அகிலா,,,என் இமை மேல்
அன்புள்ள அகிலா
உன் மடலை நான்
வாசித்தேன். பின்பும்
வாசிப்பேன். பின் எப்போதும்...
வாசிக்கையில் உன் நினைவு.
பின்பும் உன் நினைவு.
தோட்டத்தில் இருக்க
அழுகையாக வருகிறது...
வீட்டுக்குள் போய் விட்டால்
துயரமாகி விடுகிறது...
என்றெல்லாம் எழுதுகிறாய்.
என்று நீ வருவாய்
இனி பார்க்க முடியாதோ
எனவும் கேட்டிருக்கிறாய்.
நீ அலம்பும் பாத்திரத்தில்
நீ தோய்த்த ஆடைகளில்
நீ கழுவிய அறைகளில்
உன் கண்ணீரே அதிகமென்று
சுட்டிக்காட்டி உள்ளாய்.
கடித்து குதறும் இரவுகள்
முறைத்து பார்க்கும் பகல்
ஞானமற்ற தோழியின் சிரிப்பு
என்னை மரணமாக்கியது
என்றும் சொல்லியிருக்கிறாய்.
நீயற்ற இந்த வாழ்க்கை
அமிலத்தில் தோய்த்தது.
உன் பிரிவு நிரந்தரமென
சடலமாக்கும் என் கனவை
உன்னால் திருத்தமுடியும்
எனவும் அதிலிருந்தது.
வாசிக்கிறேன் அகிலா...
மீண்டும் மீண்டும் படிக்க
எனக்கு தோன்றுகிறது
இறந்தகாலம் என்பதாக
ஒன்றுமே இல்லையென.
போகட்டும்....
உன் கணவர் நலமா?
குழந்தைகளும்...