வீழ்வேனென்று நினைத்தாயோ

கள்ளுக்கும் காசுக்கும் அடிமை யாகி
... கண்மூடித் தனத்தால்நான் அழிய மாட்டேன்
உள்ளத்தில் முயற்சிகளூற் றெடுத்தி ருக்க
... உண்டான தடைகளால்நான் ஓய மாட்டேன்
வெள்ளம்போல் துன்பங்கள் என்னை சூழ்ந்தும்
... மெய்வருந்தி வெதும்பியேநான் சாக மாட்டேன்
குள்ளநரி சூழ்ச்சிபல செய்தா லும்அக்
... குள்ளநரிக் குழுவிடம்நான் அடங்க மாட்டேன்

சாதிமதம் கொண்டிங்கு பிரிவு செய்தால்
... சாதிகளே இல்லையென முழக்கம் செய்வேன்
நீதியினை பணம்கொண்டு தடுத்து வைத்தால்
... நித்தமும்அ றவழியில்போ ராட்டம் செய்வேன்
சோதனைகள் பலவழியில் தாக்கி னாலும்
... சோகமுகம் அடைந்தேநான் ஒடுங்க மாட்டேன்
வீதியெங்கும் நல்வினைகள் புரிந்திட் டேநான்
... வெரும்வாய்ச்சொல் வீரரில்லை என்று ரைப்பேன்

நாட்டினிலே நடக்கின்ற கொடுமை யெல்லாம்
... நான்பாடும் பாடலிலே சொல்லி வைப்பேன்
ஓட்டுவாங்கி பதவியேறி நன்மை செய்யா(து)
... ஊழலிலே திளைப்போரை எதிர்த்து நிற்பேன்
ஏட்டினிலே கவிதைபல எழுதி தீமை
... எல்லாமும் சாட்டிடுவேன்; கோழை யாக
வீட்டினிலே அடங்கியிக்க மாட்டேன்; என்றும்
... வீழ்ந்திடவும் மாட்டேன்நான் துணிந்து நிற்பேன்

---------------------------
வேல்பாண்டியன் கோபால்

எழுதியவர் : கோ.வேல்பாண்டியன் (9-Sep-18, 1:26 pm)
பார்வை : 141

மேலே