வேகத் தடைகள்

வேகத் தடைகள்

தெருவின் மருங்கில் உறங்கும் மரங்கள்
இரவில் உதிர்த்த மஞ்சள் பூக்கள்
குறுக்கே தெருவில் விரித்துப் பரவி
இருக்கும் அழகிய வேகத் தடைகள்

கருத்த சாலைப் பரப்பின் மேலே
திரண்டு குவிந்த பூக்களின் கோர்வை
விறுவிறு வென்று நடக்குமென் நடையை
மறுத்து நிறுத்திய மென்மலர்ப் போர்வை

இவை

முற்றும் முதிர்ந்து மரித்த பூக்களோ?
சற்று முன்புதான் உதிர்ந்த மலர்களோ?
சற்றேனும் உயிர் தங்கி இருக்குமோ?- என்
கால் பட்டால் அவை கண்ணீர் விடுமோ?

பதித்துக் காலை பூமேல் வைத்து
மிதித்து வதைக்க மனமோ இல்லை.
இந்த வழியே செல்வதை விடுத்து
வந்த வழியே திரும்பி நடந்தேன்!

எழுதியவர் : ரமேஷ் ( கனித்தோட்டம் ) (28-Apr-18, 9:02 am)
பார்வை : 86

மேலே