என் காதல்

வெளிச்சம் வந்தும்
இருட்டிற்குள்
உறங்கி கிடக்கும்
உண்மையைப் போல்
அழகாய் பிறந்தும்
வாசம் நிறைந்திருந்தும்
கடவுளின் பாதத்தை
அடையாத மலர்போல்
கருமேகம் சூழ்ந்து
மழை பொழிந்தும்
நீரின்றி வாடிய
பயிரைப்போல்!
பாதையிருந்தும்
நீரின்றி
கடலைச் சேராத
நதியைப்போல்!
கோவில் இருந்தும்
வாசல் திறந்திருந்தும்
கர்ப்பகிரஹம்
வந்து சேராத
கடவுளைப்போல்!
அழகாய் நீயிருந்தும்
உன் அருகில் நானிருந்தும்
உன் கைகளில் சேராத
கழுத்தை அலங்கரிக்காத
மாலையைப்போலும்
நீரில் மூழ்கி கிடக்கும்
கல்லைப்போலும்
என் மனதிற்குள்ளேயே
கிடக்கிறது உன் மீதான
என் காதல்!