``டிரைவர் மாமாவை விட்டுருங்க’’ - விபத்தில் சிக்கிய 6 வயது சிறுமியின் பேரன்பு
``அந்த யானை மிகவும் ஒய்யாரமாக இருக்கு. அது, தும்பிக்கையிலிருந்து தண்ணியைப் பீய்ச்சி அடிக்க, பக்கத்தில் இருந்த டைனோசர் குட்டி ஜாலியா குளிக்குது. காட்டு மரத்து பொந்திலிருந்து வெளியே வந்த அந்தப் பறவை, 'ட்விட்... ட்விட்... ட்விட்' எனப் பாடுது...'' என்கிறாள் இசை.
இசையின் கற்பனை உலகத்தில் யானைகளும் டைனோசர்களும் ஒன்றாக வலம்வருகின்றன. விலங்குகளும் மனிதர்களும் நேசம் பாராட்டுகின்றன.
“அண்ணா, இப்போ பாருங்க. நான் இந்த டைனோசர் இருக்கிற இடத்துக்கு ஒரு தைரியமான குட்டிப் பையனை அனுப்பறேன்” எனச் சொல்லிக்கொண்டே கையில் மீதமிருக்கும் களிமண்ணை மனித வடிவிலான பொம்மையாகச் செய்கிறாள். கட்டிலில் அமர்ந்திருக்கும் அவளது இடது காலில் மிகப் பெரிய கட்டு. வலது காலின் தொடைப் பகுதியிலும் ஒரு கட்டு. ஆனால், அந்த முகத்தில் புன்னகை மாறவேயில்லை. ஒரு மாயாஜால உலகை இயக்கிக்கொண்டிருந்தாள். இரண்டு நர்சுகள் அந்த அறைக்குள் வர, “வாங்க... வாங்க... உங்களைத்தான் தேடிட்டிருந்தேன். காலையிலிருந்தே இந்தக் கை ரொம்ப வலிக்குது. இந்த ஊசியை மட்டும் ரிமூவ் பண்ணிடறீங்களா? வேணும்னா, ரைட் ஹேண்ட்ல ட்ரிப்ஸ் ஏத்துங்க” என்கிறாள்.
இசைக்கு ஆறு வயது. 50 நாள்களுக்கு முன்பு, தன் காலனியில் நடந்த ஒரு விழாவின்போது, சக தோழிகளோடு விளையாடிக்கொண்டிருந்தாள். அப்போது, அங்கு வந்த கால் டாக்ஸி ஒன்று, இடித்துவிட்டது. கீழே விழுந்த இசையின் கால்மீது சக்கரம் ஏறிவிட்டது. மான்குட்டியாக ஓடித்திரிந்தவள், இப்போது மூன்று அறுவை சிகிச்சைகளைத் தாண்டியிருக்கிறாள்.
இசையின் தாய் காயத்ரி, மகளின் தலையை வருடியவாறு பேசுகிறார், “அந்த ஈவென்ட்ல என் பெரிய பொண்ணு ரன்னிங் ரேஸ்ல கலந்துக்கிட்டு ஓடும்போது ஸ்லிப் ஆயிடுச்சு. அதைப் பார்த்து பதறிப்போன இசை, என்கிட்ட விஷயத்தைச் சொல்ல ஓடி வந்தா. அந்த நேரத்துல அங்கே வந்த கார் இடிச்சு கீழே விழுந்துட்டா. துடி துடிச்சுப் போனோம். கதறி அழுதோம். முதலில், பக்கத்திலிருந்த தனியார் ஹாஸ்பிட்டலுக்குத்தான் போனோம். ஆனால், பாப்பாவின் நிலைமையைப் பார்த்தவங்க, 'இங்கே முடியாது. உடனடியா ஸ்டான்லி போயிடுங்க'னு சொல்லிட்டாங்க. எங்களுக்கோ தயக்கம். கவர்மென்ட் ஆஸ்பத்தியில் சரியான ட்ரீட்மென்ட் இருக்குமா, கால் விஷயம் ஆச்சே. குழந்தையின் எதிர்காலம் என்ன ஆகறது'னு பயம். ஆனாலும், வேற வழியில்லாமல் தூக்கிட்டு ஓடினோம். ஆனால், அங்கே போனதும் எங்க தயக்கம், பயம் எல்லாம் தீர்ந்துபோச்சு.
இசையைப் பரிசோதித்த டாக்டர்ஸ், 'இதுதான் ட்ரீட்மென்ட். இப்படியெல்லாம் செய்யப்போறோம். கொஞ்சம் க்ரிட்டிகல்தான். கால் எடுக்க வேண்டிய சூழல் வந்தாலும் வரலாம். ஆனால், அப்படி இல்லாமலே சர்ஜரி மூலமா சரிபண்ண பார்க்கிறோம். தைரியமா இருங்க'னு தெளிவாகவும் நம்பிக்கையாகவும் சொல்லி, சிகிச்சையை ஆரம்பிச்சாங்க. இசையும் ரொம்ப தைரியமான பொண்ணு. 'பாப்பா இன்னைக்கு உனக்கு சர்ஜரி பண்ணப் போறாங்க, இன்னைக்குத் தொடையிலிருந்து ஸ்கின் எடுக்கப் போறாங்க. அதுக்கு முன்னாடி அனஸ்தீசியா கொடுப்பாங்கன்னு எல்லா விவரத்தையும் அவகிட்ட சொல்லிட்டே இருந்தேன். இசை அதை நல்லா காதுல வாங்கிக்கிட்டா. பெரியவங்களே இந்த மாதிரி சூழலில் பயந்துடுவாங்க. ஆனா, இசை சூழலைப் புரிஞ்சுட்டு நல்லா ஒத்துழைச்சா. எவ்வளவு வலி இருந்தாலும் அழாமல் பொறுத்துக்கிட்டா. எங்களுக்கும் அரசு மருத்துவமனை மேலிருக்கும் பொது புத்தி நொறுங்கிடுச்சு. இங்கே தினம் தினம் அத்தனை கேஸ் வருது. நாங்களாவது படிச்சவங்க. ஓரளவு நாலேட்ஜ் உள்ளவங்க. ஆனால், படிப்பறிவு குறைந்த பலரும் ஆபத்தான நிலையில் தங்கள் குழந்தைகளைத் தூக்கிட்டு வர்றாங்க. அவங்களுக்கு எல்லாம் டாக்டர்ஸ் ரொம்ப பொறுமையா விஷயத்தை எடுத்துச் சொல்லி, மருத்துவம் பார்க்கிறாங்க. ஒவ்வொரு குழந்தைக்கும் சிறப்பு கவனம் எடுத்து வந்து கவனிக்கிறாங்க. இங்கே தலைமை அறுவைசிகிச்சை மருத்துவரா இருக்கும் ரமா தேவி மற்றும் டாக்டர்ஸ், செவிலியர்கள் எல்லோருமே அவ்வளவு நல்லா கவனிச்சுக்கிறாங்க” என்கிறார்.
ஒரு விபத்து... குழந்தைக்கு சிகிச்சை... இதில் என்ன சிறப்பு இருக்கிறது எனக் கேள்வி எழுகிறது அல்லவா, விஷயமே இனிமேல்தான். இசைக்கு அறுவைசிகிச்சை நடப்பது ஒரு பக்கம் இருக்க, விபத்துக்குக் காரணமான அந்த ஓட்டுநரைக் காவல்துறையினர் பிடித்து விசாரிக்கின்றனர். குழந்தை... மிகப் பெரிய விபத்து... 'இவர்தான் மோதியது' என ஒரு வார்த்தை சொன்னால் போதும். அந்த ஓட்டுநர் கைது செய்யப்பட்டு நிச்சயம் சிறைத்தண்டனை உண்டு.
ஆனால், ''அந்த மாமாவை விட்டுருங்க. இந்த ஆக்ஸிடென்ட்டுக்கு நான்தான் காரணம். அவசரத்துல வேகமா ஓடிப்போய் காரில் இடிச்சுக்கிட்டது நான்தான். அவர் மேலே எந்தத் தப்பும் இல்லே. ப்ளீஸ்... அவரை விட்டுருங்க'' எனச் சொல்லியிருக்கிறாள் இசை. அத்துடன் தன் தந்தையிடமும், ''அப்பா. அந்த மாமாவை விட்டுடச் சொல்லுங்க'' எனக் கெஞ்சியிருக்கிறார். மகளின் ஆசைக்காக, தந்தை விவேக் வழக்கைத் திரும்பப் பெற்றுக்கொண்டுள்ளார்.
அத்துடன் முடியவில்லை. அடுத்த நாள் அந்த ஓட்டுநரின் எண்ணுக்கு பேசி, ''மாமா, நல்லா இருக்கீங்களா. எனக்கு காயம் ஏற்படுத்திட்டோம்னு ஃபீல் பண்ணாதீங்க'' எனச் சொல்லியிருக்கிறாள் இசை.
“தப்பு என் மேலதானே அண்ணா. அக்கம் பக்கம் கவனிக்காமல் ஓடினது என் தப்புதானே, அங்க பாட்டு வேற ஓட்டிட்டு இருந்துச்சு. அந்த மாமா ஹார்ன் அடிச்சது பாட்டு சத்தத்துல என் காதுல விழாம போயிருக்கும். அந்த மாமாவும் போன் பண்ணி ஸாரி கேட்டார். அதுக்கு மேல வேற என்ன அண்ணா வேணும்?” என மழலை மொழியில் இசை சொல்லும்போது, நம் நெஞ்சத்தில் ஈரம் கசிகிறது.
வயதால் இசை குழந்தையாக இருக்கலாம். ஆனால், குணத்தில் வானவில்லாக உயரத்தில் நிற்கிறாள். அவள் உலகு எல்லோரையும் அன்பு மழையால் நனையவைக்கிறது. அந்த இசைக்கு சென்ற ஞாயிறு (22.07.2018) பிறந்த நாள். 50 நாள்களுக்குப் பிறகு, வீடு திரும்பி பிறந்தநாளைக் கொண்டாடினாள். இன்னும் நான்கு மாதங்களுக்கு நடக்கக் கூடாது என மருத்துவர்கள் சொல்லியிருக்கிறார்கள்.
பேரன்பு இசை, விரைவில் முழுமையாகக் குணம் பெற்று அழகு நடை போட பிரார்த்திப்போம்!
மு.பார்த்தசாரதி