விவசாயி
அனைத்து தானத்திலும் சிறந்தது
அன்னதானம்..
அதைப் பெற்றெடுத்தவனோ ?
அனாதையாக்கப்பட்டான்
அரசாங்கத்தால்....!
அவன் நினைத்திருந்தால்
அந்த காணிநிலத்தையும் விற்று
அத்தனை தொழில்களையும் செய்திடலாம்...,
அதனை விரும்பிடாது
அரையாண் கயிற்றில்
அல்லும் பகலும்
அவன் வளர்க்கும் பயிரை
அடுத்த வாரிசாக நினைத்து
அர்ப்பணிப்பான் அவன் வாழ்க்கையை...!
அடிக் கிணற்றில் தண்ணீரில்லை
அமிர்த மழையோ பொய்த்தது,
அழும் தாவரத்தை நினைத்து
அழுதிட்டான்....!
ஆண்டவனுக்கும் புரியவில்லை
அவன் அவஸ்தைகள்,
அரசாங்கமும் பொய்யாட்டம்
ஆடுகிறது அனுதினமும்..!
அதற்கு மேல் அவகாசமில்லை
அரளி விதைக்குள் அடங்கிப்போனது
"அவன் உயிர்"....!
வாடிய பயிரை
கண்டபோதெல்லாம் வாடிய
வள்ளலாரின் வழித்தோன்றல்கள்...
அர்த்தம் காண விளைகிறது
அறிவிலி கூட்டமொன்று,
அவன் மரணமும்
அரசியலாக்கப்பட்டது...!
அர்த்தமற்ற மரணமாக
அயோக்கியவாதிகளால்,
அவன் குடும்ப பிரச்சனையென்று,
ஆயிரமாயிரம் பிரச்சனைகள்
அவன் காணாது
அறுபது வயதை எட்டியதெப்படி..??
மூக்குமுட்ட பிரியாணி
தின்னும் மூடனே...?
முடிந்தால் முக்கால் மணிநேரம்
முழங்காலிட்டு நின்று பார்
மூச்சுத் திணறி
முந்நூறு முறை செத்திடுவாய்...!
கசாயமும்
கஞ்சியும் போதும்
கடுகளவும் நோயுமில்லை,
கறுத்த உடம்பும்
கண்ணிப்போகும் வரை
கழனி வேலை செய்திடுவான்
கடவுளென்னும் விவசாயி...!
அரசே...!!!
தூக்குக் கயிற்றை தொட்டுப்பார்
துயரம் தெரியும் ,
தெரியவில்லை எனில்
தொங்கிப்பார்..!
கடன் பெற்று விதைத்தான்
காரியம் செய்ய கூட
கால்காசும் இல்லை..
கடன் கழுத்தை நெரிக்க
கடமை தவறிய அரசும்
காவல் தெய்வமும் கைவிட,
கறைபடிந்த நாணயம்
கவிழ்ந்த தலையோடு
நம் கலியுக கடவுள்
காயம்பட்ட கழுத்தை
கயிற்றுக்குக் கொடுத்துவிட்டான்..!
நேர்மையும்,
நேசமும் கொண்டவனுக்கு
தேசம் கொடுத்ததென்ன..???
அவன் விளைத்ததைத் தின்று
அவனுக்கே வாய்க்கரிசி போடும்
அறிவிலிகள்....
விவசாயியின் பெயரில் திருடுபவனை
கண்டுபிடிக்க தெரியாதென்றால்
கஜானாவில் காவலாளி
பதவி எதற்கு...???
மனிதநேயம் தான் கிடையாது
மனசாட்சியாவது உண்டா ?
முதுகெலும்பாகிய விவசாயம்
முடங்கிவிட்டால், நாட்டின்
முன்னேற்றம் எப்படி...???

