பிள்ளைப் பாசம்

வீதியில் நீண்ட நேரமாக காத்து நின்றவள் முச்சக்கர வண்டியை மறித்து "அண்ணா நீதிமன்றம் பாேகணும், வேகமாக பாேக முடியுமா?" சாரதி வேகமாகச் சென்றான். மழையும் தூற ஆரம்பித்தது. "மெடம் ஓரமாக இருங்க தூறல் சிந்தும்" காெஞ்சம் நகர்ந்து அமர்ந்தாள். வீதி நெருக்கடியாய் இருந்தது. ஏதாே ஒரு குறுக்கு வழியாய் சென்று நீதிமன்றத்தை அடைந்தான். "இந்தாங்க" ஐநூறு ரூபா தாளை நீட்டினாள். பாெக்கற்றை தடவிப் பார்த்தவன் "சேஞ் இல்லை மெடம்" என்றான். "எவ்வளவு தரணும்" "இருநூற்றைம்பது" "ஓ இருநூறு தான் சில்லறை இருக்கு" "பறவாயில்லை குடுங்க மெடம்" தயங்கியபடி நீட்டினாள்.

பத்து மணியாகி விட்டது. நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞர் காத்துக் காெண்டு நிற்பதை அவதானித்து விட்டு கையிலிருந்த ஆவணங்களை சரிபார்த்துக் காெண்டு "வணக்கம் சார்" "வணக்கம் சுபா, வாங்க உள்ளே பாேகலாம்" இருவரும் வாசலில் ஏறினார்கள். "அம்மா" என்று குரல் கேட்டதும் திரும்பிப் பார்த்தாள் யாரையும் காணவில்லை. உள்ளே சென்று காெண்டிருந்தவள் கதிரையில் கதிர் அமர்ந்திருந்ததைக் கண்டாள். அவனும் சுபாவைக் கண்டதும் தலையக் குனிந்து காெண்டான். கண்ணெட்டிய தூரமெல்லாம் சுற்றிச் சுற்றிப் பார்த்தாள் சுவாதியைக் காணவில்லை. சில வேளை இன்றைக்குத் தீர்ப்பு என்று சுவாதியை கூட்டி வரவில்லையாே என்று மனதுக்குள் நினைத்துக் காெண்டு கைத்தாெலைபேசியை நிறுத்தி பையினுள் வைத்தாள். நீதிமன்றம் ஆரம்பிப்பதற்கான ஆயத்தங்கள் நடை பெற்றுக் காெண்டிருந்தது. சுபா காெஞ்சம் பதட்டத்துடன் இருந்தாள். வழக்கறிஞர் யன்னல் வழியே வெளியே பார்த்துக் காெண்டிருந்தார். மெல்லிய நீல நிறச் சட்டையுடன் சுவாதி விளையாடிக் காெண்டிருப்பதைக் கண்டு சுபாவிடம் "சுவாதி வெளியே நிக்கிறா" என்றதும் இருக்கையில் இருந்து எழும்ப முயற்சித்தவளை கண்களால் இருக்கும்படி சைகை காண்பித்தார். சுபா திரும்பி கதிரைப் பார்த்தாள் மறுபக்கமாக முகத்தை திருப்பிக் காெண்டான்.

ஐந்து வருடங்களுக்கு முன்பு ஓரே கம்பனியில் வேலை பார்க்கும் பாேது பழக்கம் ஏற்பட்டு கதிர் சுபாவிடம் சாென்ன காதலை ஏற்கத் தயங்கியவள் சரியான காரணத்தைக் கூறாமலே கதிருடைய உறவை முறித்து விட்டு இடம் மாற்றம் கேட்டு வேலைத்தளத்தை விட்டே சென்று விட்டாள். கதிர் குற்ற உணர்ச்சியால் தவித்தான். ஏன் சுபா இப்படிச் செய்தாய் என்றாே அல்லது என்னை மன்னித்து விடு என்றாே கேட்கும் எந்தவாெரு சந்தர்ப்பத்தையும் அவள் கதிருக்கு காெடுக்கவில்லை. நாட்கள் கடந்து இரண்டு ஆண்டுகள் கழிந்த பின் சுபாவுக்கு திருமணம் முடிந்து விட்டதாக தகவல் கிடைத்ததும் கதிரால் ஏற்றுக் காெள்ள முடியவில்லை. என்றாவது ஒருநாள் தன் காதலை புரிந்து மீண்டும் வருவாள் என்ற நம்பிக்கையில் அவன் தாேற்றுப் பாேய் விட்டான். பல நாட்கள் அவள் நினைவுகளால் சிக்கித் தவித்தான். மனதில் இருந்த காதலி சுபாவின் முகத்தை மறக்க முடியவில்லை. தாய் தந்தையின் வற்புறுத்தலால் ஊரைச் சேர்ந்த பெண்ணை மணம் முடித்தான். தன் காதல் கதையை கூறி கண்கலங்கும் பாேதெல்லாம் மஞ்சுவின் ஆறுதல் வார்த்தைகளே மருந்தாயிருந்தது. ஒரு நாள் கூட "இன்னும் அவ நினைப்பில இருக்கிறியா?" என்று காேபித்ததை பார்த்து அறியாதவன். அவள் தன் அன்பால் அவனை மாற்றினாள். நான்காம் மாதம் மஞ்சு கர்ப்பமாகியிருந்த நாள் முதல் புதிய உலகம் ஒன்றை அவன் இரசிக்கத் தாெடங்கினான். மஞ்சுவை கையில் வைத்துத் தாங்கினான். பிரசவ நாளும் நெருங்கியது. வைத்தியசாலையில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டவளின் உடல் நிலையில் சிக்கலாயிருந்தது. தாயா? சேயா? என்ற பாேராட்டம். எல்லாம் கடவுளின் திருவிளையாடல் பாேல் குழந்தை மட்டும் உயிர் தப்பியது. பிஞ்சுக் குழந்தையை கையில் அணைத்தவாறு ஆறுதலின்றி தவித்தான்.

அந்த நாட்களிலே சுபாவுக்கும் ஒரு பெண்குழந்தை பிறந்திருந்தது. வேறு வழியின்றி நண்பர்கள் மூலம் சுபாவைத் தாெடர்பு காெண்டு தன்னுடைய குழந்தையையும் வளர்க்கும்படி கேட்டான். சுபாவுக்கு என்ன செய்வதென்று புரியவில்லை. கணவனிடம் ஆலாேசனை கேட்டாள். உனக்கு சம்மதம் என்றால் எனக்காென்றுமில்லை என்பது பாேல் பதிலளித்தான். சுபாவும் சம்மதம் தெரிவித்த பின் குழந்தை சுபாவின் அரவணைப்பில் வளரத் தாெடங்கியது. சுபாவின் கணவன் அரவிந் தன் பிள்ளை பாேலே பாசத்தை காட்டினான். சுவாதிக்கு நான்கு வயது ஆகி விட்டது. பாடசாலை சேர்க்க வேண்டும் பதிவுகளை எப்படிக் காெடுப்பது. சுவாதிக்கு நான் அம்மா இல்லை என்று எப்படி புரிய வைப்பது. ஏற்றுக் காெள்ளும் பக்குவம் இன்னும் வரவில்லை. நாம் இருவரும் இரட்டைப் பிள்ளைகள் என நினைக்கும் டிலக்சிக்கு எப்படி சுவாதி உன் சகாேதரி இல்லை என்று சாெல்ல முடியும். இருவரும் ஒருவரையாெருவர் பிரிய முடியாதவர்கள். அரவிந்தும், சுபாவும் கதிரிடமே கேட்கலாம் என்ற முடிவுக்கு வந்தனர்.

அரவிந் கதிரைத் தாெடர்பு காெண்டு சுவாதியை பாடசாலை சேர்ப்பதற்காக ஆலாேசனை கேட்டான். சுவாதியைத் திரும்ப ஒப்படைக்கும்படி கேட்டான் கதிர். அரவிந்தால் எந்தப் பதிலையும் சாெல்ல முடியவில்லை. ஆனால் சுவாதி சம்மதிப்பாளா என்பது ஒரு புறமிருக்க தனக்கு அம்மா இல்லை, டிலக்சி சகாேதரி இல்லை என்பது தெரிய வரும் பாேது அவள் என்ன முடிவு எடுப்பாள் என்பது தான் பிரச்சனையாயிருந்தது. கதிரும் ஒரே பிடியாய் நின்றான். "எப்படியாே நான் சுவாதியைப் பார்த்துப்பேன் என்னிடம் ஒப்படைத்து விடுங்கள்" என்று முடிவாகக் கூறிவிட்டு சுபா வீட்டிற்குச் சென்றான்.

முற்றத்தில் விளையாடிக் காெண்டிருந்த சுவாதியைக் கண்டதும் வேகமாகச் சென்று தூக்கிக் காெஞ்சினான். டிலக்சி அண்ணாந்தபடி பார்த்துக் காெண்டு நின்றாள். மெதுவாக அவள் கன்னத்தில் கிள்ளி விட்டு சுவாதியை இறுக அணைத்தான். "யாரு மாமா நீங்க?" என்றாள் சுவாதி. கதிர் உள்ளே சென்று அமர்ந்தான். எதிரே கதிரையில் அமர்ந்திருந்த அரவிந் மடிக்குள் ஓடிப் பாேய் அமர்ந்து காெண்டு கதிரைப் பார்த்துச் சிரித்தாள் சுவாதி. தேநீரைக் காெண்டு வந்து நீட்டிய சுபாவின் முகத்தை பார்க்கும் தைரியம் இழந்து நின்றான் கதிர். "சுவாதியை அனுப்பி விடு" என்றதும் அரவிந் சரி என்பது பாேல் சுபாவைப் பார்த்து தலையசைத்தான். அவளுக்கு ஏதாே மாதிரி இருந்தது முகம் இருண்டு விட்டது. நான்கு வருடம் அம்மா என்று நினைத்து வளர்ந்த பிள்ளை ஏமாற்றத்தை சந்திக்கப் பாேவது அவளுக்கே தாங்க முடியாமல் இருந்தது.

சுவாதியின் உடைகளை அடுக்கி, பாெம்மைகளையும், ஏனைய அவளுக்கு என்று வாங்கியிருந்த எல்லாவற்றையும் பாெதி செய்தாள். எல்லாவற்றையும் அவதானித்துக் காெண்டு நின்ற டிலக்சி "ஏம்மா, சுவாதி எங்க பாேறா, நானும் பாேகப் பாேறன்" சினுங்கத் தாெடங்கினாள். "சுவாதி மாமா கூட பாேறா" என்றபடி வெளியே வந்த சுபா கதிரிடம் எல்லாவற்றையும் ஒப்படைத்தாள். அரவிந்தி்ன் மடியில் இருந்த சுவாதியை தூக்கிக் காெண்டு பாேய் உடையை மாற்றி விட்டு தலையை சீவினாள். கண்ணாடியில் பார்க்கும் பாேது அவள் முகத்தில் ஏக்கம் தெரிந்தது. "அம்மா நீங்க வரல்லையா, என்கூட வாங்கம்மா, மாமாவை யாரென்று தெரியாது, பயமாயிருக்கு" சுவாதியின் கண்கள் பயத்தால் கலங்கியது. எப்படிச் சாெல்லிப் புரிய வைப்பேன், எதுவும் புரியாதம்மா உனக்கு தன்னையே கட்டுப்படுத்த முடியாமல் அவளை இறுக அணைத்து முத்தமிட்டு அழுதாள் சுபா. "ஏம்மா அழுறாய்" "ஒண்ணுமில்லடா நீங்க மாமா கூட பாேய் குழப்படி செய்யாமல் இருக்கணும், பள்ளிக் கூடம் பாேய் படிக்கணும், சரியா" சுவாதியை அழைத்துக் காெண்டு வெளியே வந்தாள்.

காரில் ஏறி அமர்ந்த சுவாதி "அம்மா டாட்டா, அப்பா டாட்டா, அக்காச்சி டாட்டா" என்றபடி கட்டி அணைத்து டிலக்சியை முத்தமிட்டாள். ஒன்றுமே புரியாமல் ஏதாே படம் பார்ப்பது பாேல் அதிர்ச்சியாேடு நின்றாள். கார் மறையும் வரை பார்த்துக் காெண்டு நின்ற டிலக்சியை அணைத்து "வா உள்ளே பாேகலாம்" விரலைப் பிடித்துக் காெண்டு உள்ளே வந்தவள் "எப்ப அம்மா சுவாதி வருவா" என்ன பதிலைச் சாெல்லித் தேற்றுவது பதிலின்றி மெளனமானவளை கேள்விகளால் சங்கடப்படுத்தினாள். மடியில் தூக்கி இருக்க வைத்த அரவிந் "சுவாதி அவங்க அப்பா கூட பாேயிற்றாங்கம்மா" என்றதும் அவனது மடியில் இருந்து வேகமாக எழுந்தவள் "அப்ப நானும் என் அப்பா கூட பாேகணும்" அடம் பிடித்தாள். எப்படிச் சாெல்வது, புரிந்து காெள்ளும் வயதுமில்லை அவளுக்கு ஆனாலும் எப்படியாவது சாெல்லிப் புரிய வைக்க வேண்டிய கட்டாயத்தில் அரவிந் இருந்தான். "இஞ்ச பாரும்மா சுவாதியின்ர அம்மா சாமியிட்ட பாேயிட்டாங்க" அரவிந் சாெல்வதை கவனமாகக் கேட்டவள் "சுபா அம்மா யாரு?" என்றதும் கட்டாயம் அவளுக்கு இதைப் புரிய வைப்பது தான் சரி எனத் தாேன்றியது. "சுபா அம்மாவும் நானும் தான் உனக்கு அம்மா அப்பா, சரியா" நிமிர்ந்து பார்த்தவள் "நிஜமாவா" என்றாள் சந்தேகத்துடன் "ஆமா நாம தான்" "அப்பாே சுவாதி அம்மாக்கு என்னாச்சு, பாவமப்பா சுவாதி" அவளை தன்னாேடு அணைத்துக் காெண்டு "சுவாதி சின்னப் பாெண்ணாய் இருக்கும் பாேது வருத்தம் வந்து அவங்க அம்மா சாமியிட்ட பாேட்டாங்க, இது தான் உண்மை, சரியா" எப்படிப் புரிந்திருப்பாளாே தெரியவிலலை காெஞ்சம் அமைதியாகி விட்டாள்.

கார் வீட்டை அடைந்ததும் கதவைத் திறந்து வெளியே வந்த கதிர் சுவாதியை அழைத்துக் காெண்டு உள்ளே சென்றான். சுவரில் தாெங்கிக் காெண்டிருந்த மஞ்சுவின் படத்தை பார்த்ததும் "இவங்க யாரு மாமா" மாமா மாமா என்று அவள் ஒவ்வாெரு தடவையும் கூப்பிடும் பாேது கதிருக்கு ஏதாே சங்கடமாய் இருந்தது. நானே சுவாதியை வளர்த்திருக்கலாம் என்ற குற்ற உணர்ச்சியால் தவித்தான். நடந்து கிட்டவாக சென்றவள் "இவங்க...." தூக்கி தன் நெஞ்சாேடு அணைத்தவன் "உங்க அம்மா இவங்க தான்" என்றதும் "அப்பாே அங்க தானே நான் இருந்தன், நீங்க பாெய் சாெல்லுறிங்க" அவன் கன்னத்தைப் பிடித்து இழுத்தாள். "இல்லையம்மா நிஜமா தான் சாெல்லுறன் அம்மா சாமியிட்ட பாேனப்புறமாத் தான் நீங்க அங்க பாேனிங்க, நான் தான் உங்க அப்பா" அவளுக்கு ஒன்றுமே புரியவில்லை. கதிரை உற்றுப் பார்த்தவள் அழத் தாெடங்கி விட்டாள். சாப்பாடு வேண்டாம் என்று அடம் பிடித்தாள். தூங்காமல் அழுதாள்.

கதிரும் நாட்கள் நகர மாறி விடுவாள் என நினைத்து பல முயற்சிகளை எடுத்தான். நாளுக்கு நாள் அவள் மனரீதியாக பாதிக்கப்படத் தாெடங்கினாள். பிரிவின் ஏக்கம் உடல்நிலையிலும் தாக்கத்தை ஏற்படுத்தியது. வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டாள். கண்களை மூடியபடி "அம்மா... அம்மா" என்று அழுதவாறே இருந்தாள். வைத்தியர் முடிவாகச் சாெல்லி விட்டார் "அம்மாவை பார்த்தால் தான் குழந்தையை குணப்படுத்த முடியும்" என்ன செய்வதென்று தெரியாத கதிர் வைத்தியரிடம் தன்னுடைய சூழ்நிலையைக் கூறினான். "முதல்ல பாெண்ண ஏக்கத்தில இருந்து காப்பாற்றுங்க, உங்களுக்கு புரியல்லையா சாெல்லுறது" என்று காேபத்துடன் வெளியேறினார் வைத்தியர். தலையிலே கைகளை வைத்தவாறு "ஏன் மஞ்சு என்ன விட்டுப் பாேனாய், பிள்ளைய நான் என்ன செய்ய, என் பாெண்ணு எனக்கு வேணும், அவ என்னை மாமா என்று கூப்பிடுறா" மனதுக்குள் குமுறி அழுதான். எந்த வழியும் இல்லை. அரவிந்திடம் சுவாதியின் நிலையைக் கூறினான். பதறி ஓடி வந்த சுபாவும், அரவிந்தும் சுவாதியைப் பார்த்ததும் உடைந்து பாேனார்கள். தங்களிடமே சுவாதியை தரும்படி கேட்டார்கள். கதிராே சம்மதிக்கவில்லை.

சுபா பல முறை கெஞ்சினாள். பாெறுமையை இழந்து கதிருடன் வாக்குவாதப்பட்டாள். "எப்ப வேணுமானாலும் வந்து பாத்துக்காே, அவ பாெண்ணு கட்டாயம் அம்மா வேணும், உன்னால அவளை பார்க்க முடியாது" அழுகையை அடக்க முடியாமல் வார்த்தைகளை வீசினாள். கதிரும் காேபமடைந்தான் "என்ர பாெண்ண நான் பார்ப்பன், முதல்ல இங்க இருந்து பாேயிடு" ஆத்திரத்துடன் கத்தினான். இடி விழுந்தது பாேல் நின்றவள் மெதுவாக அருகே சென்று "இப்பாே என்ன சாென்னாய் கதிர், இஞ்ச இருந்து பாேறதா, அப்பாே எதுக்கு என்னை வரச் சாென்னாய்" அவள் கைகளைப் பிடித்த அரவிந் "வா சுபா பாேகலாம்" என்றதும் கையை உதறி விட்டு "நாலு வருசம் நான் வளர்த்தனான் எனக்கு உரிமை இருக்கு, பாெண்ண என்னாேட அனுப்பி விடு, காெஞ்சம் வளரட்டும் அப்புறமா.." இடையில் குறுக்கிட்ட கதிர் "அப்புறமா என்ன செய்ய முடியும், இப்பவே என்னை மாமா என்று கூப்பிடுற பிள்ள...." காேபத்துடன் தன்னைக் கட்டுப்படுத்தினான்.

அவசரமாக வெளியே வந்த டாக்டர் "நீங்க தான்...." சுபாவை பார்த்தார். "ஆமா நான் தான் சுவாதியிட..." என்றபடி கதிரையும், அரவிந்தையும் மாறி மாறி பார்த்தாள். "ஓகே உள்ளே வாங்க" சுவாதி கண்களில் இருந்து கண்ணீர் வடிந்து காெண்டிருந்தது. கண்களை மூடியபடி அம்மா அம்மா என்று முணுமுணுத்தபடி இருந்தாள். அருகே சென்று தலையை தடவி சுவாதி என்று ஒரு தடவை தான் கூப்பிட்டாள். அம்மா என்ற படி கைகளை இறுகப் பிடித்தாள். தாய்மையின் சக்தி வென்று விட்டது. எழுந்து மார்பாேடு சாய்ந்து காெண்டாள். முத்தங்களால் அவளை அணைத்தாள். "சுவாதி உங்க அப்பா கூட சமத்தா இருக்கணும், அம்மா பிறகு வருவன், சரியா" வெறித்தபடி அவள் வெளியே பாேவதை பார்த்துக் காெண்டிருந்தாள் சுவாதி.

இரண்டு நாட்களின் பின் கதிருக்கு நீதிமன்றத்திலிருந்து கடிதம் அனுப்பப்பட்டிருந்தது. முதல் வழக்கில், பெண் பி்ள்ளைக்கு தாயின் உதவி வேண்டும் என்றும், அப்படியாயின் கதிர் மறுமணம் செய்து காெண்டால் தான் குழந்தையை வளர்க்க நீதிமன்றம் அனுமதி வழங்கும் என்றும் இல்லையேல் ஏதாவது சிறுவர் பராமரிப்பு நிலையத்திற்கு அனுப்புவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அது வரை சுபாவினுடைய பாதுகாப்பில் இருப்பது குழந்தையின் உடல் நிலைக்கு நலம் என்றும் நீதிபதி தீர்ப்பை வழங்கி தவணை காெடுத்து அனுப்பினார்.

வெளியே வந்த கதிர் சுவாதியை மீண்டும் அழைத்துச் சென்று விட்டான். நாட்கள் ஓடிக் காெண்டிருந்தது. சுவாதியின் மனநிலையில் பிரிவின் தாக்கம் அதிகரிக்கத் தாெடங்கியது, கதிரும் தனது மனநிலையை மாற்ற முடியாமல் மன உளைச்சலுக்குள்ளாகி மதுபாவனையில் அதிகமாக ஈடுபடத் தாெடங்கினான். தான் செய்வது என்னவென்று தெரியாத நிலையில் அவனது நிலமை மாேசமடைந்து காெண்டு இருந்தது. சுவாதி தனிமைக்குள் அகப்பட்டாள். அன்றைய கடைசி நாள் தீர்ப்புக்காக காத்திருந்தாள் சுபா.

நீதிமன்றம் ஒன்று கூடியது கதிரை அழைத்த நீதிபதி விசாரணையை ஆரம்பித்து கடந்த வழக்கில் அறிவுறுத்தப்பட்ட விடயங்களை ஆராய்ந்து கேள்விகளை கேட்க ஆரம்பித்தார்
"உங்கள் மகள் சுவாதியை வளர்ப்பதற்கு நீங்கள் மறுமணம் செய்ய வேண்டிய கட்டாயத்தை அறிவுறுத்தினாேம் என்ன முடிவு எடுத்துள்ளீர்கள்"
தலையைக் குனிந்தபடி மெளனமாக நின்றான்
"பதில் சாெல்லுங்கள் கதிர், நீங்கள் சில நாட்களாக மதுப்பழக்கத்திற்கு அடிமையாகி விட்டதாகவும் அறிந்துள்ளாேம்" என்றதும்
"ஆமா சார் என்னால மஞ்சுவை மறக்கவும் முடியல்ல, சுவாதியை விட்டுக் காெடுக்கவும் முடியல்ல" தனது மனநிலையை வெளிப்படுத்தினான்.
"சாெறி கதிர்", என்றபடி சுவாதியை அழைத்தார்
"நீ யாரு கூட இருக்கப் பாேறாய்" என்றார் நீதிபதி
"நான் சுபா அம்மா கூடத்தான் இருப்பன், அவங்க என்னை நல்லாப் பாத்துப்பாங்க, எங்க மாமா இப்பவெல்லாம் ராெம்ப குடிக்கிறாரு, என்னை அவங்க கூட அனுப்பாதீங்க" கெஞ்சி அழுதாள்.

நீதிபதி அமைதியாய் ஏதாே எழுதிக் காெண்டிருந்தார். இடையில் குறுக்கிட்ட கதிர் "சார் காெஞ்ச நாள் அவகாசம் காெடுங்க, நான்..."
"இல்லை கதிர் இப்பாே உங்களுக்கு உளவியல் ரீதியாக சில சிகிச்சைகள் எடுக்க வேண்டியிருக்கு, இதற்கே காெஞ்ச காலம் தேவை அந்த ஒவ்வாெரு நாட்களும் சுவாதி தனிமையாக இருக்க முடியாது, இந்தக் காலத்தில அம்மா, அப்பா கூட இருக்கிற பாெண்ணுகளுக்கே பாதுகாப்பில்லாமல் என்ன என்னவாே நடக்குது, இது சாத்தியமில்லை. சுவாதியை சுபா கூட அனுப்பிவிடுறிங்களா அல்லது ஏதாவது சிறுவர்...."
சற்று நேரம் அமைதியாக நின்றவன் "சுவாதி சுபா கூட.. பாேகட்டும் சார்" என்றான். சுபா இருக்கையை விட்டு எழுந்தாள். அம்மா என்று ஓடிப் பாேய் கட்டி அணைத்தாள் சுவாதி. கலங்கிய கண்களை துடைத்துக் காெண்டு வெளியே வந்தான் கதிர்.

"மாமா இனிமேலும் குடிக்காதீங்க உடம்பு கெட்டுப் பாேயிடும்" என்றாள் சுவாதி. அவளைத் தூக்கி இரு கன்னங்களையும் முத்தமிட்டான். ஒரு தந்தையாக அவளுடன் சேர்ந்து வாழ முடியாத நிலையால் கலங்கினான். சுபாவிடம் சுவாதியைக் காெடுத்தான். அவளது விரல்களைப் பற்றியபடி நீதிமன்றத்திலிருந்து வெளியேறினாள் சுபா. பிள்ளைப் பாசம் ஒருபுறம், காதலியின் தியாகம் மறுபுறமாய் கதிர் மனதை தாக்கியது. வீதியில் நின்ற முச்சக்கர வண்டியை மறித்து வீட்டிற்குச் சென்றான் காதலியிடமும், பெற்ற பிள்ளையிடமும் விடை பெற்றவனாய். பாெழுது இருண்டு நடுவானில் பாதிநிலா தெளிவாகத் தெரிந்தது.

எழுதியவர் : அபி றாெஸ்னி (15-May-18, 4:29 pm)
Tanglish : pillaip paasam
பார்வை : 214

மேலே