபைல்ஸ்) உருவாக்குவதற்கு மாறினார்.

மனித அறிவு போதாது

ஆனால், காலம் - வெளிபற்றிய உண்மைகளை அவ்வளவு தூரம் தெரிந்துகொள்ள வேண்டிய அவசியம் இல்லை; அதற்கு மனித அறிவு போதுமானதில்லை என்று சொல்லியிருக்கிறார் 24 -வது தீர்த்தங்கரரான வர்த்தமான மகாவீரர். இதையேதான் அறிவினால் ஆகுவது உண்டோ என்று வள்ளுவர் கேட்கிறார். காலம் - வெளி கருதுகோளைப் புரிந்துகொள்வதில் மனித அறிவின் போதாமை ஒருபுறம் இருந்தாலும், வாழ்க்கையை, அதன் இருத்தலை, அதன் இன்மையை, இன்மையின்மையைப் புரிந்துகொள்ள இந்தப் பிரக்ஞையை மனிதன் வைத்துக்கொள்ளத்தான் வேண்டும்.

லயம், தாளம்

இசையுலகில் காலத்தை லயம் என்பார்கள். காலமான காலம் - அகாலம், லய ஞானம், தாள ஞானம் என்ற வார்த்தைகளெல்லாம் இசையுலகில் புழங்கும் வார்த்தைகள். தாள ஞானம் இல்லாதவனை லய ஞானம் இல்லாதவன் என்று பழிக்கும் போக்கு இசை உலகில் சர்வ சாதாரணம். காலத்தை நாள், மணி, நிமிஷம் என்றெல்லாம் குறைத்துக்கொண்டே வந்து வினாடிகளைக் கொண்டாடும் பழக்கம் ரொம்பவும் தாமதமாகவே மேற்கத்தியர்களிடம் வந்தது. தமிழர்களோ, மனிதர்களிடம் இயல்பாகத் தோன்றும் கண் இமைத்தலையும் கை நொடித்தலையும் ஒரு மாத்திரை அளவாகப் பல நூற்றாண்டுகளுக்கு முன்பே வரையறுத்துள்ளனர். தாளம் என்பது நாதஸ்வரத்தில், தவிலில், மிருதங்கத்தில், கஞ்சிராவில், கொன்னக்கோலில், நடன ஜதியில் என்று எல்லாவற்றிலும் நிரவியுள்ளது.

க்ஷணப் பிரக்ஞை

இந்த லயத்தில் க்ஷணப் பிரக்ஞையை வென்றவர்கள் என்று யாரையேனும் குறிப்பிட முடியுமா என்றால், முடியாது என்கிறார்கள் மிகப் பெரிய லய மேதைகள். காலத்தை யாரால் வெல்ல முடியும்? லய - தாள உலகத்தைச் சிருஷ்டித்த, டமருகத்தைத் தன்னகத்தே கொண்ட ஈசனால் மட்டும்தான் காலத்தை வெல்ல முடியும் என்கிறார் மிருதங்க வித்வான் பாலக்காட்டு மணி அய்யர்.

ஆனால், லய உலகின் மேதைகளாக நம் மனதில் பவனிவரும் லயச் சக்கரவர்த்தி திருமெய்ஞ்ஞானம் நடராஜ சுந்தரப் பிள்ளை, கும்பகோணம் தவில் தங்கவேல் பிள்ளை, யாழ்ப்பாணம் தவில் தட்சிணாமூர்த்தி, மன்னார்குடி கொன்னக்கோல் பக்கிரியாப்பிள்ளை போன்றோர் அலங்கரித்த லய ராஜ பாதைகளை நாம் எப்படி மறக்க முடியும்?

திருப்புடைத்தாள மல்லாரி

இந்த நூற்றாண்டின் இணையற்ற லயச் சக்கரவர்த்தியாக திருமெய்ஞ்ஞானம் நடராஜ சுந்தரப் பிள்ளையை லய உலகம் இன்னும் போற்றி மகிழ்கிறது. சுவாமி புறப்பாட்டின்போது அவர் வாசிக்கும் திருப்புடைத்தாள மல்லாரியில் எழும் லய அலங்காரத்தைக் கேட்டு ஆச்சர்யம் கொள்ளாதவர்களே இருக்க முடியாது. அவர் வாசித்த ஆதி தாளம், அட தாளம், கும்ப தாளம், திஸ்ர தாளம், மிஸ்ர தாளம், சங்கீர்ணம் , அதன் ஜாதி வகைகள், அதன் 108 தாள வகைமைகள் போன்ற எண்ணிறந்த கணக்குவழக்குகள், தட்டு, லகு, அச்சரம் சார்ந்த பிரமாண்டமான உலகம் - நிமிடங்களை உடைத்து விநாடிகளை விரட்டி அவர் சிருஷ்டித்த மஹோன்னதமான லய உலகம் - இன்றும் நம் கண் முன் நிற்கிறது.

நொடியை உடைத்துப் போடும் உசு என்னும் காலப் பிரக்ஞை அவருக்குத்தான் எத்தனை கட்டுப்பட்டுக் கிடக்கும்? சமம் என்னும் தட்டுக்கு அடுத்த உசு தாளத்தில் அவர் முடிக்கும் பல்லவிகளாகட்டும்; மல்லாரிகளாகட்டும்; ரத்திகளாகட்டும்; எடுத்த நிமிடத்தில் முடிக்கும் காலப் பிரக்ஞை அவரைத் தவிர வேறு எவருக்கும் கிட்டவில்லையே? சென்ற நூற்றாண்டின் மிகப் பெரிய அந்த லய மேதயைப் பற்றிய வியப்பு இன்னும் அடங்கவில்லையே?

அவர் ஒருபுறம் என்றால், அவருக்குத் தவில் வாசித்த கும்பகோணம் தங்கவேல் பிள்ளை அப்படியே அவருக்கு நேர் எதிர்ப்புறம். மெதுவாகச் செல்லும் விளம்ப காலத் தாளத்தை அமர்த்திக்கொண்டு, தான் வாசிக்கும்போது துரித காலத்தில் வாசிக்கும் விந்தை இன்று நினைத்தாலும் ஆச்சர்யமாக இருக்கிறது.

நாச்சியார்கோவில் தவில் ராகவப்பிள்ளை தன் வலந்தலை தொப்பியில் தவில் குச்சியால் அடித்த 'தொம்' என்னும் சொல் இன்றளவும் தம் காதுகளில் ரீங்கரித்துக்கொண்டிருப்பதாகக் கூறுகிறார்கள் இன்றைய பெரும் நாதஸ்வர வித்வான்கள். லயம் போன்றே தொடர்ந்து ராகம் வாசிக்கும் ராக ஆலாபனை தாளத்துக்குக் கட்டுப்படுமா என்று கேட்டவர்களும் அக்காலத்தில் இருந்தனர். நாதஸ்வரத்தில் மணிக் கணக்காக வாசிக்கப்படும் ராகத்துக்குத் தாள லயம் எதற்கு என்று கேட்டோர் சிலரும் உண்டு.

ஆனால், ராஜரத்தினம் பிள்ளையின் நயாகரா அருவி போன்ற ராக மழையும் தாளம் என்னும் லயத்துக்குள்ளேயே அடங்கிவிடுகிறது என்பதை, 'தொம், தொம், தா கிட தொம்' என்று தவிலில் தாள லயத்துக்குள் அடங்கிவிடுகிறது என்பதை நினைத்தால் வியப்பாகத்தான் இருக்கும்.

துரித லய கதி

தாள லயம் என்பது கலைஞர்கள் வாசிக்கும் இசைக் கருவிகளைச் சார்ந்தது மட்டும் அல்ல என்கிறார் பாலக்காட்டு மணி அய்யர். அன்றாட மனித வாழ்க்கையில் ஒவ்வொரு மனிதருக்குள்ளேயும் ஒரு காலப் பிரக்ஞை இருக்கிறது. பரபரப்பாகப் பணியாற்றும் ஒரு மனிதரிடம் துரித லய கதியும் நிதானமாகச் செயல்படும் ஒரு மனிதரிடம் விளம்ப லய கதியும் இவை இரண்டுக்கும் இடையில் செயல்படும் ஒரு மனிதரிடம் மத்திய லய கதியும் இருக்கின்றன. இது மனிதர்களின் மனோ தாள லய கதி சார்ந்தது என்கிறார் அவர்.

கணித மேதை ராமானுஜன் போன்று கணக்குவழக்கு, எண்கள், நிமிடங்கள் சார்ந்த இந்த லய உலகில் மிகப் பெரிய மேதைகள் இன்றைக்கும் பவனிவந்தாலும் அவர்கள் பூரணமான லய முழுமையைப் பெற்றிருப்பார்களா என்றால் இயலாது. அந்த பூர்ணிமை, உசுவில் தொடங்கி யுகம், யுகாந்திரம்வரை டமருகத்தின் ஒலியால் காட்டும் காலத்தை வென்ற ஈசனிடம் மட்டும்தான் உள்ளது என்கிறார் பாலக்காட்டு மணி அய்யர்

- தேனுகா, கலை விமர்சகர்,

எழுதியவர் : (27-Jan-18, 4:02 pm)
பார்வை : 187

மேலே