இயற்கையில் மகிழுவோம்

-பைங்கிளிகள் மரக்கிளையில் கொஞ்சிவிளை யாடும்;
பதினியொடு மாங்கனிகள் பாதைகளில் கூடும்;
-தங்கியிளைப் பாரமரம் தளிர்த்தயிலை யாட்டும்
தளிருடையில் இளமலர்கள் தாங்கிமணம் கூட்டும்
-தெங்கினிள நீர்குடிக்கத் தேகச்சூ டோடும்
திருமணத்தை விரும்பிடுவார் தெளிவடைய நேரும்
-பங்குடையார் கூடிவரப் பாசமதிற் காணும்;
பரவசத்தில் இளமனங்கள் பாட்டெடுத்துப் பாடும்

-இங்கிதுபோல் ஒருபருவம் என்றுவரப் போகும்
இளவேனில் நடந்துவர எமக்குபர லோகம்!
== =-=

எழுதியவர் : எசேக்கியேல் காளியப்பன் (5-Jun-18, 6:35 am)
பார்வை : 279

மேலே