தாய் மொழிகள் தினம்

உலக தாய் மொழிகள் தினம்.....
எம்மொழியும் கேளாத இலக்கிய பிரமிப்புகளும்
சிறியோரும் பெரியாரும் சிந்திக்க,சீரிய படைப்புகளும்
பாரிலுள்ளோர் அறிய அறநெறி போதனைகளும்
அன்னையின் அன்புடன்,தந்தையின் அறிவுரையும்
தலைவருக்கும் தலைவியும், தலைவிக்குத் தோழியும் அளித்து
இயற்கையின் எழில் கொஞ்சி
செயற்கைக்கு சிந்தனையும்
சிந்தாமல் அள்ளித்தரும்
சீர்மிகு செவ்வியல் மொழி
என் தாய் மொழி.....

மகுடஞ்சூடி கிடந்த மன்னர் வர்க்கங்களுமே மண் தட்டுத் தொழும்படி
பேராதிக்கம் நிறைந்த பேச்சுமொழி
வரிவடிவம் கொண்ட ஆட்சி மொழி.....

அதியமானுக்கும் புள்ளிமானுக்கும் உயிரூட்ட
சொல்லில் சொர்க்கம் விதைக்கும்
கவிஞர்கள் கரைபுரள
உயிரும் மெய்யுமாய்
உளாவித் திரியும்
உயர்தனிச் செம்மொழி,
எம் மொழி....
காதலுக்குத் தூது செல்ல
ஏதுமில்லை என்று இங்கே
போதுமென்று சொல்லச் சொல்ல
காதல் சொல்லும் இலக்கியங்கள்
பேசிக் கொஞ்சும்
அன்பு மொழி.....
மானுடமெலாம் மாயங்கள் செய்திட இயற்கையை இணைத்தே
"நும்மினும் சிறந்தது நுவ்வை" எனச் சொல்லி
இயற்கையை இயல்பாய் புகழும்
இனிமை மிகுந்த
இயன் மொழி.....
கருணைக்கு கடலாயும்
காட்சிக்கு மலையாயும்
கிள்ளும் வலி கொண்டாலும்
கிடு கிடு கிழவரும் சொல்லுவார்
எள்ளி நகையாடா
என் தாய்மொழிப் பெருமையை
அவர்தம் குருநகை குருதியில் கலக்க....
பேரும் புகழும் கொண்டோரை
பேசிப் புகழும் திருமொழி
எனது,பேரைக்கூடச் சிறப்பிக்க
சீர்பலச் செய்திடும்
சிறப்பான வியன்மொழி.....
தண்மையில் நிலவையும்
சுடும் தன்மையில் ஞாயிற்றையும்
சான்றாய் ஈன்று
கடமை கற்பித்த
ஒண்மொழி என் தண்டமிழ்
அது கொண்ட முத்தமிழ்
கண்ட காதலர் யாவர்க்கும்
எனது,
தாய்மொழிகள் தின வாழ்த்துக்கள்
தமிழ் மொழி தின வாழ்த்துக்கள்

எழுதியவர் : மீனாட்சி மோகன்குமார் (21-Feb-18, 8:02 pm)
பார்வை : 692

மேலே