திகிலும் ருசிக்கும் 9

திகிலும் ருசிக்கும் 9

போனில் பேசியது கனகாவே தான், நாளை காலை திரும்பிவிடுவதாக சொன்னாள்...காரணம் கேட்டால் ஒன்றும் சொல்லவில்லை, அங்கு ஏதோ பிரச்சனை என்று மட்டும் புரிந்தது...ஆனால் அதை விட இங்கு ஒரு பெரிய பிரச்சனை இருக்கிறதே, கனகா இங்கு வந்தால் காரியம் அனைத்தும் கெட்டுவிடுமே, மோகினியை பாசமலையில் நனைய வைக்க நான் திட்டம் போட்டால் விதி வேறு ஏதோ சதி அல்லவா செய்கிறது....

வாடிய முகத்தோடே மோகினியை பார்த்தேன், மோகினி நான் சொல்ல போற விஷயத்தை கேட்டா நிச்சயம் நீ வருத்தப்படுவ, ஆனா கோபப்பட கூடாது...

மெல்ல பீடிகையோடே மோகினியின் முகத்தையும் அவள் அசைவுகளையும் ஆராய்ந்துகொண்டே மொத்தத்தையும் சொன்னேன்...

ஆனால் மோகினியோ கொஞ்சம் கூட சுணங்காமல் சிரிக்க ஆரம்பித்தது....

"இப்போ எதுக்கு சிரிக்கற, நான் சொன்னது உனக்கு புரியலையா, கனகா நாளை காலை வந்துடுவா...."

அம்மா வரமாட்டாங்கப்பா...

புன்னகையோடே ஏதோ உள்குத்து வைத்து சொன்னாள்...

"என்ன மோகினி சொல்ற, கனகா வரமாட்டாளா, ஏன் வரமாட்டா.. நீ சொல்றத பார்த்தா பயமா இருக்கே"

"பயப்படாதீங்க, கண்டிப்பா அம்மா வரமாட்டாங்க"

"அவ வரமாட்டான்னு சொல்றத கேட்கறப்போ தான் பயமா இருக்கு, ஏன் அவளுக்கு எதாவது ஆபத்தா, மனசெல்லாம் பதறுது , நீ அவளை எதாவது பண்ண போறியா..அப்படி எதுவும் பண்ணிடாத, என் கனகா இல்லைனா எனக்கு வாழ்க்கையே இல்லை"

பதட்டத்தில் வாய்க்கு வந்தபடி உளறிக்கொண்டே நான் இருக்க இந்த முறை மோகினி என்னை சமாதானம் செய்தாள்....

"அப்பா, நிதானமா இருங்க, அம்மாவை நான் என்ன செய்ய போறேன்"

அப்போ ஏன் அப்படி சொன்ன, ஏன் கனகா வரமாட்டா, காரணத்தை சொல்லு.....

காரணம் தானே தெரியணும், பதட்டப்படாம பொறுமையா இருங்க, கொஞ்ச நேரத்துல உங்களுக்கே புரியும்...
கொஞ்ச நேரம் கூட என்னால் என்னை நிலைநிறுத்திக்கொள்ள முடியவில்லை...கனகாவுக்கு ஏதாவது ஆபத்து வந்தால் அதை தாங்கி கொள்ளும் திராணி எனக்கு இல்லவே இல்லை....

மோகினியிடம் கெஞ்சி பார்த்துவிட்டேன், ஆனால் அவள் சொன்ன அந்த கொஞ்ச நேரம் வரை நான் பொறுமையாக இருந்தே ஆகவேண்டுமென்று சொல்லிவிட்டாள்...வேறு வழியில்லாமல் ஈஸி சேரில் விட்டத்தை பார்த்தவாறு அமர்ந்து கொண்டிருந்தேன்...

மனக்கலக்கம் கொஞ்ச கொஞ்சமாக முற்றி லேசாக தலைபாரம் ஆரம்பித்துவிட அப்படியே கண்ணை மூடிக்கொண்டு கனகாவுக்கு ஏதும் நிகழ்ந்துவிடக்கூடாதென்று வேண்டி கொண்டிருந்தேன்...

கனகாவும் நானும் வாழ்ந்த வாழ்க்கை அத்தனை ஒன்றும் சாதாரணமானது அல்ல, எத்தனையோ பிரச்சனைகள், அத்தனையும் கடந்து இனிமையாகவே குடும்பம் நடத்தி வருகிறோம்...
எங்களுக்குள் நிறைய சண்டை வந்திருக்கிறது தான், ஆனால் ஒருமுறை கூட என்னை ஒரே அடியாக விட்டுச்செல்ல வேண்டுமென்று அவளும் நினைத்ததில்லை, அவளை பிரிந்து வாழ்ந்துவிட முடியுமென்று எனக்கும் தோன்றியதில்லை....

எனக்கு அவள் குழந்தை, அவளுக்கு நான் குழந்தை...

நானாக ஏதாவது அசட்டுத்தனம் செய்யும்போது கிண்டலடித்து சொல்வாள், குழந்தை இல்லா ஆத்துல ஆம்படியான் ஆகிறான் அசட்டு குழந்தையா.... ஆனால் அதை எரிச்சலாய் சொன்னதில்லை, ஒரு குழந்தைபோலவே நினைத்து கொஞ்சுவாள்...

ஒருமுறை அவள் அண்ணன் வீட்டு விஷேசத்திற்க்கு போனபோது வழக்கம்போல என் வாயை வைத்துக்கொண்டு சும்மா இல்லாமல் நான் ஓன்று சொல்ல அவர்கள் ஓன்று சொல்ல விவாதம் வாக்குவாதம் ஆகி அவள் அண்ணன் என்னை கோபத்தில் அடிக்க பிரச்சனை பெரிதாய் முற்றி விட்டது...

அப்பொழுது அவள் அண்ணன் உறவே வேண்டாம் என்று என்னை இழுத்துக்கொண்டு வந்துவிட்டாள், எத்தனையோ முறை அவர்கள் மன்னிப்பு கேட்டும், நானே மன்னித்த பின்பும் கூட கனகாவின் கோபம் மட்டும் தனியவேயில்லை, இன்று வரை அவள் அண்ணனிடம் நெருங்காமல் விலகியே நிற்கிறாள்...

எல்லாம் எனக்காக மட்டுமே, எந்த இடத்திலும், யாரிடமும் என்னை விட்டு கொடுக்கமாட்டாள்..

இப்படியாக என் தர்மபத்தினியின் அருமை பெருமைகளை அசைபோட்டுக்கொண்டிருந்தபோது மனசாட்சி முந்திக்கொண்டு கேலி செய்தது...

ஆனால் பால்காரன் வரை நீ ஒரு முசுடு என்பதை கனகா சொல்லிவைப்பாள்...அது தானே...

மனசாட்சியின் இந்த டைமிங் பஞ்சில் லேசாக சிரிப்பு வந்தது...
இப்படியாக நான் என் மனம் போன போக்கில் நினைத்துக்கொண்டிருக்க மோகினி என்னை உசுப்பினாள்...

அப்பா எழுந்திரிங்க, அந்த கொஞ்ச நேரம் முடிஞ்சி போச்சி...

எழுதியவர் : ராணிகோவிந் (24-Jul-18, 3:24 pm)
சேர்த்தது : ராணிகோவிந்த்
பார்வை : 266

மேலே