மந்திரக் கோட்டையில் மந்தாரைகள்

வாசனை திரவியங்களால் அலங்கரிக்கப்பட்ட வசிய மடங்கள்
பாசக் கோட்பாடுகளால் விலக்கி நிறுத்தப்பட்ட சன்னியாசிகள்...
அடித்தளம் தொற்றிய நாசக்கிருமிகளால் மீள்வதற்கு வழியின்றி
கடிவாளம் சுற்றிய குதிரைகளாய் விடியல்காணா பல வெண்புறாகள்...
சிலந்திகளின் வலைகளில் சிக்கிய சிறுவண்டுகளாய்
நிலப்பரப்பில் நிதம் நீந்திக் கடக்கும் நிலவொளிக் கற்றைகள்...
செந்நெல் செழித்து வளரும் தருணத்தில் அடைமழை இடியுடன் வருவது போல
மந்தாரைப் பூக்களெல்லாம் மடம் நோக்கித் தவம் புரியப் போகின்றதே...!
வற்றாத நீரோடையில் வளர்ந்த பாசியினங்கள் நாளடைவில் நாசிகளை முடக்குவது பேல
சிற்றாலய போதனைகளில் முற்றும் துறந்த நிலையில் மூடர்களாய்...
யாகங்களுக்கு மத்தியில் மோகங்கள் கலையப்பட்டதாய் உரைத்து
நாகங்களுக்கு நரபலியாகும் நங்கைகள் நாட்டில் எத்தனையோ...?
மதியினை தவறவிட்ட மங்கைகளின் மனக்குழப்பம் மாறும்முன்
விதியின் பிடியில் வியாபாரிகளுக்கு விலையான மாதுக்கள் எத்தனையோ...?
ஓடிப் பயணிக்கும் காலத்தில் நான் நாடிச் செல்லும் வழியெல்லாம்
வாடிச் சிதையும் பூக்களை ஏன் தேடித்தேடிப் பாடுகின்றேன்...?
#பயணப்_பிழை