ஊர் வாய்
===========
பற்கள் இல்லாமல் மிக நேர்த்தியாய்
மெல்லுகிறது ஊரின் வாய்.
***
அவள் புருஷன் இவளின்
அவனென்றும்
இவள் கணவன் அவளின்
இவனென்றும் எழுதப்படாதக்
கதைகளை காகிதம் இல்லாமல்
பிரசுரம் செய்வதில் ஊர் வாய்
அச்சமின்றி அச்சகத்தை மிஞ்சி
விடுகின்றது.
***
இளசுகள் இரண்டு எதேச்சயாய்
இதழ் திறந்து சிரித்தால் போதும்
இவனுக்கும் அவளுக்கும்
இது அதுன்னு எதுவோ ஒன்றென்று
வார்த்தைகள் இன்றியே
சமிக்ஞைகளால் வதந்திகளை
அழகாய் பரப்பி விடுகின்றது ஊர் வாய்.
***
காக்கிச் சட்டை ஒன்று
காவல் முடிந்து ஊருக்கு
வந்தால் போதும்
நல்லவனைஎல்லாம் கள்வனாக்கி
சந்தேகக் கொண்டுபார்க்க
வழிவகுக்கும் ஊரின் வாய்
அகோர பசிக்கு அகப்பட்டதை
உண்ணும் மாட்டைப்போல்
ஆறுதலாக அசைபோடும்.
***
இயற்கை மரணம் எய்தாலும்
ஒரு வேளை இது கொலையாகக் கூட
இருக்கலாம் என்று சந்தேகம் விதைக்கும்
ஊரின் பொது வாயால்
நீதி மன்றங்களில் இன்னும்
முடியாத வழக்குகள் நிலுவையில்..
***
சென்ற ஆட்சிக்காலத்தில் நடந்த
கொடூரத்திலும் கொடூரம்
இந்த ஆட்சி என்றும்
இந்த ஆட்சியில் நடந்தது ஒன்றுமில்லை
எல்லாம் அவர்கள் நடத்தியதே என்று
மாறி மாறி குற்றம்சாற்றி
செக்கு மாட்டைப்போல் ஒரே
வட்டத்தில் சுற்றிக்கொண்டிருக்கும்
ஊரின் வாய் இப்போதெல்லாம்
சற்றே வளர்ந்து ஊடகம் என்று
பெயரெடுத்து ஒவ்வொரு வீட்டுக்குள்ளும்
தொல்லைக் காட்சிப்படுத்துகிறது
இப்போதெல்லாம்.
***
மெய்யன் நடராஜ்
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
