உள்ளத்தின் ஓசைகள்
மூன்று வருடங்களுக்கு
முன்பு
ஓடிப்போன
மூத்தமகளின் மீது
தான் கொண்ட
வீம்பைத்தளர்த்தி
இந்தவருடத்திலாவது
அவளது குடும்பத்தை
வீட்டுக்கு அழைத்து
விருந்து வைத்து -
அனுப்பவேண்டும்.......!
இரண்டாவது மகளுக்குப்
பிறந்த
இரட்டைக்குழந்தைகளுக்கு
எப்பாடுபட்டாவது
இந்தமாதத்துக்குள்
இடுப்புக்கொடியும்
கொலுசும் போட்டு
அவளைப்
புகுந்தவீட்டுக்கு -
அனுப்பவேண்டும்.......!
கல்லூரிக்குப்போகும்
மூன்றாவது மகளுக்காக
கந்துவட்டிக்கு
வாங்கியகாசை
இந்த வாரத்திலாவது
எடுத்துப்போய்
வசவுபாடும் அவர்களின்
முகத்தில் -
விட்டெறிய வேண்டும்......!
பள்ளி இறுதித் தேர்வில்
பாஸாகிவிட்ட
கடைக்குட்டிக்கு
வாங்கித்தருவதாய் வாக்களித்திருந்த
கைக்கடிகாரத்தை
இன்றைக்கேனும் பரிசளித்து
அவளை
இறுகக் கட்டிக்கொள்ள -
வேண்டும்........!
இப்படித்தான்
வரிவரியாக
ஓடிக்கொண்டிருக்கும்
அரசுபொதுமருத்துவமனை
ஐ. சி. யு மானிட்டரில்
தனது
எண்ண ஓட்டங்களையும்
ஏக்கங்களையும்
பிரதிபலித்துக்கொண்டிருக்கிறது
நேற்றிரவு
நெடுஞ்சாலையொன்றைக்
கடக்க எத்தனிக்கையில்
தலையில் அடிபட்டு
சுயநினைவிழந்துபோனதொரு
தகப்பனின் -
உள்ளம்.....!
அழ. இரஜினிகாந்தன்