விழி பேச மனம் பூக்கும்

விழிபேச மனம்பூக்கும்
***விந்தையது நடந்தேறும்
எழில்கொஞ்சும் இளமையிலே
***இதயங்கள் இடமாறும்
மொழியங்கே பயனின்றி
***மோனமுடன் உறவாடும்
பொழில்மலராய் மணம்பரவ
***புதுசுகமும் தினம்கூடும்

செழித்திருக்கும் அன்பாலே
***சீர்மிகவே சேர்ந்தாடும்
கழிபிறப்பின் பயனென்றே
***களிப்புற்றுக் கவிபாடும்
வழிபார்த்துக் காத்திருந்து
***வடிவான கண்பூக்கும்
அழிவில்லாக் காதலொன்றே
***அகிலத்தில் அழகாகும் !!

(கழிபிறப்பு - முற்பிறப்பு )

சியாமளா ராஜசேகர்

எழுதியவர் : சியாமளா ராஜசேகர் (15-Aug-18, 1:27 pm)
பார்வை : 112

மேலே