அந்த ஒரு நிமிஷம்
ஏலே எந்திரி , இன்னைக்கு ஞாயித்து கிழமை போயி கறி எடுத்துட்டு வா, இன்னைக்கவாது எந்திச்சு தலையில எண்ண வச்சு குளிக்கப்போலே , தாராளமா போது தாமிரபரணி தண்ணி தங்கமா அதுல போயி முங்கி எந்திச்சுட்டு வந்தா அப்படி ஒரு தாட்டமா இருக்கும் உடம்புக்கு.
போலே எந்திரிலே பொட்டக்கோழி மாதிரி இன்னும் இழுத்து மூடி தூங்கிட்டு இருக்காதலே.
“ எம்மா இன்னைக்கு தானே வீட்ல இருக்கேன் நாளு முழுக்க நாயா கிடந்து இந்த மில்லுக்குள்ள வேல பாத்துட்டு வரேன் வாரத்துல ஒரு நாள் இந்த ஞாயித்து கிழமையில கூட நிம்மதியா தூங்க விட மாட்டயா செத்தா போக போறேன் நா எந்திக்க தானே செய்வேன் ஏன் இப்படி கத்துற என கடிந்தான் "
ஏலே கிறுக்குபயலே நாளெல்லாம் அந்த மில்லுக்குள்ள மிசினுக்குள்ள நிக்குறயே அந்த சூடு தாங்காம உனக்கு வவுறு வலி எதும் வரக் கூடாதுன்னு தானேலே சொல்றேன். நல்லதுக்கு காலமே இல்லலே என கோபத்தில் அடுக்களையில் கத்திக்கொண்டே பாத்திரத்தை டக்புக்குன்னு போட்டால்.
தர்மா இந்த அர்ச்சனைகள்
எதையும் காதில் வாங்காமல் எழுந்து சென்றான் முகம் கழுவ தண்ணீர் எடுத்துக்கொண்டு வெளியில் சென்றான். ஆவிபறக்க அடுப்பில் இருந்து காபி எடுத்து டம்பளரில் ஊற்றி எதுவும் பேசாமல் ஏதயோ யாருக்கோ வைப்பது போல் தர்மா அருகில் வெளி திண்ணையில் வைத்தாள் குயிலம்மா.
காபி இருப்பதை பார்க்காமல் உள்ளே சென்றான் தண்ணீர் சொட்டும் முகத்தை துண்டினால் துடைத்தான். சட்டை பையில் இருந்து பணத்தை எடுத்து எண்ணினான். சட்டைபையில் மீண்டும் வைத்தான். கையில் சைக்கிள் சாவியை தேடி எடுத்து சட்டையைப் போட்டுக்கொண்டு கடைக்கு போறேன் கறி எடுக்க என சுவரைப் பார்த்தப்படி குயிலம்மா காதில் கூவிவிட்டு சென்றான்.
ஏலே நில்லு லே ஊத்தி வச்ச காபிய்ச் குடிச்சுட்டு போலே. என வீடு அதிர சினந்தால் குயிலம்மா.
"எங்க வச்ச நீ என் கையில குடுக்க வேண்டிதானே. இல்ல இங்க வச்சுருக்கேன் குடி சொல்லிட்டு போலாம்ல ஏதோ நாய்க்கு தண்ணி வைக்கிற மாதிரி வச்சுட்டு போயிருக்க நா அத கவனிக்கல. சரி எனக்கு இப்ப வேணாம் அது சூடு இல்லாம போயிருக்கும் "என குயிலம்மாக்கு மனசு சுடுற மாதிரி சொல்லிட்டு சட்டுன்னு சைக்கிளை தள்ளி எடுத்துக்கொண்டு கிளம்பினான் தர்மா.
சைக்கிள் கடகடவென சத்தம் போட்டுக்கோண்டே வேகமாய் சுழன்றது . தர்மா சைக்கிள் இருக்கையில் இருந்து மேல் எழும்பி எழும்பி அழுத்தி சைக்கிளின் வேகத்தை இன்னும் அதிகரித்தான். எதிர் வீசும் காற்றில் தர்மாவின் தலைமுடி பின்னோக்கி செல்ல தர்மாவின் ஏறுநெற்றி வெளிர் நிறத்துடன் பளிரென தெரிய சைக்கிள் கண்ணாடியில் தன் முகத்தை பார்த்துக்கொண்டும் தலையினை ஒரு கையால் கோதிக்கொண்டும் கல்லிடைக்குறிச்சி ஆத்துப் பாலத்தில் மீது தர்மாவின் சைக்கிளை ஏற்றினான் . பாலத்தின் அருகில் தொப்பு தொப்பு என்று சிறுவர்கள் இளைஞர்கள் நீச்சல் அடித்துக் குளிப்பதன் தோற்றம் தர்மாவின் கண்ணில் தென்பட்டது .
உடனே தர்மாவிற்கு காலையில் குயிலம்மா செய்த அர்ச்சனை நினைவிற்கு வந்தது. நம்ம அம்மா எண்ண வச்சு ஆத்துல குளிச்சுட்டு வர சொன்னாலே என நினைத்துக்கொண்டே கடந்தான். இரயில் நிலையம் அருகில் உஷ்மான் பாயி கறிக்கடைக்கு சென்றான்."ஒரு ஆட்டு இரத்தமும் அரைக்கிலோ கறியும் கொடுங்கண்ணே" என்றான். "இரத்தம் முடிஞ்சுப் போச்சே இன்னைக்கு இரத்தம் கிடைக்காதுப்பா லீவு நாளுலா." என்று பாயி கறிக் கொத்தியப்படி சொன்னார். சரிண்ணே அப்படினா கறி மட்டும் கொடுங்க சொன்னான். காத்திருந்து கறியை வாங்கிவிட்டு சைக்கிளை கிளப்பினான் வீட்டுக்கு. மீண்டும் அதே வேகத்தில் சைக்கிளை அழுத்தினான். அதே கல்லிடைக்குறிச்சி ஆத்துப்பாலம் , மீண்டும் அம்மாவிம் அதிகாலை அர்ச்சனை நியாபகம், நம்ம அம்மா குளிக்கபோக தானே சொன்னா நம்மளும் குளிக்க போயிருக்கலாம் என மனசுக்குள் பேசிய படி வீட்டுக்கு வந்து சேர்ந்தான். சைக்கிளை வேப்ப மரத்தில் சாய்த்தான் கறிப்பையினை எடுத்துவிட்டு வீட்டினுள் நுழைந்தான். குயிலம்மா கையி நல்லெண்ண கிண்ணத்தை வைத்தப்படி பின் வாசலில் அமர்ந்து இருந்தால்.
“ என்னம்மா கையில் என்ன ? என்று தெரியாதது போல் கேட்டான்.
“நா ஒரு கூறுகெட்ட பொம்பள காலையிலயே உன்ன நிதானமா எழுப்பி பாசமா சொல்லி தலையில எண்ண வச்சு குளிக்க போக சொல்லியிருக்கனும் நானும் ஒரு நிமிஷம் நிதானம் இல்லாம் கத்திட்டு ஒரு காப்பிய கூட உன்கிட்ட ஒழுங்கா கொடுக்கலை. நீயும் அத குடிக்காம போயிட்டயேன்னு மனசு பதச்சு போயிட்ட "என மூக்கை சீந்தினாள் குயிலம்மா. “ஏம்மா ஏம்மா இப்ப எதுக்கு பொலம்புற நானும் பாலத்து மேல போகும் போது நீ காலையில கத்துனத நினைச்சுட்டே தா போனேன் நம்ம பயலுவலாம் ஆத்துல ஆட்டம் போடுறது பாக்கும் போது நம்மளும் அம்மா சொன்ன மாதிரி தலையில இம்புட்டு எண்ண வச்சிட்டு வந்து குளிச்சுட்டு போகும் போது ஒரே அடியா கறியும் வாங்கிட்டு போயிருக்கலாம் என தோனுச்சு நானும் ஒரு நிமிஷத்துல கோபபட்டு மூஞ்ச தூக்கிட்டு போயிட்டேன்ம்மா" என குயிலம்மா அருகில் அமர்ந்து அவனது தலையை அவனே சொறிந்தான். பொதுவா ஒரு நிமிஷம் கோபத்தில முடிவுல நிறய விஷயத்த முடிவு பண்ணிறோம்லா. இன்னைக்கு நம்ம வீட்ல நம்ம ரெண்டு பேருக்கும் வந்த கோபம் சின்ன விசயமா போச்சு. இதுவே நிறைய பேரு அந்த ஒரு நிமிஷ கோபத்துல அந்த ஒரு நிமிசத்துல எடுக்கிற முடிவு பெரிய பிரச்சனையா பெரிய திருப்பம்மா மாறி வாழ்க்கையவே புறட்டி போடுதுலாம்மா என குயிலம்மாகிட்ட தத்துவமா பேசிட்டு இருந்தா தர்மா.
சுட்டித்தோழி சுபகலா.