373 தன்னை நெடிதாக்கத் தான் தூக்கல் தற்புகழ்தல் – தற்புகழ் 6
அறுசீர் விருத்தம்
(விளம் விளம் காய் அரையடிக்கு)
துதிபெற ஆதர மிகலாலே
..தூயவ ராகுவர் கலைதேறி
மதியினர் ஆகுவர் அரிபோல
..வலியின ராகுவ ரேயேனும்
அதிதுதி பிறர்சொலின் அழகாகும்
..அமைவொடு தனதுதி தான்கூறல்
கதிதன துடலுயர் வுறவேதன்
..கைகொடு தூக்கிட வுனல்போலும். 6
– தற்புகழ்
மாயூரம் வேதநாயகம் பிள்ளை பாடல்
பொருளுரை:
”நற்புகழ் பெறவேண்டும் என்னும் ஆசை மிகுந்தவர் உண்மை ஒழுக்கத்தால் தூய்மை எய்துவர். கற்றறிவில் முதிர்ந்து நல்ல அறிவுடையவர் ஆவர். சிங்கத்தைப் போன்ற வலிமை யுடையவரானாலும் தமது மிகுந்த புகழை பிறர் சொல்வதே அழகாகும்.
திட்டமிட்டு தன் புகழைத் தானே சொல்வது தனது உடல் உயரமாக வளர்வதற்கு தம் கையாலேயே தம்முடலைத் தூக்க நினைப்பதற்கு ஒப்பாகும்” என்கிறார் இப்பாடலாசிரியர்.