வசந்தமே வா
வசந்தம் வந்து விட்டது
சிறிது நேரம்
நடப்போம்
உயிரிகளின்
உறக்கம் கெடாமலிருக்க
காலணி அணியாமல் வா
நிலவின் ஒளி போதாது
வரும்போது
முக்காடிடாமல் வா
பாதைக்கு
வெளிச்சம் தேவையாதலால்
வந்தனத்தோடு
வருகிறது
வண்டின் ரீங்காரம்
அந்தரத்திலே
அசைந்தாடுகிறது
ஒரு பூபாளம்
உன் குரல் கேட்டு
இசை குத்தாட்டம் போட,
உன் அசைவு கண்டு
தென்றல்
அசைவற்ற நிலையில்
என்னடா பெரும்
தொல்லையாயிற்று
உன் வருகையினாலே
இயற்கை
மாற்றம் காண்கிறது
இயல் இசை மறந்த
தமிழின்
நாடகமா இது,
இல்லை
அதிகாலையை
விண்ணுக்கனுப்பி
இரவு நீட்டிக்கும்
வண்ணக்கோலமா
நீ விட்டில்களை
துரத்தும்போதே
சுதாரித்திருக்க வேண்டும்
விட்டு விட்டதினால்
வந்த வினைதானோ
வானோடு ஒட்டிக்கொண்ட
நட்சத்திரங்கள்
ஓடி வராதே
மெதுவாக நடந்து வா
வரப்பு புற்கள் சில
நொடிப்பொழுதேனும்
உன் பாதம் பட்டு
புண்ணியம் தேடிக்கொள்ள
காத்திருக்கின்றன
நீ குலுங்கி சிரித்து
வைக்காமல் வந்தால்
சாலச்சிறந்தது
உன் சிரிப்பின்
அதிர்வலையில்
நெற்பயிர் பனித்துளிகள்
துள்ளித் தெறித்து
விழுந்து அழப்போகின்றன
கைவளை இறுக்கி
சத்தமிடாமல் வா
முத்தத்தில் மூழ்கி
திளைத்திருக்கும்
வண்ணத்துப்பூச்சிகளின்
ஆழ்நிலை காதலை
கலைக்காமல் இருக்கவே
கூட வந்தமர்ந்து
சில்லென்ற
ஓடை நீரில் கால் நனைத்து
தோள் மீது தலை சாய்த்து
ஏகாந்த நிலவின் கீழ்
விண்மீன்கள் புடைசூழ
பஞ்சபூதங்கள் சாட்சியாக
வசைபாடும் சமூக
சேறுதிர்த்து
இரு விழியாலே
பகிர்ந்து கொள்
நம் நெஞ்சம் நிறை
காதலை.....