மலர்மீது தேனீ கால்பதிக்கும் விதம்

எந்த கோணத்தில் இருந்து பறந்து வந்தாலும் தேனீக்களால் மலரின்மீது வந்து சரியாக உட்கார முடியும். அது எப்படி?

யோசித்துப் பாருங்கள்: விர்ரென்று படுவேகத்தில் பறந்து வரும் ஒரு தேனீ, பூவின்மீது மென்மையாக கால்பதிக்க வேண்டுமென்றால் அது பறந்து வரும் வேகத்தைக் குறைக்க வேண்டும். சொல்லப்போனால், அதன் வேகத்தை முழுவதுமாக குறைக்க வேண்டும். பொதுவாக இப்படிச் செய்வதற்கு இரண்டு விஷயங்களைக் கணக்கிடுவது முக்கியம். ஒன்று, பறந்து வரும் வேகம். இரண்டாவது, பூவுக்கும் தேனீக்கும் இடையில் இருக்கும் தூரம். இது தெரிந்தால்தான் தேனீயால் தன் வேகத்தை முழுவதுமாக குறைக்க முடியும். ஆனால், எல்லா பூச்சிகளாலும் இப்படி அதன் வேகத்தை திடீரென்று குறைத்துவிட முடியாது. ஏனென்றால், அவற்றின் கண்களுக்கு தூரத்தை அளவிடும் திறன் இல்லை. காரணம், அதன் கண்களுக்கு இடையில் இருக்கும் தூரம் குறைவாகவே இருக்கிறது. அதோடு, பார்வையை ஒரு பொருளின்மீது அவற்றால் ஒருமுகப்படுத்த முடியாது.

ஒரு பொருள் எவ்வளவு தூரத்தில் இருக்கிறது என்று மனிதர்களின் கண்களால் கணக்கிட முடியும். இதைத்தான் பைனாக்குலர் விஷன் என்று சொல்வார்கள். ஆனால், தேனீக்களின் பார்வை அப்படிக் கிடையாது. ஒரு பொருளுக்கு பக்கத்தில் போகும்போதுதான் தேனீக்களின் கண்களுக்கு அந்த பொருள் பெரிதாக தெரியும். எவ்வளவு பக்கத்தில் போகிறதோ அவ்வளவு பெரிதாக தெரியும். அதனால், அந்தப் பொருள் பார்ப்பதற்கு பெரிதாகிக்கொண்டே போகாமல் ஒரே நிலையான அளவில் தெரிவதற்காக, தேனீ தான் பறந்து வரும் வேகத்தைக் குறைக்கும். ஆஸ்திரேலியன் நேஷனல் பல்கலைக்கழகம் செய்த ஒரு ஆராய்ச்சியில் இது தெரியவந்தது. ஒரு பூவின்மீது உட்காரும் சமயத்தில், தேனீயின் வேகம் கிட்டத்தட்ட “ஜீரோ”வாக ஆகிவிடும். அதனால்தான், பூவின்மீது மென்மையாகவும் பத்திரமாகவும் அவற்றால் கால்பதிக்க முடிகிறது.

ப்ரோசீடிங்ஸ் ஆஃப் த நேஷனல் அகேடமி ஆஃப் சயின்சஸ் என்ற பத்திரிகை இப்படிச் சொல்கிறது: தேனீக்கள் “தரையிறங்கும் இந்த எளிமையான விதம் பறக்கும் ரோபோக்கள் பத்திரமாக வந்து தரையிறங்கும் தொழில்நுட்பத்தை [உருவாக்க] ரொம்ப உதவியாக இருக்கிறது.”

நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? தேனீக்கள் பூக்களின்மீது வந்து மென்மையாக உட்காரும் விதம் பரிணாமத்தால் தோன்றியிருக்குமா? அல்லது வடிவமைக்கப்பட்டிருக்குமா?


JW

எழுதியவர் : (16-Apr-18, 3:45 pm)
பார்வை : 29

மேலே