தன்னில் வேள்வி
மலைபோல் வரும் துன்பம் யாவும் பனிபோல் நீங்கும் என்பார் எல்லாம் சிவமே என்று சீவனில் சித்தம் கொண்டார்...
புலி தாக்கியே வீழ்ந்தாலும் மரணமில்லை, மரணமில்லை
அழிவது உடல்தான்.
சீவன் அழிவதில்லை.
அன்பாலே ஆசிர்வதித்தான் நீடுழி வாழ்கவென்றே.
வார்த்தை தான் பொய்யாமோ?
அன்பின் வார்த்தை தான் பொய்யாமோ?
சொல்வாய் நெஞ்சே,
சுத்தமான வீரம் எது?
தன்னிலே வேள்வி செய்வது.
கோபத்தில் எடுக்கும் ஆயுதமோ கூடவே வருமோ?.
பொய் சொன்ன நாக்கு கறிக்கும் உதவுமோ?,
புழுத்த பூதவுடல் பூமி தின்னவே.
சத்தியம் நீ அறிவாய்,
இந்திரியங்கள் என்பவை மாயாவிகள்.
மானுடத்தை விழ வைத்தே உலகை ஆளும் கொடும் நோய்கள்.
அறிவாய் நெஞ்சே,
விஷமென்றே அறிவாய் நெஞ்சே,
உண்டபின் வெளிக் கொணர்வது சுலபமல்ல நெஞ்சே.
உண்பது பாவமல்ல என்றே பறையடிக்கும் பாழ் நெஞ்சே,
சத்தியமாய் வாழ்ந்தாலும் சாத்தியமில்லை என்றே எதிர்மறை பேசும் நெஞ்சே.
வீணாய் விட்டொழிக்கும் வாழ்க்கை என்ற வரத்தை,
காணாய் நெஞ்சே,
தினமும் எண்ணற்ற எடுத்துக்காட்டுகள்...
பஞ்ச பூதங்களால் உருவான தேகம் கடைசியில் பஞ்ச பூதங்களையே சென்றடைய யாருக்காக இவ்வளவு மோசமாக வாழ்கிறாய் என்று எடுத்துச் சொல்வாய் நெஞ்சே...