169 பிறனைச்சேர் மாது பேரிருள் அடைவள் – பரத்தமை 13

எழுசீர் விருத்தம்
(விளம் மா விளம் மா / விளம் விளம் மா)
(விளம் வருமிடத்தில் மாங்காய்ச்சீர் அருகி வரலாம்)

மற்றொரு வனைச்சேர் மாதிறந் தாலும்
..வசைநிற்கு முலகமுள் ளளவுஞ்
சுற்றமும் வாழ்வுந் துணையுமே நீங்குஞ்
..சோரநா யகனுமே மதியான்
பெற்றசந் ததியு மிழிவுறும் மாண்ட
..பின்னவி யாஎரி நரகாம்
சற்றுநே ரங்கொள் சுகத்தினால் விளையுந்
..தன்மையீ தரிவையீ ருணர்வீர். 13

– பரத்தமை
மாயூரம் வேதநாயகம் பிள்ளை பாடல்

பொருளுரை:

”கணவனல்லாத பிற அயலானைச் சேரும் பெண் இறந்தாலும் உலகம் உள்ளவரையும் இகழ்வு நிலைபெறும். உறவினர்கள், வாழ்க்கை, நட்புள்ள தோழிகள், கணவன் அனைத்தும் நீங்கும். கள்ளக் காதலனும் மதிக்கமாட்டான். பிறந்த பிள்ளைகளும் இகழப்படுவர். இறந்த பின் அணையாது எரிகின்ற நீங்காத் தீ நரகத்தில் உழல்வர்.

சிறு பொழுது பெறும் சிற்றின்பத்தால் ஏற்படும் பெருந்துன்பங்கள் எத்தன்மையானவை என்பதைப் பெண்களே உணருங்கள்” என்கிறார் இப்பாட லாசிரியர்.
.
வசை - இகழ். துணை - நண்பு. சோரநாயகன் - கள்ளக் காதலன். அரிவை - பெண்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (27-May-18, 9:44 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 16

மேலே