மூர்ச்சையற்ற பொழுதுகள் பகுதி 10
#மூர்ச்சையற்ற_பொழுதுகள்_௧௦
காலை அவள் சென்ற அதே சாலை வளைவுகளில் இருந்து மீண்டு(ம்) திரும்பி வந்து கொண்டிருந்தாள்..
அப்போது பூத்த புது மலர் தன் இதழ்களில் பன்னீர் துளிகளை பரப்பிய படி காற்றில் அசைந்தாடி அடிமேல் அடி வைத்தது போல அவனை நோக்கி முன்னேறி வந்து கொண்டிருந்தாள்.
அவள் வருகிறாள் என தெரிந்ததும் அவளுக்கு எதிராய் கார்த்திக் புத்தகங்களை விரலில் வைத்து சுற்றியபடி நெருங்கினான்...அவள் பக்கம் வரவும்,கையிலிருந்த புத்தகம் அவள் காலடியில் தவறி விழுந்தது..
அவன் குனிந்து எடுப்பதற்குள் மாலதி முந்தி கொண்டாள்..
கையில் புத்தகத்தை வாங்கி கொண்டு உன் முகத்தை பார்க்கத்தான் இவ்ளோ நேரம் இங்கேயே நின்றேன்....வந்த உடனே பஸ்ஸில் ஏறிவிட கூடாதுன்னுதான் நானே வந்துட்டேன் என்றதும்..
நீ என் முகத்தை பார்க்க வந்தது மாதிரி தெரியல,,புத்தகத்தை கீழ போட்டதா பார்த்த காலை பார்க்க வந்தியோனு நினைச்சுட்டேன் என சிரித்தாள்..
கார்த்திக்கின் முகத்தில் அசடு வழிந்தாலும் காட்டிக்கொள்ளாமல், இல்ல உன்னை மீண்டும் முத்த தடவை பார்க்கும் போதே நான் கிழ விழுந்துட்டேன்..அதான் நான் எப்படி விழுந்தேன்னு என் புத்தகத்துக்கு சொல்லி கொடுத்துக்கிட்டு இருந்தேன் நீயும் வந்துட்ட என்று சொல்லி புன்னகைத்தான்....
டேய் உனக்கு கொழுப்பு ரொம்ப இருக்குனு நினைக்கேன் என சொல்லி முடிப்பதற்குள் ஸ்ஸ்ஸ் என நாக்கை கடித்து கொண்டு சாரி உன்னை டா சொல்லி கூப்பிட்டுட்டேன் என வெட்கத்தில் நெளிந்தாள் ...
பரவாயில்லை அதுக்கு பதிலாக நான் உன்னை ஒரு தடவை டி சொல்லிக்கிறேன் சரிக்கு சரி ஆகிரும் ஓகே யா என்றான் ....
சரிடி பஸ் வர நேரமாகுதுடி உனக்கு சீட் புடிச்சு தரட்டுமாடி என அடுக்க அவள் பொய்யாய் முகம் சுளித்து புத்தகத்தை கொண்டு மெதுவாய் அடித்தாள்...
நெடுநேரம் நேரம் போவதே தெரியாமல் பேசிக்கொண்டு இருந்ததை அவளும் உணர்ந்திருந்தாள்..
பெரும்பாலான சந்திப்புகள் பேருந்து நிலையம் அல்லது பேருந்துனுள்தான் நிகழ்வுற்றது,அதை தாண்டி சந்திப்பதற்க்கு காலம் மட்டுமல்ல காதலியாக நினைத்தவளும் இதுவரை வசப்படவில்லை..
பேருந்து அவர்கள் வந்ததை அறிந்து கொண்டு தானும் அதே நேரத்திற்க்கு வந்து தன் கடமை உணர்ச்சியை மிகைப்படுத்தி காட்டி கொண்டது.
அவள் ஏறியதும் படிக்கட்டில் நின்று கொண்டிருந்த அவனின் கால்கள் இரண்டும் அவனுக்குள் ஓடி கொண்டிருந்த ஒரு இதயத்தின் அசரீரீக்கு கட்டடுப்பட்டு அவளின் அருகில் மெதுவாய் நகர்ந்து சென்றது.
குறுக்கு மறுக்காக நின்ற ஒவ்வொருத்தரையும் விலக்கி சென்று அவளின் முகத்தை நேராக பார்த்து கொள்ளுமாறு நின்று கொண்டான்.
அவளின் காந்த கண்கள் துருபிடித்த இரும்பு இதயமென்று கூட பாராமல் அவனை தன்பால் படாரென ஈர்த்தது..
சிறிது நேரத்திலேயே அவளின் கதிர்வீச்சு பார்வை அவனுக்குள் என்னென்னவோ செய்திருந்தது..சாதாரணமாய் பேசும் போது அவளின் பார்வையை விட பேசாமல் மௌனமாய் நிற்கும் போது அவள் இதழுக்கும் சேர்தது விழிகள் பேசிவிடுவதால் என்னவோ இதயத்துக்குள் என்னென்ன ரசாயன மாற்றமோ நிகழ்ந்து விடுகிறது..
கார்த்திக் இங்க வா ஒரு நிமிஷம் என சரவணன் அழைக்க அவனிடம் பேசி விட்டு திரும்ப அவள் பக்கம் நோக்கி நகர்ந்தான்..
நேற்று அவள் தராத மொத்த காதலையும் வட்டியும் முதலுமாய் கொடுத்து விட்டதாய் நினைத்து கொண்டு அந்த நினைவின் சுகத்தில் நிமிடங்கள் கரைந்து கொண்டிருந்தது.
மீண்டும் ஒருமுறை பார்க்க வேண்டும் என எண்ணம் தலை தூக்கவே மெதுவாய் அவளின் முகம் தேடினான்..
அவன் விலகி செல்லும் போது நின்ற அதே பார்வையில் அதே திசையில் பேய் அறைந்தது போல பார்த்து கொண்டிருந்தாள்..
யாரை இவ்வளவு நேரம் பார்த்தாள் இல்லைஇல்லை எதை பார்த்து கண்ணில் பயத்தோடு நிற்கிறாள் என மனம் குழம்பி அவனுக்குள் வியர்வை ஊற்றுக்கள் சில வினாடிகளிலேயே பொங்கி வழிந்தோடி கொண்டிருந்தது.
மாலதீஈஈஈ என்று உரக்க கத்தி அவளை சகஜ நிலைக்கு கொண்டு வர வேண்டும் போலிருந்தது.
அதற்குள் மௌனமாய் அவனின் கழுத்து அனிச்சையாய் அவள் பார்த்த திசையை நோக்கி திரும்பி இருந்தது.
தனது காதலுக்கு எதிர்பாராத விபத்தை ஏற்படுத்திடுமோ என நினைத்த அந்த நபரை மிக அருகில் கண்டான்..
இராணுவ உடையில் ஒரு உருவம் மிக நெருக்கமாய் அவனை நோக்கி வந்து கொண்டிருந்தது.
காதல் வந்த பின் காலன் யார்வடிவில் வருவான் என்று யாருக்கு தெரியும்...
அதுவும் மிக சமீபத்தில் .....
தொடரும்...