அன்புள்ள அம்மாவுக்கு
நான் கருவாக உருவாகும் முன் ஆண் மகனே பிறப்பான் என்று சிவனையும் பெருமாளையும் இணைத்து பெயரிட்டு என் மீது அன்பு வைத்த தாயை ஏமாற்றாமல் கருவாக உருவாகி ஆண் என்ற இனங்காண இயற்கை தந்த வரம் தான் பேரன்பின் விலாசம்.
அம்மா அம்மா எத்தனை முறை உனக்கு வலி தந்திருப்பேன்,
எவ்வலியையும் பொருட்படுத்தாத நீ எனக்கான கனவில் வாழ்ந்தாய்.
உன் கனவை காண்கிறேன் அம்மா.
உன் வலிகளை அனுபவிக்கிறேன் அம்மா.
குனிந்து நிமிர இயலாமல் உன்னை வயிற்றிலிருந்து கொடுமைப்படுத்தினேன்.
வேதனை தந்தே நானும் வெளிவர வேதனை மறந்தே முத்தமிட்டாய்.
அன்பு காட்டினாய்.
வாய் நிறைய வார்த்தைகளாலே தாலாட்டி,
பசி ஆறவே உன் இரத்தத்தைப் பாலாக எனக்கு ஊட்டி,
உண்ணாமல் உறங்காமல் எனக்காய் உழைத்தாய் நீ.
அத்தனையும் தந்த உன்னை நன்றி மறந்தே வெறுத்தேன்.
இல்லை, இல்லை, என்னை அறியாத பயத்தால் வெறுப்பதாய் நடித்தேன்.
என்னை அறிந்த பின்பே உண்மை உணர்ந்த உன்னையே நாடி வந்தேன்.
வஞ்சமில்லா மனதோடு ஆனந்தக் கண்ணீர் சிந்த மகனே என்று ஏற்றுக் கொண்டாயே,
ஐயிரண்டு வருடங்களாக உன்னை பிரிந்து அம்மா என்று அழைக்க அஞ்சிய பாவியாகிய அரக்கனென்னை.
என் சொல்லி புகழ்வேன் உனது தாயுள்ள அன்பின் மாண்பை?..