நெஞ்சு வலி

" அதெல்லாம் இல்லடா. அப்படி இருந்தா இடது கை, கழுத்து கிட்ட எல்லாம் வலிக்கும். நேத்து மசால் ஐட்டம் எதாவது சாப்ட்டியா?" கேட்டான் ரவி.

"ஆமா. நேத்து காலைல பூரி மசால் தான்" என்றேன் நான்.

"அப்ப அது கேஸ் தான். பயப்படாதே"

மதியம் மூன்று மணியிலிருந்து நடு நெஞ்சில் வலி இருக்கிறது. இது போல முன்பு வலித்தது இல்லை. அதனால் தான் பயந்துவிட்டேன். உடன் பணிபுரிபவர்கள் இரு சின்ன பெண்களும் ஒரு ரிடையர்டு அகௌண்டென்ட். அவர்களிடம் சொன்னால் பயந்துவிடுவார்கள் என்று தான் ரவிக்கு போன் செய்து சொன்னேன்.

அவனோடு பேசிய பிறகு வலி குறைந்தது போல் இருந்தது. ஆனால் வேலையில் மனம் செல்லவில்லை.  PFல் சேமிப்பு எவ்வளவு இருக்கும், LIC எவ்வளவு தருவார்கள். வீட்டுக்கடன் எவ்வளவு பாக்கி இருக்கிறது. எல்லாம் கூட்டி கழித்து பார்த்தேன். 6.லட்சம் மீதமானது. போதுமா? மாலினி சமாளிப்பாளா? ஏன் இப்படி எல்லாம் நினைக்கிறேன். 

மீண்டும் வலி எடுக்கத் தொடங்கியது. குனிந்தால் அதிகம் வலித்தது.  வீட்டுக்கு போய் விடுவது என்று முடிவு செய்தேன். வழியில் டாக்டரைப் பார்த்துவிட்டு போவோமா? நெஞ்சு வலி என்று சொன்னால் உடனே அட்மிட் செய்து விடுவார்களே? ரவி சொன்னது போல இது கேஸ் பிரச்சனை தான் என்று வீடு நோக்கி செலுத்தினேன் வண்டியை.  ச்சே. எப்பதான் இந்த ரோடு சரி செய்வார்களோ? குழியும் மேடும். இதனாலே உடம்பு கெட்டு விடும்.

வீடு வந்து சேர்ந்ததும் இடது கையும் வலிக்கத் தொடங்கியது. இது என்னடா வம்பா போச்சு. 
"சீக்கிரமா வந்துட்டீங்க. நல்லதா போச்சு. பத்து நாளுக்கு பிறகு இப்பதான் தண்ணி வருது. கொஞ்சம் ஹல்ப் பண்ணுங்க" என்றால் மாலினி.

"எனக்கு டையர்டா இருக்கு மாலு"

"ஏங்க எனக்கு காலையிலிருந்தே தல வலி தெரியுமா?"

"சரி சரி" என்று பத்து குடம் பிடித்து கொடுத்தேன்.

அவளிடம் சொல்லலாமா? என்ன செய்வாள்? பயந்து போவாளோ? கையில் பணம் அதிகம் இல்லையே. 
வெளியே எட்டிப் பார்த்தேன். பக்கத்து விட்டுப் பெண்ணோடு பேசிக் கொண்டிருந்தாள். மட மட வென்று பீரோவைத் திறந்து LIC policy, mediclaim policy எல்லாம் தேடி எடுத்து கண்ணுக்குத் தெரியும்படி வைத்தேன்.

இப்பொது வலி குறைந்திருந்தது. சரியாகி விடும்.

காப்பி மட்டும் குடித்து விட்டு தூங்கிப்போனேன். குழந்தைகள் பள்ளிலிருந்ந்து வருவதற்கு முன்னரே.

காலை 4 மணிக்கு மாலினி பதறிக் கொண்டு "ஏங்க எந்திரிஙக. என்ன எப்படி கல்லு மாதிரி தூங்கரீங்க" என்று உலுக்கி எழுப்பினாள்.

திடுக்கிட்டு எழுந்து "என்னாச்சு ஏன் அழற".என்றேன் பயந்தபடி.

"ஏங்க ஜெயலலிதா இறந்துட்டாங்க.TVல் சொல்லிட்டாங்க"

என் தூக்கம் போயிற்று. "அட டா" என்று நான் TV முன்பு போய் அமர்தேன். மனம் வலித்தது. எவ்வளவு strong lady. இப்படி ஆகிவிட்டதே. ஏதோ இரண்டு வார்த்தை பேசி இருந்தா அறுதலா இருக்குமே. அன்று காலை யாரும் சாப்பிடவில்லை. TV பார்த்தபடியே இருந்தோம்.

மாலை ரவி போன் செய்து விசாரித்த போது தான் எனக்கு என் நெஞ்சு வலி நினைவுக்கு வந்தது. ஆமா இப்ப வலியே இல்லை. மனைவி இடமும் போட்டு கொடுத்து விட்டான்.

நறுக்கென்று கிள்ளினாள்.

"சொல்ல வேண்டியது தானே. நாளைக்கு போறோம். complete checkup செய்யனும்" என்றாள்.

அவள் கிள்ளிய இடத்தை தடவிக் கொண்டிருந்தேன்.

* * *
சுபம்

சுரேஷ் ஸ்ரீனிவாசன்

எழுதியவர் : சுரேஷ் ஸ்ரீனிவாசன் (19-Mar-18, 12:04 pm)
Tanglish : nenju vali
பார்வை : 160

மேலே