தாத்தா

தாத்தா
***********
எத்தனைமுறை
வெளுத்தாலும்
மறையவில்லை
இன்னமும்
தாத்தாவின் அந்த
எட்டுமுழவேட்டியில்
எப்போதோ ஒட்டிய
பாட்டியின்-
குங்குமம்....!

அம்மாவின்
அபிநய அவமதிப்புகளுக்குப்
பயந்து பயந்தே
உள்ளொடுங்கி
ஒட்டிக்கிடக்கிறது
பாட்டியின் கவனிப்பில்
பருத்திருந்த-
தொந்தி.....

"சாப்பிட்டாரா"
என்று
தந்தையின் மீதுள்ள
பரிவில்
அதட்டலாய் ஒலிக்கும்
அப்பாவின் குரல்
அதன்பின்
அம்மாவின் முந்தானைக்குள்
காமம் கலந்து-
கம்மிப்போகும்...

பாட்டிக்கான
அமாவாசை உபவாசங்களில்
எல்லாம்
அவர்
கண்ணீரின்றி அழுவது
நடுங்கும் விரல்களிலும்
குலுங்கும் முதுகிலுமாய்-
புலனாகும்.....

குதப்பிய வெற்றிலையைக்
குவளைச்சாம்பலில்
உமிழ்வதற்கே
ஆயிரம்தடவை
அந்த
ஆகிருதி நிறைந்த
ஆறடி உடல்
அம்மாவின் பார்வைக்கு
அஞ்சி-
குறுகும்...

மழைச்சாரல் வீசும்
குளிர்காலங்கள் தோறும்
திருநீறு மணக்கும்
அவரது
தேகத்தைக் கட்டிக்கொண்டு
கதைகேட்டபடி
உறங்கிப்போகும்
பால்யகாலத்து
பால்வீதிநாட்கள்-
சொர்க்கம்......

"எப்போ பாரு இருமலு
என்னவியாதியோ
எழவோ" என
அவரை
அணுகநினைக்கும்
எங்களுக்கு
அம்மா போடும்
தடையுத்தரவுகளால்
அவருக்கும் எங்களுக்குமான
இடைவெளி-
அதிகரித்தபடியே......

இடைவிடாத
இருமலினூடே
அவ்வப்போது யாசிக்கும்
தாத்தாவின்
கோரிக்கைகள் எல்லாம்
அம்மாவின் சபையில்
நிர்தாட்சண்யமே இன்றி-
நிராகரிக்கப்படும்.....

காலம்
தங்களைநோக்கியும்
முதுமை வலையோடு
முழுமூச்சாக
காத்திருக்கிறது என்பதை
அறியாமல்
ஒப்பனைகளால்
வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்-
அப்பாவும் அம்மாவும். ....

உறவுகளெல்லாம்
அந்நியமாகிப் போன
தாத்தாவின்
வேட்டியில்
இன்னமும் ஒட்டியிருக்கிறது
அந்த
குங்குமக்கறை மட்டும்-
பாட்டியின் ஞாபகமாய்....!

அழ. இரஜினிகாந்தன்

எழுதியவர் : (6-Feb-18, 4:20 pm)
Tanglish : thaathaa
பார்வை : 47

மேலே