தார் சாலைகளின் தவிப்பு
===========================
குழி விழிகளில்
கண்ணீர்த் தேக்கி
மழைக்கால வாகன தூசி
வந்து விழுகையில்
மடமடவென வழிந்தோடும்
எங்கள் வேதனைகள்
நீங்கள் வித்திட்டவையே...
கட்டிய துணிக்கு
மாற்று துணியில்லா எங்களின்
சாயம்போன
தார் சேலையை உருவிய
துச்சாதனங்கள் உங்கள்
வாகனங்கள்.
கட்டிய மனைவிக்கும்
கட்டாத காதலிக்கும் இன்னும்
கண்டகண்ட பெண்களுக்கும்
முகப்பொலிவு வேண்டி
உதட்டுச்சாயமும்
வாசனை தூள்களும்
மருதாணியும் என்று பூசி மினுக்க
வாங்கிக் கொடுத்து விலையுயர்ந்த
வாகனங்களில் குழிகள் நிரம்பிய
எங்கள்மேல் உலாவரும் நீங்கள்
எங்கள் முகம் பூசிக்கொள்ள
தார் குழம்பு வாங்கி கொடுக்காத
வஞ்சகப் பாவிகள்..
அபிவிருத்தித் திட்டமென்று
நிதி ஒதுக்கீடு மட்டும்
எங்கள் பெயர்களில்..
அபிவிருத்தி மட்டமாக்கி
நிதி ஒதுங்கிய தெல்லாம்
உங்கள் பெயர்களில்..
வாழ்ந்து கெட்டால்
நடுத்தெருவுக்குத்தான்
என்று உணர்த்திய
நீங்கள் வாழ வேண்டியே
எங்களைக் கெடுக்கின்றீர்கள்
நாங்கள் எங்கே செல்ல..?
நீங்கள் தெருவுக்கு வருங்காலம்
தெரு வேண்டும் என்பதற்காகவேணும்
செப்பனிட்டு விடுங்கள் எம்மை.
வழிகள் இருப்பதனால்தான்
வழி மாறுகிறோம்
வழிகளே இல்லாவிட்டால்
வழி மாறும் வாய்ப்பிருக்கிறது என்று
வழிகளை மறுத்துவிடாதீர்கள் ..
வழிகள் இல்லாத வாழ்வு
வலிகள் நிரம்ப வழி சமைக்கும்..
வழிகளைத் தொலைப்பதால்
வாழ்க்கையையும் தொலைக்கும்
உங்கள் கடைசிப் பயணத்தில்
நாலுபேர் சுமந்து செல்லவும்
வழிவேண்டும்..
வழிகள் நாங்கள்
கால்கொண்டு மிதித்தபோதும்
உங்கள் பயணங்களை
இலகுவாக்கும் தியாகிகள்
உங்கள் காலடிக்காக காத்திருக்கும்
தன்னலமற்ற வழிகள் எம்மையுங்கள்
சுயநலங்களுக்காக தண்டித்துவிடாதீர்கள்
தாகித்த நீண்ட நாக்குகளுடன்
மரணத்தின் தருவாயில் கிடக்கும்
எங்களின் உயிர்வாழ சற்று
தார் நீர் வார்த்து விடுங்கள் போதும்..
நன்றி மறவாமல் உங்கள்
வாகன குழந்தைகளின்
சில்லு கால்களில்
முள்ளு குத்தாமல் இருப்பதற்கும்
கவனயீனத்தால் பாதை சரியில்லை
என்று எங்கள் மீது பழிபோடும்
விபத்துகள் நேராமல் இருப்பதற்கும்
எங்களை உங்கள் தேவைக்காகவே
அர்ப்பணித்து விடுகிறோம்..
============
**மெய்யன் நடராஜ்